அபராதம்... சிறை... லைசென்ஸ் பறிப்பு...வாகன முடக்கம்...
ஒவ்வொரு 4 நிமிடத்துக்கும் ஒரு இந்தியர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார். தினமும் சுமார் 360 பேர். கடந்த 10 ஆண்டுகளில் 46 லட்சம் பேர் சாலை விபத்துகளில் படுகாயமடைந்து தங்கள் வாழ்வைத் தொலைத்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே ஒரு மத்திய அமைச்சரை சாலை விபத்துக்கு பலி கொடுத்தது நரேந்திர மோடி அரசு. ‘‘விபத்துகளைத் தடுக்க புதிய சட்டம் வரும்’’ என அப்போதே சொன்னார் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி.
அந்தப் புதிய சட்டத்துக்கு எதிராகத்தான் இப்போது பந்த் நடந்து முடிந்திருக்கிறது. பெரும் மனிதப் பேரழிவை உருவாக்கும் விபத்துகளைத் தடுக்க வேண்டுமென்றால், வழக்கம்போலவே ‘மோட்டார் வாகனத் தொழிலை பெருமுதலாளிகள் கையில் கொடுத்து விடலாம்’ என்கிறது மத்திய அரசு. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போல விதிமீறல்களுக்கு அதிகபட்ச அபராதங்கள், விசித்திரமான ஷரத்துகள் அடங்கிய ‘சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்டம் -2015’ பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும், அரபு நாடுகளிலும் சாலை விபத்துகள் குறைவு. காரணம், அங்கிருக்கும் சட்டங்கள் மட்டுமல்ல; கட்டமைப்புகளும்தான். ஒருவர் சிக்னலை மீறிவிட்டால் அடுத்த மூன்று நிமிடத்தில், ‘நீ குற்றம் செய்திருக்கிறாய்... இவ்வளவு அபராதம்’ என்று அவருடைய மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் போய்விடும்.
அந்த அளவுக்கு சக்திவாய்ந்த கேமராக்கள், தொழில்நுட்பங்கள் உண்டு. இங்கே இன்னும் போலீசின் கரங்களை நம்பித்தான் சிக்னல்கள் இயங்குகின்றன. ‘கோர்ட்டுக்குப் போனா 500, இங்கேயே முடிச்சுக்கிட்டா 200’ என்று கீழே கைநீட்டும் கலாசாரம்தான் இன்னமும் தொடர்கிறது. இருக்கும் சட்டம் முறையாக அமலானாலே பாதி பிரச்னைகள் தீரும். அதற்கே வழியில்லாத சூழலில் புதிய சட்டம்!
‘‘இது மோட்டார் வாகனத் தொழிலில் இருக்கும் சிறு உரிமையாளர்களை விரட்டிவிட்டு பெரு முதலாளிகளை வளமாக்கத்தான் உதவும்’’ என்கிறார் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார்.‘‘உலகிலேயே அதிக சாலை விபத்துகள் நடப்பது இந்தியாவில்தான். விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் வளர்ந்த நாடுகளின் சட்டத்தை இங்கே புகுத்தக்கூடாது. இங்கே பல பகுதிகளில் நல்ல சாலையே இல்லை. இந்த சட்டம் வந்தால் மாநில அரசுகள் போக்குவரத்துக் கழகங்களைக் கூட நடத்த முடியாது என்கிறார்கள்.
டோல்கேட்டுக்கு இருக்கும் அதிகாரம் கூட அரசுக்கு இருக்காது. ஒன்றிரண்டு வாகனங்கள் வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் இனி பிழைக்க முடியாது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களே நிலைக்கும். இப்போதுள்ள வாகனங்களில் பெரும்பாலும் OE (ஒரிஜினல் ஈக்வலன்ட்) எனப்படும் ஒரிஜினலுக்கு இணையான பாகங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதைக் குற்றம் என்கிறது சட்டம். இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமே இல்லை’’ என்கிறார் ஆறுமுக நயினார்.‘இந்தச் சட்டத்தின் மூலம் விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கலாம்’ என்கிறார் அமைச்சர் நிதின் கட்கரி.
‘15 ஆண்டுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு தடை விதிப்பதால் வாகன உற்பத்தி அதிகரிக்கும். அதன்மூலம் 4% உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். மேலும் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்’ என்கிறார் அவர். டிரைவர்கள், சிறு முதலாளிகள், மெக்கானிக்குகள் என பல லட்சம் பேரின் வாழ்வாதாரம் பறிபோவதைப் பற்றி அமைச்சருக்குக் கவலையில்லை.
‘‘வசதிகளை மேம்படுத்தாமல் மக்கள் தலையில் அபராதத்தை சுமத்துவது மிகப்பெரும் அபத்தம். 15 வருடத்துக்கு முந்தைய வாகனங்களை ஓட்டக்கூடாது என்கிறார்கள். இந்தியாவில் ஓடும் 15 கோடி லாரிகளில் 20 சதவீதம், 15 வருடங்களுக்கு முற்பட்டதுதான். நடைமுறை புரிதலே இல்லாமல் கனவுலகில் அமர்ந்துகொண்டு இந்த சட்டத்தை வடிவமைத்திருக்கிறார்கள்...” என்று வருந்துகிறார் இந்திய டிரான்ஸ்போர்ட் காங்கிரஸின் தென்மண்டலத் தலைவர் கே.ஆர்.ஆறுமுகம்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், சாலை விதிகளை மீறுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு தற்போது இருப்பதை விட பலமடங்கு கூடுதல் அபராதத்தை விதிக்கிறது இந்த சட்டம். சிறை, லைசென்ஸ் ரத்து, வாகன முடக்கமும் உண்டு. லைசென்ஸ் வழங்கும் முறையும் கடினமாகிறது. இதைப் பலர் வரவேற்கவே செய்கிறார்கள். ஆனால் அவர்களும் இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
‘‘விபத்துகளைக் குறைத்து, அப்பாவிகளின் உயிரைக் காக்கவேண்டியது அரசின் கடமை. அந்த நோக்கில்தான் இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வாகனமும் ஒரு கில்லிங் மெஷின். அதை இயக்க முறையான பயிற்சி தேவை. தற்போதிருக்கும் பயிற்சி போதுமானதாக இல்லை. இந்தச் சூழலில் இப்படியான சட்டம் தேவைதான்.
ஆனால், தற்போதிருக்கும் நிர்வாகச் சூழலில் இந்தியாவுக்கு இது பொருந்தாது என்பதே யதார்த்தம். மேலும் இது ஊழலுக்கு வழி வகுக்கும். தற்போது சாலை விதிகளை மீறிய குற்றத்துக்காக பிடிக்கப்படுபவர்களில் பாதிப் பேர் மீதுகூட வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை. பேரத்திலேயே முடித்து விடுகிறார்கள். அபராதம் கூடுதலாகும்போது லஞ்சமும் கூடுதலாகும். நடைமுறையில் இருக்கிற குறைபாடுகளைத் தீர்த்துவிட்டே இப்படியொரு சட்டத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்’’ என்கிறார், சட்டம் மற்றும் மேலாண்மை நிபுணர் ஷங்கர் கிருஷ்ணமுர்த்தி.www.ednnet.in
கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தொடர்பு அலுவலர் சோமசுந்தரமும் ஷங்கரின் கருத்தைத்தான் எதிரொலிக்கிறார். ‘‘பர்மிட் இல்லாமல் ஏராளமான வாகனங்கள் நம் தெருக்களில் ஓடுகின்றன. லைெசன்ஸே இல்லாமல் நிறைய பேர் வாகனங்களை ஓட்டுகிறார்கள். வெளிநாடுகளில் ஏகப்பட்ட பயிற்சிகள், தேர்வுமுறைகள் வைத்திருக்கிறார்கள். இங்கே ‘ஸ்டியரிங் கன்ட்ரோல்’ வந்தாலே லைெசன்ஸ் வாங்கிவிடலாம். கட்டுப்பாடே இல்லை. இடைத்தரகர்களால் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் திணறுகின்றன. எல்லாவற்றிலும் அரசியல் தலையீடு.
இந்தப் புதிய சட்டத்தை யாரை வைத்து நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்ற கேள்வி முக்கியமானது. மீண்டும் இதேபோன்ற ஆட்கள்தானே வருவார்கள்! மக்கள், அரசு, அதிகாரிகள் - இந்த மூன்று தரப்பின் மனநிலையும் மாறினாலே ஒழிய மாற்றம் சாத்தியமில்லை...’’ என்கிறார் சோமசுந்தரம்.
புதிய சட்டம்வந்தால்...
ஆர்டிஓ அலுவலகங்கள் மூடப்படும். லைசென்ஸ், வாகனப்பதிவு பணிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும்.
தற்போதுள்ள லைசென்ஸ் செல்லாது. 2 வருடத்துக்குள் புது லைசென்ஸ் வாங்கவேண்டும்.
தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் எல்.எல்.ஆர். 9 மாதங்கள் உங்கள் டிரைவிங் கண்காணிக்கப்பட்டு அதன் பிறகே லைசென்ஸ்.
சிறிய ஒர்க்ஷாப்புகள், டிரைவிங் ஸ்கூல், ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள் இருக்காது. 15 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் மட்டுமே டிரைவிங் ஸ்கூல் நடத்த முடியும்.
வாகனத்தை தெருவோர மெக்கானிக் ஷாப்பில் ரிப்பேர் செய்யக்கூடாது. தயாரித்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில்தான் சர்வீஸ் செய்ய வேண்டும்.
அனைத்து வாகனங்களுக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை எப்.சி. எடுக்க வேண்டும். வாகனத்தை தயாரித்த நிறுவனம் சான்றளித்தால் மட்டுமே எப்.சி.
15 ஆண்டுகள் மட்டுமே வாகனங்களைப் பயன்படுத்த முடியும்.
வாகனம் பழுதுபட்டால் பழுதுநீக்கம் செய்யக்கூடாது. பாகத்தை மாற்றிவிட வேண்டும்.
போக்குவரத்துக் கழகங்கள் தனியார் வசமாகும். சாலை பர்மிட்கள் உலக அளவில் ஏலம் விடப்படும்.
மாநில அரசு விரும்பினால் போட்டியிட்டு ஏலம் எடுக்கலாம். டிக்கெட் கட்டணத்தை ஏலம் எடுத்தவர்களே தீர்மானிக்கலாம்.இந்தியா முழுக்க அரசுப் போக்கு வரத்துக் கழகங்கள் 54 உள்ளன. இவை தற்போது இயக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருந்து களையும் இயக்க முடியாமல் போகும். நஷ்டம் ஏற்படுத்தும் கிராமப்புற சர்வீஸ்கள் ரத்தாகும். பல கிராமங்கள் பஸ் தொடர்பை இழக்கக்கூடும். இவற்றில் பணி புரியும் 10 லட்சம் பணியாளர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!
போக்குவரத்து தொடர்பான விதிமுறைகளை உருவாக்கவோ, வரிகளைத் தீர்மானிக்கவோ மாநில அரசுக்கு உரிமையில்லை. மத்திய போக்குவரத்துக் கமிட்டிதான் தீர்மானிக்கும்.
டோல்கேட்டுகள் அதிகாரம் மிக்க மையங்களாகும். அதிக லோடு ஏற்றினாலோ, தகுதியில்லாத வாகனம் ஓட்டினாலோ டோல்கேட் ஊழியர்கள் வாகனத்தை சிறைப் பிடிக்கலாம்.
தண்டனைகள்
ஹெல்மெட் இல்லாமல் டூவீலர் ஓட்டினால் ரூ.500 அபராதம்
இன்சூரன்ஸ், லைசென்ஸ், பிற ஆவணங்களில் எது ஒன்று இல்லாவிட்டாலும் 10,000 அபராதம்
போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம், 3 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை, 6 மாதம் லைசென்ஸ் ரத்து, 1 மாத வாகன முடக்கம்
மொபைல் பேசியபடி அல்லது கவனச்சிதறலோடு வாகனம் ஓட்டினால் ரூ.5000 முதல் ரூ.10,000 வரை அபராதம், லைசென்ஸ் பறிப்பு. திரும்பவும் லைசென்ஸ் பெற கட்டாயச் சிறப்புப் பயிற்சி
ஓவர் லோடு ஏற்றினால் சிறிய வாகனத்துக்கு ரூ.5000, கனரக வாகனங்களுக்கு ரூ.50,000 வரை அபராதம். வாகனத்தை ஆல்ட்ரேஷன் செய்தால் 3,000 முதல் 10,000 வரை அபராதம், 1 மாதம் வாகன முடக்கம்.
சீட் பெல்ட் அணியாவிட்டால் 1000 அபராதம்
நோ பார்க்கிங் ஏரியாவில் வாகனத்தை நிறுத்தினால் 1000 முதல் 5000 வரை அபராதம்
விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தினால் 1 வருடம் சிறை, 50000 வரை அபராதம்
குழந்தைகள் இறந்தால் 7 வருட சிறை, 3 லட்சம் வரை அபராதம்
அபராதம், சிறை தவிர வேறு சில வித்தியாச தண்டனைகளும் உண்டு. ஒருவர் விதிகளை மீறும்போது அதற்கு புள்ளிகள் வழங்கப்படும். 12 புள்ளிகள் சேர்ந்து விட்டால் ஓராண்டுக்கு அவருடைய ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். சில குற்றங்களுக்கு சமூகசேவை செய்வது தண்டனையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக குற்றம் செய்பவர்கள், இரண்டு வட்டார மொழி நாளிதழ்கள், ஒரு ஆங்கில நாளிதழில் தன் புகைப்படத்தைப் போட்டு ‘நான் சாலை விதிகளை மீறியவன்’ என்று தன் செலவிலேயே விளம்பரம் செய்ய வேண்டும்.
மனித உயிர்களை காப்போம்
ReplyDeleteகுறைகளை பெருதாக்கி காட்டாமல்
நிறைகளுக்காக இதை வரவேற்போம்
சாலைகளை முறையாக சரி செய்த பிறகு இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும். சாலை விபத்துக்கள் நடப்பதற்கு முக்கிய காரணம் மோசமான சாலைகள். அரபு நாடுகளிலும் சாலை விபத்துகள் குறைவு என்கிறாா்கள். அரபு நாடுகளில் உள்ளது போல சாலைகளை இங்கு அமைப்பார்களா? அதற்கு இன்னும் 10000 ஆண்டுகள் போனாலும் முடியாது.
ReplyDelete