தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அனைத்து வகைப்
பாடங்களுக்கும் அக மதிப்பீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்
மாநிலத் தலைவர் ஆ.இரா.பாலகிருஷ்ணன் கூறினார்.
செங்குன்றத்தில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் அவர் மேலும் பேசியதாவது:
மேல்நிலை கல்விக்கென தனி இயக்குநரகம் அமைக்க
வேண்டும். பணியில் இளையவர், பணியில் மூத்தவர்களுக்கு உயர் அலுவலராகப் பதவி
உயர்வு பெறும் அரசு ஆணை 720-ஐ மாறுதல் செய்ய வேண்டும். 2003-க்குப்
பின்னர் பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பொது சேம நல நிதி
வழியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை உடனே
கைவிட வேண்டும்.
2004-06க்கு இடைப்பட்ட காலத்தில் பணி
நியமனம் பெற்ற அனைத்து வகை ஆசிரியர்களை பணி வரைமுறை செய்து, பணியில்
சேர்ந்த நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு பள்ளிகளில்
உள்ளது போன்றே 9, 10ஆம் வகுப்புகளுக்கும் முதுகலை ஆசிரியர்களையே பாட
ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
விடைத்தாள் திருத்தும் முகாமிலும் உழைப்பு
ஊதியங்களை உயர்த்தி வழங்க வேண்டும். ஆசிரியர்கள் பாதுகாப்புச் சட்டத்தை
உடனே நிறைவேற்ற வேண்டும். பணியிட மாறுதல் திட்டத்தில் காலிப் பணியிடங்களை
முழுமையாக வெளியிட்டு உண்மைத் தன்மையோடு கலந்தாய்வை நடத்த வேண்டும். தரம்
உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலை மே மாத இறுதிக்குள் வெளியிட்டு ஆசிரியர்
நியமனம், மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த வேண்டும். உயர் கல்வித்
தகுதிக்கு இரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்
இந்தக் கோரிக்கைகளை மே மாதத்துக்குள் நிறைவேற்றாதபட்சத்தில், ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார்.
கூட்டத்தில் அமைப்பின் கௌரவ ஆலோசகர்
அ.விஜயகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் குருமூர்த்தி, மாநில
பொதுச் செயலர் இளங்கோவன், மாநிலப் பொருளாளர் நாகராஜன், அமைப்புச் செயலர்
சற்குணராஜ், தலைமை நிலையச் செயலர் ஷாகுல் அமீது, மாநிலப் பிரசாரச் செயலர்
ராஜேந்திரன், தனியார் பள்ளிப் பிரிவுச் செயலர் வாலன்றீன் இளங்கோ, செய்தித்
தொடர்பாளர் ஷாஜகான், மகளிரணிச் செயலர் சண்முகவள்ளி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...