நாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள்
இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு, நிகழாண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு
வரப்படுவதாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பண்டா
திங்கள்கிழமை கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்தியா முழுவதும் கல்வியியல் படிப்பு என்ற
பி.எட் படிப்பையும், முதுநிலை கல்வியியல் படிப்பான எம்.எட் படிப்பையும்
இரண்டாண்டு படிப்பாக மாற்றியமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்
கூறியதையடுத்து ஆசிரியர் கல்வி கவுன்சில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள்,
கல்வித்துறைச் செயலர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தது. அப்போது பி.எட்,
எம்.எட் படிப்புகளை இரண்டாண்டு கால அளவு கொண்டதாக மாற்றி
முடிவெடுக்கப்பட்டது. நாடு முழுவதும் இரண்டாண்டு பி.எட், எம்.எட் படிப்பு
நிகழ் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.
ஒரு சில மாநிலங்களில் நிகழாண்டு மட்டும்
பி.எட், எம்.எட் படிப்பு ஓராண்டாக இருக்கும் என்ற தவறான தகவல் பரவுகிறது.
அது உண்மையல்ல. அனைத்து மாநிலங்களிலும் நிகழாண்டு முதல் பி.எட், எம்.எட்
படிப்புக்கள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்படுகிறது. மேலும் ஒருங்கிணைந்த
(பி.எட், எம்.எட் படிப்பை சேர்த்து படிப்பவர்களுக்கு) 3 ஆண்டுகளாகவும்,
ஒருங்கிணைந்த பி.எஸ்.சி. பி.எட் அல்லது பி.ஏ. பி.எட் ஆகிய பட்டப்
படிப்புகள் நான்கு ஆண்டுகளாகவும் இருக்கும்.
மேலும் இரண்டு வருடம் படிக்கிற ஆசிரியர்
பயிற்சி படிப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே தனியார், அரசு கல்வியியல்
கல்லூரிகள் புதிய விதிகளுக்கேற்ப பேராசிரியர்களை நியமிப்பதுடன் தேவையான
உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். இக்
கருத்தரங்கில் ஆசிரியர் கல்வித் துறைப் பேராசிரியர்கள், கல்வியியல் கல்லூரி
முதல்வர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் உள்பட பலர்
பங்கேற்றுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...