தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு தடையற்ற சான்றிதழ் வழங்கக்கூடாது என்று தமிழக அரசிடம் மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் சார்பில்
பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபிதாவிடம் கொடுக்கப்பட்ட மனுவில்
கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப்பள்ளிகள் மற்றும்
சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் வெள்ளிவிழா மாநாடு சமீபத்தில்
நடைபெற்றது. அதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
25 சதவீத இடஒதுக்கீடு
கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில்
சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு இதுவரை தரவில்லை
என்பதால், அந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை
நடத்தமுடியாது என்று தீர்மானிக்கப்பட்டது.
இது பெற்றோர் மத்தியில் கட்டணம் பற்றிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த
இடஒதுக்கீட்டு விஷயத்தில் தனியார் பள்ளிகள் வெளிப்படையாக
நடந்துகொள்வதில்லை. இந்த இடஒதுக்கீட்டுக்கான பொது விண்ணப்பப்படிவங்கள்
அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய
வேண்டும். மேலும், மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இடஒதுக்கீடு
கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை அரசு மாவட்டம்தோறும் குழுக்கள் அமைத்து
கண்காணிக்க வேண்டும்.
மாணவர் நலன்
அங்கீகாரம் நிறுத்திவைக்கப்பட்ட பள்ளிகளுக்கு நிபந்தனையின்றி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேவை மனப்பான்மை அல்லாமல் வணிக நோக்கத்தில் நடத்தப்படும் பள்ளிகள், அரசு
நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றுவதில்லை. எனவே அவற்றுக்கு அங்கீகாரம்
வழங்கினால் மாணவர் நலன் பாதிக்கப்படும்.
கட்டாய தேர்ச்சி திட்டம்
8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்ய வேண்டுமென்று
அந்த சங்கத்தின் மாநாட்டில் தீர்மானித்தனர். பின் தங்கிய சமுதாயத்தினர்
இடைநிறுத்தத்தினால் பாதிக்கப்படாமல், குறைந்தபட்சம் 8-ம் வகுப்புவரையாவது
படிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கட்டாய தேர்ச்சி திட்டம்
கொண்டுவரப்பட்டது.
தீர்மானத்தின்படி இந்த திட்டத்தை நிறுத்தினால், நன்றாக படிக்கும்
குழந்தைகளை மட்டும் மேல்வகுப்புகளில் படிக்கச்செய்து, 100 சதவீத தேர்ச்சியை
காட்டி, கல்வி வணிகத்தை பெருக்கிக்கொள்வார்கள்.
சமச்சீர் கல்வி
ஆசிரியர்களை தேர்வு செய்துவிட்டு அவர்களை நியமனம் செய்வதற்கு முன்பு குறைந்தபட்சம் 6 மாதங்கள் உளவியல் பயிற்சி அளிக்க வேண்டும்.
சமச்சீர் கல்வி அமலான பிறகு, மெட்ரிக் பாடத்திட்டம் என்பதைக் காட்டி
கூடுதல் கட்டணத்தை தனியார் பள்ளிகளால் வசூலிக்க முடியவில்லை. எனவே
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு அவர்கள் மாறி வருகின்றனர்.
இதற்கு அரசு தடையில்லா சான்றிதழை வழங்கினால், தனியார் பள்ளிகளில் சமச்சீர்
பாடத்திட்டம் இல்லாமல் போய்விடும். எனவே சி.பி.எஸ்.சி. பள்ளிகள்
தொடங்குவதற்கு தடையற்ற சான்றிதழ் வழங்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...