தமிழகத்தில் பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேர நிறைவு செய்த
விண்ணப்பத்தை அளிப்பதற்கு வெள்ளிக்கிழமை (மே 29) கடைசி நாளாகும். பி.இ.-
1.25 லட்சம் விண்ணப்பங்கள்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட
உறுப்புக் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர இதுவரை 1.25 லட்சம் பேர்
நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 6-ஆம் தேதி தொடங்கியது. சென்னை தவிர்த்த பிற மையங்களில் விநியோகம் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விற்பனை மையங்களில் வெள்ளிக்கிழமை (மே 29) வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 5 மணி வரை ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 785 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமையோடு கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், வியாழக்கிழமை மாலை வரை 1.25 லட்சம் பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்.பி.பி.எஸ்.- 24,115 விண்ணப்பங்கள்: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேர இதுவரை 24,115 பேர் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அனுப்பியுள்ளனர்.
விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமையோடு நிறைவடைந்தது.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35,667 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12-இல் தரவரிசைப் பட்டியல்? எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பில் சேர மாணவர்கள் சமர்ப்பித்துள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூன் 12-ஆம் தேதி தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.
மறு மதிப்பீடு- மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்களின் மதிப்பெண் சி.டி.யை தேர்வுத் துறை அளிப்பதைப் பொருத்து, தரவரிசைப் பட்டியல் வெளியாகும் தேதி தீர்மானிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...