மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ள குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா, கல்வி
உரிமைச் சட்டத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என சமூக ஆர்வலர்கள் கவலை
தெரிவித்தனர். இதனால்,
குழந்தைகளின் வளர்ச்சியும், கல்வியும் பாதிக்கப்படுவதோடு பழைய நிலைக்கே
அவர்கள் தள்ளப்படும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
அதன்பிறகு "2009-இல் கல்வி உரிமைச் சட்டம் (குழந்தைகளின் சுதந்திரமான
கட்டாய கல்வி உரிமைச் சட்டம்) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, 6
வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டியது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வி உரிமைச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் தடுப்பு, ஒழுங்காற்றுச்
சட்டத்துக்கு மேலும் வலுவூட்டியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டி
வரவேற்றனர்.
இந்தச் சட்டங்களின் விளைவாக குடும்பச் சூழல் காரணமாக படிப்பை பாதியில்
நிறுத்திவிட்டு பல்வேறு வேலைக்குச் செல்லும் குழந்தைகளை தேசிய குழந்தைத்
தொழிலாளர் திட்ட அலுவலர்கள் மீட்டு, மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் சிறந்த
பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள்
பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்து, பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும்
உயர்வு பெற்று வருகின்றனர்.
அண்மையில் வெளியான
பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகளில், மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள்
சாதனை படைத்துள்ளனர். தேர்வில் பங்கேற்ற 597 பேரில் 579 பேர் தேர்ச்சி
பெற்றதோடு, 23 பேர் 1000-க்கு மேல் மதிப்பெண் பெற்று அசத்தினர்.
இதுபோல் இவர்கள்
தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வரும் நிலையில், குழந்தைத் தொழிலாளர் சட்டத்
திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது, மீண்டும்
அவர்களை குழந்தைத் தொழிலாளர் நிலைக்கே தள்ளிவிடும் அபாயம் உள்ளது என சமூக
ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
இதுகுறித்து யுனிசெஃப் முன்னாள் நிர்வாகியும், குழந்தைகள் நல ஆர்வலருமான வித்யாசாகர் கூறியது:
14 வயதுக்கு
உள்பட்ட சிறார்களை பள்ளி முடிந்த நேரங்களிலும், விடுமுறைக் காலங்களிலும்
தொலைக்காட்சி, திரைப்படத் தொழில்களிலும், குடும்ப நிறுவனங்களிலும் பணியில்
அமர்த்திக்கொள்வதை அனுமதிக்கும் வகையிலான சட்டத் திருத்த மசோதாவுக்கு
மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குழந்தைத் தொழிலாளர் தடுப்பு, ஒழுங்காற்றுச் சட்டத்தை மட்டுமன்றி,
கல்வி உரிமைச் சட்டத்தையும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியாகும்.
சிறார்கள் பள்ளி
முடித்து வீட்டுக்கு வந்த பின்னர் பள்ளியில் நடத்திய பாடங்களைத் திருப்பிப்
பார்ப்பது, விளையாட்டுகளில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட செயல்பாடுகளில்
ஈடுபட வேண்டும். அப்போதுதான் முழுமையான வளர்ச்சியை அவர்கள் பெற முடியும்.
மாறாக, பள்ளி முடித்து வந்த உடன் அவர்களை மீண்டும் வேலைக்கு அனுப்பினால்,
படிப்பின் மீதான ஆர்வம் குறையும் என்பதோடு அவர்களுடைய எண்ணமும் திசை
திரும்ப வாய்ப்பு உள்ளது.
சிவகாசியில் தீப்பெட்டி, பட்டாசு தயாரிப்புத் தொழில், சேலத்தில் கொலுசுப்
பட்டறை, மேலும் சில பகுதிகளில் பீடி சுற்றும் தொழில் ஆகியவைதான் குடிசைத்
தொழிலாகவும், குடும்பத் தொழிலாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றில்தான் சிறார்கள் அதிகம் பணியமர்த்தப்பட்டு வந்தனர்.
இப்போது, மத்திய
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள சட்டத் திருத்த மசோதா, மீண்டும் சிறார்களை
இந்தத் தொழில்களில் தள்ளும் என்பதோடு, அவர்களின் அடிப்படை கல்வி உரிமையும்
பறிக்கப்படும்.
ஊடகங்களில் குழந்தைகள்: மேலும், இந்த சட்டத் திருத்த மசோதா குழந்தைகளை
திரைப்படத் துறையிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஈடுபடுத்துவதை
மேலும் ஊக்குவிப்பதுபோல் அமைந்துள்ளது.
ஏற்கெனவே, தொலைக்காட்சி பாட்டுப் போட்டி, நடனப் போட்டிகளில் இரவு, பகல் என
பல மணி நேரங்கள் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், அவர்கள்
பெருமளவு சக்தியை இழக்கின்றனர் என்பதோடு, உடலளவிலும், மனதளவிலும் அவர்கள்
பாதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்று குழந்தைகளைப் பயன்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அல்லது
பிற நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்த இதுவரை இந்தியாவில் எந்தவொரு நடைமுறையும்
கொண்டுவரப்படவில்லை.
எனவே, இந்த மசோதா திரும்பப்பெறப்பட வேண்டும் என்பதோடு, குழந்தைகள்
பங்கேற்கும் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்த உரிய நடைமுறைகளும் வகுக்கப்பட
வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...