Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் சரிவு! தலைமையாசிரியர்களுக்கு விரைவில் 'மெமோ'

          கோவை மாநகராட்சி பள்ளிகள், கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில், 91.82 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இந்தாண்டு, தேர்ச்சி சதவீதம் குறைந்து, 89.34 சதவீதம் பெற்றுள்ளது. தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ள பள்ளி தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

        கோவை மாநகராட்சியிலுள்ள, 16 மேல்நிலைப்பள்ளிகளில், 762 ஆண்கள் உட்பட, 2,307 பேர், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். அவர்களில், 616 ஆண்களும், 1,445 பெண்கள் என, 2,061 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்கள், 80.83 சதவீதமும், மாணவியர், 93.52 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநகராட்சி பள்ளிகள் கடந்தாண்டு, பிளஸ் 2 தேர்வில், 91.82 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன. இந்தாண்டு, தேர்ச்சி சதவீதம் சரிந்து, 89.34 சதவீதத்தை பெற்றுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும், கடந்த ஆண்டை விட இரண்டு சதவீதம் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

பீளமேடு, ஆர்.எஸ்.புரம் பெண்கள் மேற்கு, ஆர்.எஸ்.புரம் இருபாலர் மேற்கு, அரங்கநாதபுரம், ஒப்பணக்காரவீதி, வெங்கிட்டாபுரம் கமலநாதன் மேல்நிலைப்பள்ளிகளில், கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு, 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற, ஒக்கிலியர் காலனி மேல்நிலைப்பள்ளியில், 13 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. வடகோவை, உடையாம்பாளையம், ரத்தினபுரி, ராமநாதபுரம், செல்வபுரம், வெரைட்டிஹால் ரோடு சிட்டி மேல்நிலைப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் ஐந்து முதல் 10 சதவீதம் சரிந்துள்ளது.

* சரிவுக்கு காரணமென்ன?
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, ஒவ்வொரு மாணவருக்கும் முக்கிய வினாக்கள் அடங்கிய, வினாத்தாள் தொகுப்பு அனைத்து பாடத்துக்கும் வழங்கப்பட்டு வந்தது. கடந்தாண்டு வினாத்தாள் தொகுப்பு வழங்கப்படவில்லை.அதேபோன்று, மாலை நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தும் போது, மாணவர்களின் பசி மற்றும் சோர்வை போக்கும் வகையில் கடந்தாண்டு வழங்கப்பட்ட, மாலை நேர சிற்றுண்டி இந்தாண்டு நிறுத்தம் செய்யப்பட்டது.பள்ளி தலைமையாசிரியர்கள், முக்கிய பாட ஆசிரியர்கள் சரிவர வகுப்புக்கு வராததும், முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாலும் கல்வி போதிப்பதில் சொதப்பல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

மாநகராட்சி கல்வி அலுவலர் வசந்தா கூறியதாவது: மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி போதிக்கப்பட்டது. கல்வி ஆண்டு துவக்கத்தில் இருந்து, காலை 8:30 மணி முதல், 9:30 மணி வரையிலும், மாலை 6:00 மணி வரையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. கவனக்குறைவான மாணவர்கள், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறுபவர்கள் என, தனித்தனியாக சிறப்பு கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கப்பட்டது. மாநகராட்சி பள்ளிகளில், மாணவர்களை தயார்படுத்தி, பொதுத்தேர்வுக்கு அனுப்புவதில்லை. கடந்தாண்டை விட, தேர்ச்சி சதவீதம் கூடுதலாகும் என, எதிபார்த்திருந்தோம். ஆனால், தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஒருசில பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தும் உள்ளது. தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ள பள்ளி தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும். வரும் கல்வி ஆண்டில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு, மாநகராட்சி கல்வி அலுவலர் தெரிவித்தார்.

கைகொடுத்தது சிறப்பு கவனிப்பு!
தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தை பிடித்த, பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலுசாமி கூறுகையில், ''ஆசிரியர்கள் சிறப்பான முறையில் பயிற்சி அளித்தனர்; மாணவர்களும் ஆர்வத்துடன் இருந்தனர். பருவத்தேர்வு மட்டுமின்றி, மாதாந்திர தேர்வுகள் நடத்தி, மாணவர்களை ஊக்குவிக்க வகுப்புகளில் முதலிடம் பிடிப்போருக்கு பேனா, புத்தகம், டிக் ஷனரி போன்றவற்றை பரிசாக வழங்கினேன். இதனால், தேர்ச்சி சதவீதம் உயர்ந்தது'' என்றார்.

காலி இடங்களால் சிக்கல்!
கடந்தாண்டு, 'சென்டம்' தேர்ச்சி கொடுத்து, இந்தாண்டு 87.14 சதவீதம் பெற்ற, ஒக்கிலியர்காலனி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன் கூறுகையில், ''பள்ளியில் வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆசிரியர் பணியிடம் காலியாகவுள்ளது. பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நியமிக்கப்பட்டவர்கள் சரியாக பாடம் நடத்தாததால் தேர்ச்சி குறைந்துள்ளது. அறிவியல் பிரிவில் தேர்வு எழுதிய, 21 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். கலைப்பிரிவில் தேர்வு எழுதிய, 49 பேரில், 40 பேர் வெற்றி பெற்றனர். வணிகவியல், கணக்குப்பதிவியல் பாடங்களில் மட்டுமே ஒன்பது பேரும் தோல்வி அடைந்துள்ளனர்,'' என்றார்.

மாநகராட்சி பள்ளி தேர்ச்சி பட்டியலில் கடைசி இடம் பிடித்த, வெரைட்டிஹால்ரோடு சிட்டி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவி கூறுகையில், ''பத்தாம் வகுப்பில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்களே இந்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மாணவர்கள் வருகைப்பதிவு குறைந்து, ஆசிரியர்களின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் செயல்பட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், பள்ளிக்கு வரமாட்டார்கள். மேலும், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், புவியியல், தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளது. பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் ஆசிரியர்கள் நியமித்து, கல்வி போதித்தும் பலனில்லை,'' என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive