Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மதிப்பெண்தான் வாழ்க்கையா? -எதற்கும் தயாராக்கும் யதார்த்த டிப்ஸ்!

          தேர்வு நெருங்கும் சமயம் மாணவர்களுக்குத்தான் பதற்றம். அதே தேர்வு தேர்வு முடிவுகள் நெருங்கும் சமயம் பெற்றோருக்கு வருகிறது அதனினும் பெரிய  பதற்றம். எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை என்றால் அது இளம் மனங்களை எவ்வளவு பாதிக்கிறது. விரக்தி, கோபம், சோகம் தவறான முடிவுகள் அப்பப்பா  இதிலிருந்து இளந்தளிர்களை விடுவிக்க வழி சொல்கிறார் ‘மைண்ட் ஃப்ரஷ்’ பயிற்சி நிறுவனத்தின் சி.இ.ஓ கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி. 
          பதின் பருவத்தில் வரக்கூடிய அழுத்தம் நிறைந்த காலம் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்காலம்தான். வருடா வருடம் செய்தித்தாளில்  பார்க்கிறோம். இந்தத் தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைவதாலும் தோல்வியடைவதாலும் தவறான முடிவுகள் எடுக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களை பற்றி  கொஞ்சம் சிந்தித்தால் இது எவ்வளவு பெரிய அபத்தம் என்பது புரியும். மதிப்பெண்தான் உலகம், மதிப்பெண்தான் வாழ்வின் லட்சியம் என நாம் உருவாக்கி  வைத்திருக்கும் செயற்கையான அழுத்ததால் வரும் எதிர் விளைவு இது. 

ஒவ்வொரு மனிதரும் வாழ்வில் எத்தனை வருடங்கள் எத்தனை விதமான வாழ்க்கைப் பரிட்சைகளை சந்திக்கிறார்கள். இந்தப் பரீட்சைதானா எல்லாம்? ஒரு  தேர்வு முடிவாக பேப்பரில் வராமல் போகும் வெறும் எண்களுக்காக இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டுமா என்ன? உண்மையிலேயே பன்னிரண்டாம்  வகுப்புதான் வாழ்க்கையின் முடிவா? இல்லவே இல்லை என்பது கொஞ்சம் யோசித்தால் புரியும். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு நம் வாழ்வின் முடிவல்ல...  தொடக்கம்தான். எத்தனையோ பெரிய தொழிலதிபர்கள் பத்தாம் வகுப்பு கூட படிக்காதவர்கள் பல்லாயிரம் பேருக்கு வேலை கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்.  சுமாராக படித்தவர்கள் நல்ல நிலைமைக்கு முன்னேறி பெரிய அளவில் வாழ்வில் வெற்றியடைந்திருக்கிறார்கள். மெத்தப் படித்தவர்கள் எத்தனையோ பேர்  வாழ்க்கையை வாழத் தெரியாமல் அடிமட்டத்திலேயே கிடக்கிறார்கள். 

நம் வாழ்க்கை எத்தனையோ சாதனைகளைச் செய்வதற்காக துவங்கியிருக்கிறது. பள்ளித் தேர்வின் மதிப்பெண் குறைவுக்காக அதை முடித்துக்கொள்ள  நினைப்பவர்களை முட்டாள்கள், மனவலிமை இல்லாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது போன்ற எண்ணம் தலை தூக்கவே விடக்கூடாது.  ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பார்கள். இந்த சிறிய அளவிலான தோல்வியைக் கூட தாங்கிக்கொள்ள முடியாமல் தேவையில்லாத  கற்பனைகளை வளர்த்து மனவலிமையை இழந்துவிடக் கூடாது. இச்சமயம் நமக்கு நாமே சில கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும். 

‘இப்போது நான் என்ன செய்தால் என் நிலையை மாற்றிக்கொள்ள முடியும்?’ ‘எப்படி இந்த நிலையைக் கடக்கலாம்?’ இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு அதற்கு  விடை தேட வேண்டும். அதை விட்டுவிட்டு, ‘நான் ஏன் இப்படி இருக்கிறேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?’ என்று தவறான கேள்விகளை  எழுப்பினால், தவறான பதில்களும் தவறான முடிவு களும்தான் கிடைக்கும். ஒரு சின்னக் கதை...ஓடிக்கொண்டிருக்கும் கங்கை ஆற்றில் ஒரு பெண் பூஜை செய்து  அகல் விளக்கேற்றி ஆற்றில் மிதக்கவிட்டு அனுப்புகிறார். நதி அதைச் சுமந்து செல்கிறது. வழியில் ஆற்றின் கரையோரம் ஒரு மனிதர் அசுத்தம்  செய்துகொண்டிருப்பார். அவர் அசுத்தம் செய்கிறார் என்பதற்காக அந்த ஆறு அங்கு தேங்கி நிற்காது. 

அதையும் கடந்து அந்த அகல் விளக்கை சுமந்து செல்லும். அப்படித்தான் நம் வாழ்க்கையும். அது எந்நேரமும் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதை உணர்ந்து  அதற்கு ஏற்ப நாம் நம் பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும். நேரமும் வாழ்க்கையும் அதன் போக்கில் போகிறபோது அதோடு சேர்ந்து ஓடுபவன் புத்திசாலி.  தோல்வியைக் கண்டு தேங்கிப்போகிறவன் முட்டாள். நன்றாக படித்து, நன்றாக தேர்வு எழுதியவர்கள் சிலருக்கே கூட, அதற்கு ஏற்ற மதிப்பெண்கள் கிடைக்காமல்  போயிருக்கிறது. இதற்கு யாரைக் குறை சொல்ல முடியும். முயற்சி செய்யாதிருந்தால்தான் அது நம் குற்றம். செய்ததற்கு பயன் இல்லை என்றால் அது  காலத்தின் குற்றம். காலம் அதற்கு ஒரு நாள் பதில் சொல்லும். நாம் விட்டதை எல்லாம் திருப்பிக் கொடுக்கும். அதைப் பெற்றுக்கொள்ள நாம் இருக்க வேண்டும்.  அதுதான் முக்கியம். 

நிதர்சனத்தில், கிட்டத்தட்ட எல்லா படிப்புகளுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க மதிப்பெண்களை முதல் காரணியாக வைக்கிறார்கள். அதற்காக, மதிப்பெண்  குறைவாக எடுத்தால், தான் விரும்பிய படிப்பு படிக்க முடியாமல் போகலாம். இது போன்ற காரணங்களுக்காகத்தான் சிலர் மனமுடைந்து போகிறார்கள். இந்த  நிலையைத் தவிர்க்க, தேர்வு முடிவு வரும் முன்பே பலதரப்பட்ட படிப்புகளையும் ஆராய்ந்து ஒன்றன் பின் ஒன்றாக சில படிப்புகளைத் தேர்ந்தெடுத்து  வைத்துக்கொள்ளச் சொல்கிறார்கள் உளவியலாளர்கள். 

அது கிடைக்காவிட்டால் இது... இது இல்லாவிட்டால் இன்னொன்று. எல்லா மதிப்பெண்ணுக்கும் ஒரு மேற்படிப்பு உண்டு... எல்லா மேற்படிப்புக்கும் ஒரு  எதிர்காலம் உண்டு என்கிறபோது எதற்காக விரக்தி?இப்போதெல்லாம் மூன்றே மாதத்தில் விட்டுப்போன பாடங்களை மீண்டும் எழுதி தேர்ச்சி பெற்றுவிட  முடியும். அந்த மன உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்களைப் பொறுத்தவரை பிள்ளைகளுக்கு, ‘போனால் போகுது பார்த்துக்கொள்ளலாம்’  என்றும் சொல்லக்கூடாது. ‘ஏன்டா இப்படி பண்ணிட்டே?’ என்று விமர்சனமும் செய்யக் கூடாது. ‘நடந்தது நடந்து விட்டது கவலைப்படாதே’ என்று ஒரேயடியாக  அறிவுரை சொல்லக்கூடாது. முதலில் பிள்ளைகள் சொல்வதை காது கொடுத்துக் கேட்க வேண்டும். அதே சமயம் அவர்கள் எந்த இடத்தில் தவறிழைத்தார்கள்  என்பதையும் புரியவைக்க வேண்டும். தொடர் முயற்சியும் மன உறுதியும் இருந்தால் தோல்விகளை வெற்றிப்படிகளாக்க முடியும். இதை மாணவர்கள் -  பெற்றோர் இருதரப்பும் உணரவேண்டும்!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive