கட்டண உயர்வு, 'ஆன்லைன்' பயன்பாடு போன்ற காரணங்களால், வங்கி,
ஏ.டி.எம்.,களின் பயன்பாடு கணிசமாக குறைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட முறை தான் பணம் எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு, ஏ.டி.எம்.,
இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆன்லைன் பயன்பாடு போன்ற பல
காரணங்களால், ஏ.டி.எம்.,களின் பயன்பாடு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து
பணம் எடுக்க வேண்டுமானால் வங்கிகளின் தயவையே நாட வேண்டி இருந்தது. அதேபோல்,
தங்கள் கணக்கில் உள்ள இருப்பு நிலையை அறியவும் வங்கிகளுக்கு சென்று,
மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது.
அறிமுகம்:
இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், 'ஆட்டோமேடட் டெல்லர் மிஷின்'
என்ற, ஏ.டி.எம்., தானியங்கி பணம் வழங்கும் இயந்திர மையங்கள் நம் நாட்டில்,
சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகின. இது, வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும்
வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. துவக்கத்தில் ஒரு சில
இடங்களில் மட்டுமே அமைக்கப்பட்டிருந்த இந்த மையங்கள், தற்போது, பரவலாக
அனைத்து இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நாடு முழுவதும், 1.76
லட்சத்துக்கும் அதிகமான ஏ.டி.எம்.,கள், பல்வேறு வங்கிகள் சார்பில்
அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களில் பணம் எடுக்க, பணம் செலுத்த, பிற
வங்கி சேவைகளை பெற, வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, 'டெபிட்
கார்டு'களையும் வழங்கியுள்ளன. இவ்வாறு, நாடு முழுவதும், 50 கோடி டெபிட்
கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், ஏ.டி.எம்., மற்றும் டெபிட் கார்டுகளின்
எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், ஏ.டி.எம்., சேவையின் பயன்பாடு கணிசமாக
குறைந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, ஏ.டி.எம்., தொழில் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில்
குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏ.டி.எம்., பயன்பாடு
கணிசமாக குறைந்துள்ளது. 2012ல், ஒரு லட்சத்துக்கும் சற்று அதிகமான,
ஏ.டி.எம்.,கள் தான் இருந்தன. தற்போது, கூடுதலாக, 76,000 ஏ.டி.எம்.,கள்
செயல்பட்டு வருகின்றன. அதேபோல், 2012ல், 30 கோடி டெபிட் கார்டுகள்
புழக்கத்தில் இருந்தன. தற்போது, மேலும், 20 கோடி கார்டுகள்
வழங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் வசதி கருதி, நகர்ப்புறங்களிலும்,
முக்கியமான நெடுஞ்சாலைகளிலும், ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால்,
இந்த இரண்டு ஆண்டுகளில், ஏ.டி.எம்.,கள் அதிகரித்த அளவுக்கு, அவற்றின்
பயன்பாடு அதிகரிக்கவில்லை; மாறாக குறைந்துள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில்,
ஏ.டி.எம்., பயன்பாடு, 21 சதவீதம் குறைந்துள்ளது. 2012ல், ஒவ்வொரு
ஏ.டி.எம்.,களிலும் சராசரியாக, 137 பணப் பரிமாற்றங்கள் நடந்தன; தற்போது, 108
பரிமாற்றங்கள் தான் நடக்கின்றன. இதே நிலை நீடித்தால், குறைவான பயன்பாடுள்ள
ஏ.டி.எம்.,களை இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும்.
காரணம் என்ன?
சமீபகாலமாக, ஆன்லைன் மூலம் பொருட்கள், சேவைகள் பெறுவது அதிகரித்து
வருகிறது. பொருட்கள் வாங்குவது, பணப் பரிமாற்றம், இருப்பு நிலை அறிவது
போன்ற நடவடிக்கைகள் அனைத்தையும், தற்போது, ஆன்லைன் மூலமாகவே பலரும்
மேற்கொள்கின்றனர். தற்போது, 'ஸ்மார்ட் போன்' பயன்பாடு அதிகரித்துள்ளதை
அடுத்து, அதன் மூலமாகவே, பணப் பரிமாற்றங்களை பெரும்பாலானோர்
மேற்கொள்கின்றனர். அடுத்ததாக, ஏ.டி.எம்., சேவையை பயன்படுத்துவதற்கான
கட்டணமும், கடந்தாண்டு நவம்பர் முதல், கணிசமாக உயர்த்தப்பட்டது. இது,
வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், முக்கியமான
இடங்களில் அளவுக்கு அதிகமான ஏ.டி.எம்.,கள் செயல்படுவதும், அவற்றின்
பயன்பாட்டை கணிசமாக குறைத்துவிட்டன. குறிப்பிட்ட சில ஏ.டி.எம்.,களை மட்டுமே
வாடிக்கையாளர்கள் தங்கள் பணப் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தும் நிலையும்
உள்ளது. இதுபோன்ற காரணங்களால் ஏ.டி.எம்., பயன்பாடு கணிசமாக
குறைந்துவிட்டது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஏ.டி.எம்., பராமரிப்பு பணிகள் அதிகரித்துள்ளதால், அவற்றிலிருந்து பணம்
எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்தும்படி, அனைத்து வங்கிகளும் வலியுறுத்தி
வந்தன.
* இதையடுத்து, கடந்தாண்டு நவம்பர் முதல், ஏ.டி.எம்., சேவைக்கான கட்டணத்தை உயர்த்த, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.
* இதன்படி, வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கு உள்ள வங்கி களுக்கு சொந்தமான,
ஏ.டி.எம்.,களில், மாதத்துக்கு ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு
முறையும், 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
* கணக்கு இல்லாத பிற வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம்.,களில், மூன்று முறை
மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும் என்ற நிலையும் உருவானது.
* மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், 20 ரூபாய்
கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. பெரு நகரங்களில் இந்த நடைமுறை அமலுக்கு
உள்ளது.
* இது, வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதால், பலரும், 'ஆன்லைன்' மூலம் பணப் பரிமாற்ற நடைமுறைக்கு மாறினர்.
* மொபைல் போன் மூலமாகவே, பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதியும் சில தொலை
தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...