Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குழந்தைப் பருவத்தை ஒடுக்கும் சட்டத் திருத்தம்; தமிழ் நேசன்

        சிறார் தொழிலாளர் (தடுப்பும் கட்டுப்பாடும்) சட்டம் 1986-ல் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது.

         முன்வைக்கப்பட்டிருக்கும் திருத்தங்களில் ஒன்று, குடும்பத் தொழிலையும் பொழுதுபோக்குத் துறைகளையும் தவிர, மற்ற தொழில் களில் 14 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறாரை ஈடுபடுத்துவதைத் தடை செய்கிறது. குடும்பத் தொழிலிலும் பொழுதுபோக்குத் துறைகளிலும் சிறார் ஈடுபடுத்தப்படும்போது அந்தச் சிறுவர்களின் படிப்பு தடைபட்டுவிடக் கூடாது என்ற முன்நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படும்.
1986-ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க முடியாத வகையில் அந்தச் சட்டம் பலவீனமாக இருப்பது நாம் அறிந்ததே.

 இரண்டாவதாக, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ஏ, கட்டாய, இலவசக் கல்வியைப் பெறுவதில் குழந்தைகளுக்கு உள்ள உரிமைக்கான சட்டம்-2009 ஆகிய இரண்டுக்கும் முரணாக 1986-ம் ஆண்டு சட்டம் இருக்கிறது. மூன்றாவதாக, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் ஒப்பந்தம் 138, 182 ஆகியவை வலியுறுத்துவதைப் போல 1986-ம் ஆண்டின் சட்டம் பதின்பருவத் தொழிலாளர் முறையைக் கட்டுப்படுத்தவில்லை.
குடும்பத் தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று சொல்வதுதான் பெரும் பிரச்சினைக்கு உரியதாக இருக்கிறது. இந்தியாவில் நிலவும் வறுமை, சமூக-பொருளாதார நிலைகள் போன்றவற்றைக் கணக்கிலெடுத்துப் பார்க்கும்போது, சிறார் தங்கள் குடும்பத் தொழில்களைச் செய்யலாம் என்றும், அவற்றில் சிறாருக்கு ஆபத்து இருக்காது என்றும் இந்தச் சட்டத் திருத்தத்தில் மத்திய அரசு சொல்கிறது. இது நடைமுறையோடு பொருந்திப்போகாமல் போவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம். இந்தச் சட்டத் திருத்தம் சட்டத்தில் பல்வேறு ஓட்டைகளை ஏற்படுத்தி, அந்த ஓட்டைகள் மூலம் சிறார் தொழிலை நியாயப்படுத்துவதற்கு ஏதுவாகிவிடுகிறது.

 குடும்பத் தொழில் என்பவையும் சுரண்டல் நிறைந்தவையாகவும், குழந்தைகளுக்குப் பெரும் தீங்கிழைப்பவையாகவும் இருக்கக் கூடும் என்பதையே மத்திய அரசு கவனிக்கத் தவறுகிறது.
குடும்பத் தொழில்கள் என்பவை அமைப்புசாரா பிரிவில் அடங்குபவை. இதனால் அவற்றைக் கட்டுப்படுத்துவதோ கண்காணிப்பதோ இயலாத காரியம். இப்படிப்பட்ட சட்டத் திருத்தத்தால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் பெண் குழந்தைகள்தான். அதேபோல், வறுமையின் பிடியில் சிக்கவைக்கப்பட்டிருக்கும் தலித் மக்கள், சிறுபான்மையினர் ஆகிய சமூகங்களில் உள்ள குழந்தைகள் வறுமை காரணமாகத் தங்கள் குழந்தைப் பருவத்தையே இழக்கும் அபாயத்தையும் இந்தச் சட்டத் திருத்தம் ஏற்படுத்திவிடும்.

1986-ம் ஆண்டு சட்டத்தைப் பூசிமெழுகுவதைவிட முக்கியமான காரியம் எதுவென்றால், அந்தச் சட்டத்தையே மேலும் வலுப்படுத்த வேண்டியதுதான். அப்படிச் செய்யும்போது, குழந்தைத் தொழிலாளர், கொத்தடிமை முறை ஆகியவற்றிலிருந்து மீட்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்வு கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ‘மீட்பு, மறுவாழ்வு, பள்ளிக்கல்வி’ ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கை அதற்கு அவசியம்.
செய்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. 

ஆனால், அரசு அவற்றையெல்லாம் விடுத்து, சிறார் தொழிலாளர் முறை ஏதாவது ஒரு வழியில் நீடிப்பதற்கான ஓட்டைகளை ஏற்படுத்தத் துடிக்கிறது. சமீபத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சகத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.10,382 கோடிக்கும், முந்தைய அரசு ஒதுக்கிய தொகை ரூ.18,588 கோடிக்கும் உள்ள வித்தியாசமே சொல்லிவிடும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டில் அரசுக்குள்ள அக்கறையை!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive