'இரண்டு ஆண்டு, பி.எட்., படிப்பை, வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தாத
நிறுவனங்களின் அனுமதி தானாக ரத்தாகும்' என, தேசிய ஆசிரியர் கல்வி யியல்
பயிற்சி கவுன்சில் (என்.சி.டி.இ.,) எச்சரித்து உள்ளது. தமிழக அரசு,
இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்காததால், கல்வி நிறுவனங்கள் குழப்பம்
அடைந்துள்ளன.
தமிழகத்தில், 589 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், ஓராண்டு பி.எட்.,
மற்றும் எம்.எட்., படிப்பு கள் உள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, நாடு
முழுவதும் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை,
என்.சி.டி.இ., 2014ல் வெளியிட்டது.
அதில், பி.எட்., - எம்.எட்., படிப்பு காலம், 2015 - 16ம் கல்விஆண்டு முதல்,
இரண்டு ஆண்டு களாக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. புதிய விதிகளின் படி,
பி.எட்., படிப்பில், தகவல் தொழில்நுட்ப கல்வி, யோகா, பாலின கல்வி,
மாற்றுத்திறன் - ஒருங்கிணைப்பு கல்வி போன்றவை கட்டாயமாக்கப்பட்டு உள்ளன.
இதேபோல், பி.எட்., பட்டப்படிப்பு 'தியரி, ப்ராக்டிக்கல்' மற்றும்
'இன்டர்ன்ஷிப்' (நேரடி களப்பயிற்சி) என, பிரிக்கப்பட்டுள்ளன.
இப்பாடத் திட்டத்துக்கு ஏற்ப, புதிய கட்டடங்கள், ஆய்வகம், கூடுதல்
ஓராண்டுக்கான கூடுதல் வகுப்பறைகள், புதிய பாடத்துக்கான கூடுதல் ஆசிரியர்கள்
உள்ளிட்ட ஏற்பாடுகளை கல்லுாரிகள் செய்ய வேண்டும். ஆனால், புதிய
விதிமுறைகளுக்கு எதிராக, தமிழக தனியார், பி.எட்., கல்லுாரிகள், சென்னை
ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அனைத்து, பி.எட்., -
எம்.எட்., கல்லுாரிகளுக்கும், என்.சி.டி.இ., சார்பில் சுற்றறிக்கை
அனுப்பப்பட்டுள்ளது. அதில், புதிய விதிமுறைப்படி, 2015 - 16ம்
கல்வியாண்டில், பி.எட்., - எம்.எட்., படிப்பு காலம், இரண்டு ஆண்டுகளாகும்.
மேலும், மாணவர்கள் எண்ணிக்கையை, நிபந்தனைக்கு ஏற்ப நிர்ணயம் செய்ய வேண்டும்
என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால், கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் தானாகவே ரத்தாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகம்
அதேநேரம், இரண்டு ஆண்டு, பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான
பாடத்திட்டத்தை, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை தயாரித்து, அரசின்
அனுமதிக்கு அனுப்பியுள்ளது. ஆனால், அரசின் சார்பில் புதிய
பாடத்திட்டத்துக்கு அனுமதி வழங்கவோ, வழக்கை முடிவுக்கு கொண்டு வரவோ
நடவடிக்கை எடுக்காததால், வரும் ஜூன் முதல், மாணவர் சேர்க்கை நடக்குமா என்ற
சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள் குழப்பமடைந்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...