Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பூகம்பத்தை முன்கூட்டியே கணிக்க முடியும்!

      நொறுங்கி வீழ்ந்த கட்டிடங்களின் முன்பாக செல்ஃபி எடுத்துக்கொள்பவர்கள், பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் பசியை மூலதனமாக்கி உணவுகளை கொள்ளை விலைக்கு விற்பவர்கள்... இவர்கள் எல்லோரையும் விட மோசமானவர்கள் வதந்தி பரப்புகிறவர்கள். நாசாவில் சொன்னார்கள், நாங்குனேரியில் சொன்னார்கள் என ‘அடுத்த பூகம்பம் இன்னும் 24 மணி நேரத்தில் வரும்’ என செல்போனி லும் இணையத்திலும் இந்தியா முழுக்க வதந்தி பரப்பினார்கள் பலர். பூகம்பத்தைக் கணிக்க முடியுமா?
    நேபாளத் துயரம் போல ஒரு பூகம்பத்தை முன்கூட்டியே கணிப்பது, ‘சாத்தியமே இல்லை’ என மத்திய அரசு சொல்கிறது. தினம் தினம் உலகெங்கும் நூற்றுக்கணக்கான நில அதிர்வுகள் நிகழ்கின்றன. அவற்றில் எந்த ஒன்று மிகப்பெரிய பூகம்பக் கொடூரத்துக்கான துவக்கப் புள்ளி என்பது யாராலும் அறிய முடியாதது என்பதே இதுவரை நம்பிக்கையாக இருக்கிறது. 

ஆனால், ‘‘சில கணக்குகளைப் போட்டு பூகம்பம் எங்கே நிகழும் என கணிப்பது சாத்தியம்’’ என்கிறார் டெர்ரா சீஸ்மிக் என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஓலெக் எல்ஷின். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனம், இப்படியான கணிப்புகளை அரசுகளுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் தருகிறது. 

‘‘ரிக்டர் அளவில் 6க்கு மேல் வருகிற சக்திவாய்ந்த பூகம்பங்களை, அவை நிகழ்வதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே கணிப்பது சாத்தியம்’’ என்கிற இவரது நிறுவனம், சமீபத்தில் மூன்று பூகம்பங்களை துல்லியமாகக் கணித்திருக்கிறது. சிலி, மெக்சிகோ, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இவர்கள் கணித்தது போலவே பூகம்பம் வந்தது. குறிப்பாக இந்தோனேஷியாவில் கடந்த மார்ச் 3ம் தேதி நிகழ்ந்த பூகம்பத்தை 9 நாட்களுக்கு முன்பாக கணித்துச் சொன்னது இந்த நிறுவனம்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிறுவனம் பல நாடுகளின் செயற்கைக்கோள் படங்களையும், வானிலை அறிக்கைகளையும் வாங்கி ஆராய்கிறது. அவற்றை அடிப்படையாக வைத்து, அடிக்கடி பூகம்பம் நிகழும் பகுதிகளில் அடுத்து எப்போது ஒரு பயங்கரம் நிகழும் என பிரத்யேக சாஃப்ட்வேர் மூலம் சில கணக்குகள் போடுகிறார்கள். ‘‘வழக்கத்துக்கு மாறான வெப்பநிலை, மேகங்கள் உருவாவதில் ஏற்படும் மாற்றம், பூமியிலிருந்து சல்ஃபூரிக் வாயு கசிவது, விலங்குகளின் விநோத நடத்தைகள் என பல விஷயங்களையும் கண்காணித்து ஒரு முடிவுக்கு வர முடியும்’’ என்கிறார் எல்ஷின்.

அடிக்கடி பூகம்பத்துக்கு ஆளாகும் அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் பல ஆண்டுகளாக இதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. ‘குவாக்சிம்’ என அமெரிக்கா 2009ம் ஆண்டு ஒரு ஆராய்ச்சியைத் துவங்கியுள்ளது. பல ஆண்டுகளாக உலகெங்கும் நிகழ்ந்த பூகம்பங்களின் புள்ளிவிவரத்தை வைத்தே கணிப்புகளைச் சொல்ல முடியுமா என்பதே அமெரிக்காவின் ஆராய்ச்சி. 

சீனா பூகம்ப ஆராய்ச்சிக்காக தனியாக ஒரு அமைச்சகத்தையே அமைத்துள்ளது. கடந்த 75ம் ஆண்டில் ஒரு மாபெரும் பூகம்பத்தை முன்கூட்டியே கணித்த பெருமை சீனாவுக்கு உண்டு. ஹைசெங் பகுதியில் திடீரென நேர்ந்த வாயுக்கசிவு, பாம்புகள் கூட்டம் கூட்டமாக புற்றுகளிலிருந்து வெளியேறியது ஆகியவற்றைப் பார்த்துவிட்டு மக்களை அங்கிருந்து வெளியேற்றியது அரசு. 10 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு அங்கே பூகம்பம் தாக்கியது. நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தன. ஒருவேளை எச்சரிக்கை விடுக்காமல் இருந்திருந்தால் ஆயிரக்கணக்கானவர்கள் மாண்டிருப்பார்கள். ஆனாலும் அடுத்தடுத்து நிகழ்ந்த பூகம்பங்களை அவர்களால் இப்படிக் கணிக்க முடியவில்லை.

நேபாளத்தைப் பொறுத்தவரை இப்படி ஒரு துயரம் நேரும் என்பதை முன்கூட்டியே கணித்திருந்தார் ரோஜர் பில்ஹாம். அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக புவியியல் நிபுணர் இவர். ‘‘பூகம்பங்கள் மனிதர்களைக் கொல்வதில்லை. மனிதர்களே தங்கள் மரணத்துக்குக் காரணமாகிறார்கள். ஆபத்தான பகுதிகளில் உறுதியில்லாத கட்டிடங்களை ஜப்பானோ, அமெரிக்காவோ அனுமதிப்பதில்லை.

மற்ற இடங்கள் இப்படி இல்லை. 200 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை இருந்த நகரம், இந்த பூமியில் பெய்ஜிங் மட்டும்தான். இப்போது 381 நகரங்கள். நெரிசலான சந்துகள், குறுகலான கட்டிடங்கள், பழைய கட்டிடங்களைப் பராமரிப்பதே இல்லை, பூகம்பத்தைத் தாங்கும்விதமாக புதிதாகவும் கட்டுவதில்லை. செலவு அதிகமாகும் என்கிற பயம். உலகில் 40 கோடி மக்கள் பூகம்பம் எந்த நிமிடமும் ஏற்படலாம் என அஞ்சப்படும் இடங்களில் வாழ்கிறார்கள்’’ என்கிறார் அவர். 

பூமியின் மேலடுக்கு பல கண்டத் தட்டுகளால் ஆனது. விரிசல் விழுந்த முட்டை ஓடு போல இருக்கும் இவற்றில் இந்தியத் தட்டு சற்றே சிறியது, இது பிரமாண்டமான யூரேசியத் தட்டில் முட்டுகிறது. இதன் விளைவே இமயமலை. இங்கே சேரும் அழுத்தம், ஒரு ஸ்பிரிங்கை அழுத்துவது போல கூடிக்கொண்டே இருக்கிறது. அந்த ஸ்பிரிங் விடுபடும் தருணமே பூகம்பம். நேபாளம் போல நிகழும் அபாயம் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவின் பல நகரங்களுக்கும் இருக்கிறது என்கிறார் பில்ஹாம். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive