பூமியின் காற்று மண்டலத்தில், கார்பன் - டை - ஆக்சைடின் விகிதம் வரலாறு காணாத உச்சத்தை சமீபத்தில் எட்டியுள்ளது. 'இதை கட்டுப்படுத்தாவிட்டால்,
அடுத்த, 10 ஆண்டுகளில், புயல், கடுமையான வெப்பம், வறட்சி போன்ற பேரிடர்
ஏற்படலாம்' என, சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்தில்,
அமெரிக்காவிலுள்ள ஹவாய் தீவில் இருக்கும், மவுனா லோவா கண்காணிப்பகத்தில்
எடுக்கப்பட்ட, கார்பன் - டை - ஆக்சைடின் அளவு, 400 பி.பி.எம்., (பார்ட்ஸ்
பெர் மில்லி யன்) என்ற அபாயகரமான அளவை எட்டியுள்ளது. மவுனா லோவாவில்
எடுக்கப்படும் தினசரி சராசரி அளவைத் தான் பூமியின் ஒட்டு மொத்த காற்று
மண்டலத்திற்கான பிரதிநிதித்துவமாக கருதுவது சுற்றுச்சூழல் துறையின்
வழக்கம்.'உலகின் வெப்பநிலை, தொழிற்புரட்சிக்கு முந்தைய சராசரி உலக
வெப்பநிலைக்கு மேல், 2 டிகிரி செல்சியஸ் (3.6 டிகிரி பாரன்ஹீட்)
கூடிவிடாமல் இருக்க, காற்றில் கார்பன் - டை - ஆக்சைடின் விகிதம், 400
பி.பி.எம்., அளவை தாண்டாமல் இருக்க வேண்டும்' என, பருவநிலை விஞ்ஞானிகள்
நிர்ணயம் செய்துள்ளனர்.
உயர்ந்துள்ளது:
தொழிற்புரட்சிக்கு முன், சராசரி கார்பன் - டை - ஆக்சைடின் அளவு, 280
பி.பி.எம்.,மாக இருந்தது. ஆனால், நிலக்கரி, பெட்ரோல் போன்ற கார்பன்
அடிப்படையிலான எரிபொருட்களின் பயன்பாடு அதிவேகமாக அதிகரிக்கவே, காற்றில்,
கார்பன் - டை - ஆக்சைடின் அளவும் அதிகரித்தது. கடந்த 150 ஆண்டுகளில்,
பூமியின் வெப்ப அளவு 1 டிகிரி செல்சியஸ் (1.8 டிகிரி பாரன்ஹீட்) அளவுக்கு
உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, பருவநிலை விஞ்ஞானிகள் கூறியதாவது:
400 பி.பி.எம்., என்ற அளவு அடுத்த சில ஆண்டுகளில், பலவேறு தாக்கத்தை
சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும். மிக விரைவிலேயே, உலக நாடுகள் தங்களின்
கார்பன் - டை - ஆக்சைடு உமிழ்வை கட்டுப்படுத்தாவிட்டால், நூற்றாண்டு காணாத
புயல், அதிவெப்பமான கோடை, திடீர் வறட்சி போன்றவை, அடுத்த 10 ஆண்டுகளிலேயே
மிக சாதாரணமான நிகழ்வு ஆகிவிடும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர். அதிகமாக
கார்பன் - டை - ஆக்சைடை உமிழும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளும், ஐரோப்பிய
நாடுகளும் கரியமில வாயு அளவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக
தெரியவில்லை. இந்த நாடுகளில் எல்லாம், இதற்கான கொள்கை முடிவுகள்,
மசோதாக்கள் இன்னும் நிறைவேற்றப்படாமல் நொண்டியடிப்பது தான் இதற்கு காரணம்.
தற்போது, வட, தென், துருவங்களிலும் இமாலய பகுதிகளிலும், பூமி வெப்ப
மயமாவதால் பனி உருகுவது அதிகமாகியுள்ளது. இதனால், கடலின் நீர்மட்டம் மெல்ல
அதிகரித்து வருவதாகவும் சூழலியல் வல்லுனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
பருவ நிலை மாற்றம் தறிகெட்டுப் போனால் காட்டுப் பகுதிகளில் வெள்ளம் அல்லது
வறட்சி போன்றவை ஏற்படும். வன உயிர்களுக்கும் பேராபத்து ஏற்படும். மனிதர்கள்
அதிகம் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
இப்போதே, பணக்கார நாடான அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் சில
பகுதிகளில் வறட்சி இருப்பதாக அறிவித்துள்ளனர். அமெரிக்காவுக்கே இந்த நிலை
என்றால், பரந்த நிலப்பரப்பை உடைய இந்தியாவுக்கும் புவி வெப்பமயமாதல்
பேரிடர்களை கொண்டு வந்து சேர்க்கும்.
கபளீகரம்:
இமயமலை பகுதிகளில் திடீர் வெள்ளங்கள் சமீபகாலமாக அதிகரித்திருப்பதும், மற்ற
பகுதிகளில் மழை பொய்த்து, விவசாயம் வீழ்ந்து, விவசாயிகள் தற்கொலைகள்
அதிகரித்து வருவதும், இதற்கான எச்சரிக்கை மணியாக கருதலாம். கார்பன் - டை -
ஆக்சை டின் அளவு காற்றில் அதிகரிப்பதால், நில பகுதியில் மட்டுமல்லாமல்,
கடல் பகுதியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அது, கடல் நீரின்
அமிலத்தன்மையை கூட்டி, கடல் வாழ் உயிரினங்களான டால்பின் முதல் நட்சத்திர
மீன்கள் வரை அனைத்தையும் கபளீகரம் செய்யும்.கார்பன் - டை - ஆக்சைடின் அளவை
குறைக்க, இப்போது நரேந்திர மோடி அரசு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. தினமும்
பெரு நகர்களின் காற்றின் தரத்தை அளவிட்டு, அன்றே அறிவிப்பது விழிப்புணர்வை
கொண்டு வரும் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும், 'தற்போது எடுக்கப்பட்டு
வரும் நடவடிக்கைகள் போதாது; வாகன புகை, தொழிற்சாலை புகை போன்றவற்றை
கட்டுப்படுத்த அதிரடியான அதிவிரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என,
சூழலில் நிபுணர்கள் கூறுகின்றனர். காற்று மாசுபாடு என்றால் என்ன?
மனிதர்கள், விலங்குகள், தாவரங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் வாயுக்கள்,
புகை, தூசு போன்றவை காற்றில் கலந்து, அதன் இயல்பு தன்மையை
நிலைகுலைப்பதைத்தான் காற்று மாசு என்கின்றனர். சூழலியல் வல்லுனர்கள்.
காற்று மாசுக்கு மிகப்பெரிய காரணி, நகர்களில் லட்சக்கணக்கான வாகனங்கள்
வெளியிடும் புகை மற்றும் அவை கிளப்பும் புழுதி. வாகனப் புகையில் இருக்கும்
கார்பன் மோனாக்சைடு மனிதனுக்கு பல நோய்களை தரக்கூடியது. அடுத்து,
தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை மற்றும் நச்சுத் தன்மையுள்ள வாயுக்கள்,
காற்றில் நச்சை கலக்கின்றன. நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்தும் ஆலைகள்
சல்பர் - டை- ஆக்சைடை காற்றில் கலந்து விடுகின்றன.பொதுவாக சூழலில்
வல்லுனர்கள், காற்று மாசுபாட்டை இரண்டு வகையாக பிரிக்கின்றனர். 'முதல் நிலை
மாசுபாடு' என்பது, காற்றில் கலக்கும் வாயுக்கள் அல்லது துகள்களால்
ஏற்படுவது. 'இரண்டாம் நிலை' மாசு என்பது, காற்றில் கலந்துவிட்ட பலவித
மாசுகள், ஒன்றோடு ஒன்று வேதிவினை புரிந்து, மேலும் ஆபத்தான
வேதிப்பொருட்களாகி காற்றில் மிதப்பது. பெட்ரோலிய வேதிப்பொருட்கள் இந்த
ரகத்தை சேர்ந்தவை. இதன் உச்சக்கட்ட பாதிப்புகளில் ஒன்றுதான், அவ்வப்போது
தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் அமில மழை. காற்றில் நிகழும்
வேதிவினைகளால் கந்தகம் போன்ற அடர் அமிலங்கள் தூய்மையான மழை நீரில் கலந்து
பெய்து, பூமியை தற்காலிக நரகமாக ஆக்குகிறது.
காற்று மாசை குறைக்க தனி நபர்களால் முடியுமா?
தனி நபர்களால் காற்று மாசை நிச்சயம் குறைக்க முடியும். சில நடைமுறை
உதாரணங்கள் இதோ: இரண்டிரண்டு பேராக, 40 கார்களில் பயணிப்பதற்கு பதில்,
அத்தனை பேரும் ஒரே பேருந்தில் சென்றால் காற்று மாசு குறையும். -
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் காற்று மாசுபாட்டை குறைப்பதில் ஆர்வம்
உள்ளவர்கள், 'கார் பூலிங்' என்ற முறையை கடைபிடிக்கின்றனர். ஒரே பகுதியில்
வசிப்பவர்களின் குழந்தைகளை, தங்களுக்குள் முறைவைத்து, ஒரே காரில் அழைத்து
சென்று பள்ளியில் விட்டுவிட்டு, திரும்பவும் ஒரே காரில் அழைத்து வருவது
தான் 'கார் பூலிங்' முறை. பெங்களூரு, மும்பை நகரங்களில் இது போன்ற
முயற்சிகளை துவங்கியுள்ளது ஆறுதலான விஷயம்.மேற்கத்திய நாடுகளில்
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தினமும் 20 - -30 கி.மீ., சைக்கிளில் அலுவலகம்
சென்று வருகின்றனர். இன்னும் சிலர், விலை அதிகமானாலும் மின்சார கார்
வாங்கி, தங்களால் முடிந்தவரை காற்று மாசை குறைக்கின்றனர். சில தீவிர
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சூரிய மின்சாரம், காற்றாலை போன்றவற்றை வீட்டில்
அமைத்து, தங்கள் நாட்டு மின்வாரியத்திடமிருந்து (ஆப் தி க்ரிட்) விலகி
வாழ்ந்து காட்டுகின்றனர். இந்தியாவின் நிலை என்ன? கடந்த, 2014ன் சர்வதேச
சுற்றுச்சூழல் செயல்பாட்டு அட்டவணைப்படி, 178 உலக நாடுகளில், இந்தியா
காற்று மாசுபாட்டில் 174வது இடத்தை வகித்தது. நாம் சுவாசிக்கும் காற்று
அந்த அளவுக்கு மோசம்.உலக சுகாதார அமைப்பு 2014ல் வெளியிட்ட உலகின் மிக
மோசமாக மாசுபட்டுள்ள நகரங்கள் பட்டியலில் இருந்த 20 நகரங்களில், 13
நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை.காற்று மாசுபாட்டில், உலக சுகாதார
அமைப்பின் மதிப்பீட்டின்படி, சீனா முதலிடத்தையும், அமெரிக்கா
இரண்டாமிடத்தையும், இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
இந்திய நகரங்களின் காற்று தர அட்டவணை:
பெங்களூரு 310
கான்பூர் 220
புனே 210
டில்லி 182
வாரணாசி 185
சென்னை 179
லக்னோ 163
மும்பை 106
ஆமதாபாத் 88
ஐதராபாத் 58
மதிப்பீடு:
1 - -50-நன்று
51- - 100-திருப்தி
101 -- 200-மிதம்
201 - -300-மோசம்
301 - -400-மிக மோசம்
401 - -500-மிக மிக மோசம்
51- - 100-திருப்தி
101 -- 200-மிதம்
201 - -300-மோசம்
301 - -400-மிக மோசம்
401 - -500-மிக மிக மோசம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...