Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தாய்த்தமிழ்ப் பள்ளியில் பணி செய்வது எனக்குப் பெருமை - க.பி.உதயலக்குமி

தாய்த்தமிழ்ப் பள்ளி

       ”தமிழுக்கும் அமுதென்று பேர்” அமுது என்றால் சாவா மருந்து. தமிழ் என்றும் அழிவதில்லை என்பது இதன் பொருள். ஆனால் இன்று தமிழகத்தில் இந்நிலை மாறி தமிழ்மொழி அழிந்துகொண்டிருக்கிறது. அப்படி அழிந்து கொண்டிருக்கின்ற தாய்மொழியாம் தமிழைக் காப்பாற்ற, வளர்க்க தொடங்கப்பட்ட பள்ளி தான் தாய்த்தமிழ்ப் பள்ளி. இப்பள்ளி இன்றளவும் தமிழின் இனிமையையும், செழுமையையும் மாறாமல் பாதுகாக்கின்றது.


திருப்பூர் வள்ளலார் நகர், தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வாடகை இடத்தில், ஓலைக்குடிசையில் வெள்ளியங்காடு பாரதியார் நகரில் 1995 ஆம் ஆண்டு சூன் 23 ஆம் நாள் தொடங்கப்பட்டது. தொடங்கிய ஆண்டில் சேர்ந்த குழந்தைகள் 25. ஆண்டு முடிவில் 40 குழந்தைகளாக உயர்ந்தது. படிப்படியாக குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்து 450ஐ எட்டியது. சொந்த இடமும் கட்டடமும் இல்லாத காரணத்தால் 2005 வரை ஏற்பிசைவு கிடைக்காமல் பல்வேறு இன்னல்களைக் கடந்து 2005ஆம் ஆண்டில்தான் ஏற்பிசைவைப் பெற்றோம். சொந்த இடம் வாங்குவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு மக்களின் உதவியால் வள்ளலார் நகரில் 2002 இல் இடம் வாங்கி, சிறுகச்சிறுக் கட்டடங்கள் கட்டி இன்று சொந்த இடத்தில் சொந்த கட்டடத்தில் 300 குழந்தைகளோடு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

இன்றைய விளம்பர உலகத்தில் நம் தாய்த்தமிழ்ப் பள்ளியின் செயல்பாடுகளை தாமாக முன்வந்து பல நாளிதழ்களும், வார இதழ்களும் செய்திகளாக வெளியிட்டு பள்ளி சிறப்புடன் நடத்த ஊக்கப்படுத்துகின்றன.

99ஆம் ஆண்டில் தினமணி வெளியிட்ட பொங்கல் மலரில் நம் பள்ளிக் குழந்தைகளின் படத்தை அட்டைப்படமாக வெளியிட்டு தாய்த்தமிழ்ப் பள்ளியால் ’மெல்லத் தமிழ் இனி’ வாழும் எனக் கட்டுரைத் தலைப்பிட்டு, நம் பள்ளியைப் பெருமைப்படுத்தியது. அத்தோடு தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் ’திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளி முதலிடம்’ என்கிற செய்தி எங்கள் களப்பணியை மேலும் முன்னெடுத்துச் செல்ல மிகப்பெரிய உந்து சக்தியாக அமைந்தது.
‘தமிழைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு’ என கல்கி வார இதழும் ’குடிசைத் தமிழ்’ என தினத்தந்தியும், ‘தவிக்கிறது தாய்த்தமிழ்ப் பள்ளி’ என தினமலரும், திண்ணை இணைய இதழில் வெளிவந்த கட்டுரையும் எங்களுக்கு மேலும் நம்பிக்கையூட்டுவதாக அமைந்தது.

மக்கள் விருது

இது மட்டுமல்ல செய்தித்தாள்களையும் தாண்டி நம் பள்ளிச்செய்திகள் தொலைக்காட்சி வரை எட்டியது. 2008-09 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்ப்பள்ளியாக நம் பள்ளியைத் தேர்வு செய்து, சிறந்த தமிழ்ப்பள்ளிக்கான ‘மக்கள் விருது’ வழங்கிச் சிறப்பித்தது மக்கள் தொலைக்காட்சி. இது எங்கள் உழைப்பிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகவே பார்க்கிறோம்.

தாய்த்தமிழ்ப் பள்ளியின் சிறப்பு

குழந்தைகள் எட்டு மணிக்கு வந்து, ஆசிரியர்கள் மணியடித்துக்கும் போது வரும் பழக்கத்தை உடைத்தெறிந்து, காலை எட்டு மணிக்கு ஆசிரியர்கள் வந்து கரும்பலகையில் குறளும் விளக்கமும் பொன்மொழிகளும் எழுதிப்போட்டு, வாயிலில் நின்று வருகிற குழந்தைகளை வணக்கம்… வெற்றி உறுதி என வணக்கம் சொல்லி அன்போடு வரவேற்கும் உயரிய பண்பை உருவாக்கி வைத்துள்ளோம்.

காலம் பொன் போன்றது என்பார்கள். ஆனால் எங்களுக்கு அது உயிர் போன்றது. ஆதலால் காலத்தின் பயனறிந்து நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்துகிறோம். நம் பள்ளியில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் காலத்தாழ்வு எப்போதும் கிடையாது.
இன்றைய நாகரீக உலகில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்திலும் GOOD MORNING, HI போன்ற ஆங்கில சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நம்பள்ளியிலோ ஆசிரியரும் மாணவரும் சந்திக்கும் முதல் சந்திப்பே வணக்கம்… வெற்றி உறுதி என்பதில் தான் தொடங்குகிறது. ஆம், நாங்கள் தமிழைக் காப்பதில் உறுதியாக வெற்றியடைவோம்.

தாம் வாழும் இடத்தைத் தூய்மைப்படுத்த முடியாதவனால் சமூகத்தை தூய்மைப்படுத்த முடியாது. பள்ளியின் தூய்மை செயல்பாடுகளில் பள்ளியைச் சேர்ந்த அனைவரும் பங்கு கொள்கிறோம். இதில் மாணவர்களின் பங்கு சிறப்பிற்குரியது.

ஆசிரியர் மாணவர் உறவு

பள்ளியில் அனைவரும் குடும்பமாக வாழ்கிறோம். ஆசிரியரை அக்கா என்றே குழந்தைகள் அழைக்கிறார்கள். இதனால் ஆசிரியர் மாணவர் உறவை மேலும் வலுப்பெறச்செய்து அச்சமற்ற சூழலை உருவாக்கியதோடு, அச்சமற்ற உரையாடலை உருவாக்கியிருக்கிறோம். தாயம்மாவை அத்தை என அன்போடும், காவலர்களை ஐயா எனவும் பாசத்தோடு குழந்தைகள் அழைக்கிறார்கள்.

தலைமைப் பண்பு, அச்சமின்மை இரண்டு பண்புகளையும் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்த வேண்டியது முதன்மையானது. காலை வணக்க வகுப்பில் ஒரு திங்களில் எல்லாக் குழந்தைகளும் மேடையேறும் வாய்ப்பைத் திட்டமிட்டு உருவாக்கி, குழந்தைகளின் மேடைக் கூச்சத்தை ஒழித்து, தலைமைப் பண்பை வளர்த்தெடுக்கிறோம். பள்ளியில், வெளியிடங்களில் நடந்த நிகழ்வைப் பற்றி அவர்களின் கருத்தைக் கூற காலை வணக்க வகுப்பை சரியாக திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்கிறோம்.
சான்றோர்கள் அல்லது நண்பர்கள் பள்ளிக்கு வரும்போது அவர்களோடு உரையாட வைத்து ஏன்? எப்படி? என அவர்களே கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்கிற முறையை வளர்த்தெடுக்கிறோம்.

வகுப்பறை

வகுப்பறையில் ஆசிரியரும் மாணவரும் உற்ற தோழர்களாய் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. குழந்தைகள் மகிழ்வுடன் இருக்க பாடத்திட்டத்தை திட்டமிட்டு உருவாக்கி வகுப்பறையை ஒரு கலைக்கூடமாக மாற்றி விடுகிறோம். நம் ஆசிரியர்கள் நல்ல நடிகராய், சிறந்த ஓவியராய், நடன கலைஞராய், பாடகராய் மாறி விடுகிறார்கள்.

பிறமொழி கலவா தனித்தமிழ் பயிற்சி கொடுத்து தமிழைத் தமிழாக பேசவைக்கிறோம்.

