Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விளையாட்டு விஷயத்திலும் கவனம் செலுத்துமா பள்ளி கல்வித்துறை?

        கல்வி அறிவுபெற்ற சிறந்த மாணவர்களை உருவாக்க பள்ளி வகுப்பறைகள் உள்ளது போன்று, அந்த மாணவர்களை உடல் ரீதியாகவும்; உற்சாகமாகவும் இருக்க வைப்பது பள்ளிகளில் உள்ள மைதானங்கள்தான்.
      அறிவை வளர்க்க ஆசிரியர்கள் வகுப்பறைகளில் பாடங்கள் எடுத்தாலும்; சிறிதுநேரம் ஓடி ஆடி விளையாடினால்தான், அந்த மாணவர்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டே, பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்வியுடன் இணைந்த உடற்பயிற்சி கல்விக்கான தேர்வு, மற்ற தேர்வுகளை போன்றே நடத்தப்படுகிறது. ஆனால், இதன் முக்கியத்துவம்தான் யாருக்கும் தெரிவதில்லை. இதனால், இளைய தலைமுறையினர் படித்து நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என காட்டும் ஆர்வத்தினை உடலை உற்சாக வைத்திருக்கும் விளையாட்டில் காட்டுவது குறைவதுதான்.

மாணவர்களது விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்திட, உதவியாக உள்ள மைதானங்களின் தற்போதைய நிலையைத்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். அரசுப் பள்ளிகளில் உள்ள மைதானங்கள் பல பராமரிப்பின்றி, சிதிலமடைந்தும் சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி வருவது விளையாட்டு ஆர்வலர்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது.
அரசுப்பள்ளிகளில் சிலவற்றில், வகுப்பறைகள் கட்டடங்கள் கட்டுவதற்காக மைதானங்கள் மாயமாகி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. சில பள்ளிகளில் மைதானங்கள் போதிய பராமரிப்பின்றி முட் புதர்கள் வளர்ந்தும், விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியுள்ளது; சில இடங்களில் சமூக விரோதிகள் மது குடித்தல், கஞ்சா குடித்தல் போன்ற தகாத விஷயங்களை மேற்கொள்ளவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை யாரும் சரிசெய்ய முன்வராததால், மாணவர்கள் மைதானங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்திற்கு விடுமுறை நாட்களிலோ அல்லது இரவு நேரங்களிலோ செல்லும் சிலர், மது பானங்களை குடித்துவிட்டு பாட்டில்களை சுக்கு சுக்காக உடைத்தெறிவது வழக்கமாகியுள்ளது. இதனை கவனிக்காமல் விளையாடும் மாணவர்களின் கால்கள் பதம் பார்க்கப்படுவது மற்றொரு விஷயம்.
நகராட்சி சமத்தூர் ராம ஐயங்கார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் ஒரு பகுதி பாறைகளாக காட்சியளிக்கிறது. பாறைக்கற்கள் முறையாக அப்பறப்படுத்தப்படாமல் உள்ளதால், மாணவர்கள் விளையாடும்போது தவறி விழும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
மேலும், இப்பள்ளியின் மைதானத்தில் உள்ள மேடையும் சிதிலமடைந்து காணப்படுகிறது. ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி அரசுப்பள்ளியின் மைதானம் அருகேயுள்ள தடுப்புச்சுவர் உடைக்கப்பட்டு யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் உள்ளே செல்லும் நிலை காணப்படுகிறது.
இதுபோன்று நகரம் மற்றும் கிராமப்புறங்களில் காணப்படும் மைதானங்கள் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதனை புனரமைத்து, கல்வியோடு இணைந்த விளையாட்டினை மாணவர்கள் கற்க மைதானங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளையாட்டு திறமையை மேம்படுத்த பொள்ளாச்சி பகுதியில் ஸ்டேடியம் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்
அரசு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சியை காட்ட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும் கல்வித்துறை அதிகாரிகள், விளையாட்டு திறமை கொண்ட மாணவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது இல்லை. பெரும்பாலான பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானங்களே இல்லை. மைதானம் உள்ள பள்ளிகளில், அதை மேம்படுத்துதல் கால்பந்து, வாலிபால், பேட்மிட்டன் நெட், ஹாக்கி போன்ற உபகரணங்கள் போதுமான அளவு இல்லை.
இதனால், மாணவர்கள் தங்களுடைய விளையாட்டு திறனை வெளிப்படுத்தி, அவற்றை மென்மேலும் மேம்படுத்த முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால், மாணவர்களின் திறமை வீணடிக்கப்படுகிறது. மைதானம் மற்றும் உபகரணம் இல்லாமல் எப்படி மாணவர்களை தயார் செய்வது என விளையாட்டு ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
ஆனைமலை அருகே, சோமந்துரைசித்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், கைப்பந்து மைதானம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. விளையாட்டு உபகரணங்களும் சிதிலடைந்து காணப்படுகின்றது. அதேபோல், கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் சுற்றுச்சுவர் இன்றி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் குடிமகன்களின் மதுகுடிக்கும் இடமாக மாறி வருகிறது.
இருக்கு.... ஆனா... இல்லை
வால்பாறை தாலுகாவில் ஏழு அரசு மேல்நிலைப்பள்ளிகள், நான்கு உயர்நிலை பள்ளிகள் உட்பட மொத்தம் 93 பள்ளிகள் உள்ளன. இதில் பெரும்பாலான பள்ளிகள் அமைந்துள்ள இடம் குறுகலான இடத்தில் அமைந்துள்ளதால், பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லாத நிலை நீடித்து வருகிறது. சில பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத அளவுக்கு, மோசமான நிலையில் உள்ளது.
வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 1958ம் ஆண்டு கட்டப்பட்டது. இரண்டாயிரம் மாணவர்கள் படிக்கும் இந்தப்பள்ளியின், பின்புறம் விளையாட்டு மைதானம் உள்ளது. திறந்த வெளியில் இந்த மைதானம் அமைந்துள்ளதால், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அதிக அளவில் நடமாடுகின்றனர். விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானமே இல்லை. முடீஸ் அரசு மேல்நிலைப்பள்ளி வனப்பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு மாணவர்கள் விளையாட விளையாட்டு மைதானம் இருந்தும், பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிக்கிடப்பதால், விளையாட முடியாமல் பரிதவிக்கின்றனர்.
சின்கோனா அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னக்கல்லார் அரசு ஆதிதிராவிட நலப்பள்ளி, ஹைபாரஸ்ட் துவக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இருந்தும், அதை பயன்படுத்த முடியாத நிலையில் மாணவர்கள் பரிதவிக்கின்றனர். இதனால், மாணவர்களிடையே புதைந்து கிடக்கும் விளையாட்டு திறன் முடங்கி போகும் நிலை நீடித்து வருகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive