போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான எழுத்து தேர்வுக்குவிண்ணப்பித்தவர்களில் 9 ஆயிரம் பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அவர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு படையெடுத்து விளக்கம் கேட்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு
தமிழக போலீஸ் துறைக்கு புதிதாக சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு 1,078 பேர் தேர்வு செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. இதற்கான பணியை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. 1,078 பேரில், 94 பேர் காவல்துறை மற்றும் அமைச்சுப்பணியாளர் துறையில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர். மற்றவர்கள் பொதுப்பிரிவில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கு பொதுப்பிரிவில் இருந்து தனியாக விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன. காவல்துறை மற்றும் அமைச்சு பணியாளர் துறையில் இருந்து தனியாக விண்ணப்ப மனுக்கள் ஆன்-லைன் மூலம் பெறப்பட்டது. பொதுப்பிரிவில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 687 மனுக்களும், காவல்துறை மற்றும் அமைச்சுப்பணியாளர் துறையில் இருந்து 13 ஆயிரத்து 614 மனுக்களும் பெறப்பட்டன.
மனுக்கள் நிராகரிப்பு
முழுமையாக நிரப்பப்படாமலும், தேவையான சான்றிதழ்கள் இணைக்கப்படாமலும் அனுப்பப்பட்ட விண்ணப்ப மனுக்களை சீருடை பணியாளர் தேர்வாணையம் நிராகரித்து விட்டது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் அனுப்பப்படவில்லை.
பொதுப்பிரிவில் 8 ஆயிரத்து 425 மனுக்களும், காவல்துறை மற்றும் அமைச்சுப்பணியாளர் பிரிவில் 610 மனுக்களும் என மொத்தம் 9,035 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
போர்க்கொடி
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறிப்பாக காவல்துறையை சார்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். நாங்கள் முறையாக விண்ணப்பித்தும் எங்கள் மனுக்களை தேவை இல்லாமல், ஆட்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நிராகரித்துள்ளனர் என்றனர். நேற்று 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை அண்ணா சாலையில் உள்ள சீருடைபணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு படையெடுத்துச் சென்று விளக்கம் கேட்டனர்.
இதுபற்றி சீருடைபணியாளர் தேர்வாணைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான காரணத்தை நாங்கள் முறையாக தெரிவித்து வருகிறோம். காவல்துறை சார்பில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், விவரம் தெரியாமல் பொதுப்படையாக குற்றம்சாட்டுகிறார்கள். அவர்கள் தற்போது செய்யும் பணியில் எந்தவித தண்டனையும் பெறாமல் இருக்க வேண்டும், 5 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும், பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்பன போன்ற பல விதிமுறைகள் உள்ளன. நிராகரிக்கப்பட்ட காவல்துறை விண்ணப்பதாரர்களும், சீருடை பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு நேரில் வந்து உரிய விளக்கம் கேட்டால் தெரிவிக்கப்படும்’’ என்றனர்.
அறிவித்தபடி தேர்வு
ஏற்கனவே அறிவித்தபடி 23-ந்தேதி பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கும், 24-ந்தேதி காவல்துறை மற்றும் அமைச்சுப்பணி பிரிவினருக்கும் எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 32 தேர்வு மையங்களில் நடக்கும். அதற்கான ஏற்பாடுகள் முழுஅளவில் செய்யப்பட்டுள்ளது என்று தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...