தற்போதைய நடைமுறை சூழலில் ஆங்கிலம் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. அதற்கேற்ப எங்கள் பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்க கூடுதல் கவனம் செலுத்தப் படுகிறது. இதற்காக 3,4,5 ஆம் வகுப்புகளுக்கு தனி ஆங்கிலம் – தமிழ் அகராதியே உருவாக்கியுள்ளோம்.

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களைக் காயப்படுத்தாமல் ஊக்கப்படுத்த எங்கள் ஆசிரியர்களுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், நாடகத்துறையினர், சமூக ஆர்வலர்கள் எனப் பல பயிற்சியாளர்களைக் கொண்டு எங்கள் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்துள்ளோம்.
எழுத்து வேறுபாடுகளை அறிந்து கொள்ள படவிளக்க ஒலிப்புப் பயிற்சிப் புத்தகம், மொட்டு மலர் வகுப்புகளுக்கு விளையாடிக் கற்போம் பாடப்புத்தகம், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை தமிழ், ஆங்கில எழுத்துப் பயிற்சி, மலர் வகுப்புக்கு பாடம் சார்ந்து ஒலி, ஒளி குறுந்தட்டு, மற்ற வகுப்புகளுக்கு பொதுவாக தமிழ், ஆங்கில குறுந்தட்டும் உருவாக்கி கற்றலை எளிமையாக்கியுள்ளோம்.
அறிவு வளர்ச்சிக்கு பயன்படும் தொன்மை மாறாத புதுமைக் கதைகளும் பாடல்களும் தேர்வு செய்யப்பட்டு நம் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுகிறது.

எழுத்துகள், சொற்கள், சொற்றொடர் அட்டைகள் என கற்பித்தலுக்கான கருவிகளை நாங்களே பாடத்திட்டத்திற்கேற்றவாறு உருவாக்கியுள்ளோம்.

ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு மட்டும் கணினி கற்றுத் தருகிறோம். வெறும் புத்தகப் பயிற்சியாக அல்லாமல் 12 கணினிகளைக் கொண்டு செய்முறைப் பயிற்சி கொடுத்து அடிப்படைக் கணினி அறிவைக் கற்றுத் தருகிறோம்.
3,4,5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு ஓகயிருக்கை (யோக) பயிற்சி கொடுத்து வருகிறோம்.

ஆணுக்குப் பெண் சமம் என்பதை உறுதிப்படுத்த பெயருக்கு முன்னால் அம்மா, அப்பா இருவரின் முன்னெழுத்தையும் சேர்த்து எழுதுகிற பண்பாட்டை உருவாக்கியுள்ளோம்.
எங்கள் குழந்தைகளுக்கு கைகட்டி, வாய்பொத்தி அமர்வது என்றால் என்னவென்றே தெரியாது. அப்படி வளர்ப்பதால்தான் ஆசிரியர்களோடு நெருங்கிப் பழகுகிறார்கள். ஏன்? எதற்கு? எப்படியென கேள்வி கேட்டுப் பழகியிருக்கிறார்கள்.
வெறும் புத்தகக் கல்வியோடு நில்லாமல் குழந்தைகளுக்கு கவிதை எழுதுதல், கட்டுரை எழுதுதல், பாக்கள் பாடுதல், ஓவியம் வரைதல், தமிழர் கலைகளும் (கரகம், ஒயில், தப்பாட்டம், சக்கைக்குச்சி ஆட்டம்) கற்பிக்கப்படுகிறது.

உணவுப் பழக்கம்

நம் பள்ளியில் ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து உண்ணும் பழக்கத்தால் ஆசிரியர் மாணவர் இடைவெளி கிடையாது. ஆசிரியரின் உணவை மாணவர்களும், மாணவர்களின் உணவை ஆசிரியரும் பகிர்ந்து உண்கின்றனர்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
என்பதற்கேற்ப பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை உருவாக்கியிருப்பதால், உணவு கொண்டு வராத குழந்தைகள் எள்ளளவும் கவலை கொள்ள மாட்டார்கள். என்னோடு வா, என்னோடு வா என போட்டிபோட்டு உணவைப் பகிர்ந்து உண்ணுகிற பண்பாட்டை உருவாக்கியுள்ளோம்.

பலமே பெற்றோர்கள்தான்

எங்கள் பள்ளியின் பலமே பெற்றோர்கள்தான். பெற்றோர், ஆசிரியர், நிர்வாக உறவை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, மாலை நேரத்தில் வகுப்பறையில் ஆசிரியர்களைச் சந்திக்கிற வாய்ப்பை உருவாக்கி தங்கள் குடும்ப உறுப்பினர் போல ஆசிரியர்களிடம் பெற்றோரைப் பழக வைத்திருக்கிறோம். பள்ளியின் நிதி நெருக்கடியால் ஏற்படும் சின்னச்சின்ன உடனடி நெருக்கடியைப் போக்க தங்களின் சிறிய சேமிப்புத் தொகையைக் கடனாய், கொடையாய் கொடுத்துதவிய பல பெற்றோர்கள் நன்றிக்குரியவர்கள்.
தாய்மொழியில் கல்வி கற்றால் தொழிற்கல்விக்கு செல்ல முடியாது எனச் சொல்வோரே ! எங்கள் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்த பல மாணவர்கள் பொறியாளர்களாய், மருத்துவராய், வழக்குரைஞராய், மனிதநேய சமூகப் போராளிகளாய் உருவாகியிருக்கிறார்கள்.

கல்விக்கொடை

’தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை’ என்பார்கள். ஆனால் இந்த வரிகள் இன்று பொய்த்துவிட்டன. தமிழுக்கு தொண்டு செய்யும் பல தாய்த்தமிழ்ப் பள்ளிகள் இன்று இல்லை. ஆங்காங்கே மிகுந்த போராட்டத்துடன் சில பள்ளிகள் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன.

மக்களிடம் கையேந்தி கல்விக்கொடை வாங்கி இடம் வாங்கிவிட்டோம். 400 சதுர அடியில் 10 அறைகள் கொண்ட 2 அடுக்கு கட்டடமும் 256 சதுர அடியில் 5 வகுப்பறைகள் கொண்ட ஓட்டுக் கட்டடமும் 100 சதுர அடியில் 2 அறைகளும் கட்டிவிட்டோம். ஆனால் ஓட்டுக் கட்டடங்களை தார்சு கட்டடங்களாக மாற்றச் சொல்கிறது அரசு.

தொடக்கப்பள்ளிக்கான இடம், கட்டடம் எனத் தேவைகளை முடித்தாலும் உயர்நிலைப் பள்ளி இலக்கை எட்டுவதற்கு இந்த இடம் போதாது. ஆகவே 5ஆம் வகுப்பைத் தாண்ட எங்களால் இயலவில்லை.

தற்போது நம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 300. 25 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என 13 ஆசிரியர்களோடு ஒரு அலுவலக உதவியாளர், ஒரு தாயம்மா, ஒரு காவலர், ஓட்டுநர் ஒருவரென மொத்தம் 18 பேர் பணியாற்றுகிறோம்.
அரசு, நம் பள்ளிக்கு நிர்ணயித்த கட்டணத்தைவிட மிகக் குறைவாகவே வாங்குகிற கட்டணத்தில் பள்ளி இயங்கினாலும் வரவுக்கும் செலவுக்கும் போதாத நிலையில் பல இலட்சம் கடனோடுதான் பயணத்தைத் தொடர்ந்து வருகிறோம்.
மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியில் பல தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தமிழ்வழிப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழ குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை எந்த நிலையிலும் ஏற்ற முடியாது. தமிழ்வழி கல்விக்கு குழந்தைகள் வருவதே பெரிது. இதில் கட்டணத்தை உயர்த்தினால் யார் வருவார்கள்? இந்தப் போராட்டத்தோடுதான் தொடர்ந்து பயணிக்கிறோம். இந்தக் கட்டணத்தையும் கட்டயியலாத 10 குழந்தைகளுக்கு நம் பள்ளி நண்பர்கள் சிலர் பணம் கட்டி வருகிறார்கள். ஓரிரு குழந்தைகளை இலவயமாகவும் படிக்க வைக்கிறோம்.

உயிரோட்டமான நம் பள்ளியை பொருளாதார அடிப்படையில் உயிர்ப்பிக்க உங்களின் உதவியை நாடுகிறோம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive