Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

என்னது, அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்க மாட்டார்களா? சொல்லாமல் அடித்த 3 கில்லிகள்!

          அரசுப் பள்ளி மாணவ - மாணவியர் என்றாலே, இளக்காரமாகப் பார்க்கும் கலாச்சாரத்துக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்திருக்கிறார்கள் பாரதிராஜா, வைஷ்ணவி, ஜெயநந்தனா. 

           அரசுப் பள்ளி மாணவ - மாணவியரான இவர்கள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், 499/500 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றவர்கள். அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள சின்னக் கிராமம் பரணம். இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவரான எஸ். பாரதிராஜா, விவசாயக் குடும் பத்தைச் சேர்ந்தவர். அப்பா சேகர், அம்மா கவிதா இருவருமே விவசாயிகள். “அம்மா அப்பா ரெண்டு பேருமே காலையில வேலைக்குப் போனா ராத்திரிதான் திரும்பி வருவாங்க. கஷ்டப்படுற குடும்பம் எங்களுது. ‘படிப்புதான் நம்ம குடும்ப சூழ்நிலையை மாத்தும்டா’னு எங்க தாத்தா, பாட்டி அடிக்கடி சொல்வாங்க. வைராக்கியத்தோடத்தான் படிச்சேன். எங்க பள்ளிக்கூடம் ஒண்ணும் பெரிய வசதியான பள்ளிக்கூடம் இல்ல. ஆனா, எங்க டீச்சர்லாம் ரொம்ப ஈடுபாட்டோட பாடம் நடத்துறவங்க. குறிப்பா, ஹெச்எம் ராஜம் நிறைய உற்சாகப்படுத்துவாங்க, உதவிசெய்வாங்க. நல்லா படிச்சு கலெக்டர் ஆகணும்; எங்களை மாதிரி ஏழை மக்களுக்கு உதவணும். நம்ம பள்ளிக்கூடம் மாதிரியான அரசுப் பள்ளிக்கூடங்கள் எல்லாத்தையும் எல்லா வசதிகளும் கொண்டதா மாத்தணும்கிறது என் கனவு. இன்னைக்கு என்னாலேயே எங்க பள்ளிக்கூடம் மேல எல்லார் கவனமும் திரும்பியிருக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா” என்கிறார் பாரதிராஜா.

           ரொம்பலாம் மெனக்கெடலை! தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். வைஷ்ணவி. வீடியோகிராஃபராக இருந்த தந்தை வி. ரவிச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பால் மரணமடைய தாய் காந்திமதிதான் இவருக்கு எல்லாமும். வைஷ்ணவி கதையில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. தனியார் பள்ளி வேண்டாம் என்று அடம்பிடித்து அரசுப் பள்ளிக்கு வந்தவர் இவர். “அஞ்சாவது வரைக்கும் ஒரு தனியார் பள்ளியிலதான் படிச்சேன். எதுக்கெடுத்தாலும் கண்டிப்பு. பிடிக்கலை. அம்மாகிட்ட சொல்லி அடம்பிடிச்சு அரசுப் பள்ளியில சேர்ந்தேன். இங்கே நல்ல டீச்சர்ஸ். நல்லாவும் சொல்லிக்கொடுத்தாங்க, ஜாலியாவும் இருக்க விட்டாங்க. அன்னைஅன்னைய பாடத்தை அன்னைஅன்னைக்கே படிச்சுடுவேன். அவ்வளவுதான். ரொம்பலாம் மெனக்கெடலை. இப்படி முதலிடம் பிடிப்பேன்லாம் எதிர் பார்க்கலை. எனக்கே ஆச்சரியமா இருக்கு” என்று சொல்லும் வைஷ்ணவிக்கு மருத்துவராவது ஆசை. “கிராமங்கள்ல போய் நிறைய பேருக்கு உதவணும்ணா” என்கிறார். 

             படிப்பு, விளையாட்டுனு ஒரே ஜாலிதான் சேலம் மாவட்டம், வாழப்பாடி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவி ஜெயநந்தனா. அப்பா இளங்கோ - அம்மா தமிழ்ச்செல்வி. ஜெயநந்தனாவின் கதையும் கிட்டத்தட்ட வைஷ்ணவி கதைபோலத்தான். ஐந்தாவது வரை தனியார் பள்ளியில் படித்த ஜெயநந்தனாவை அரசுப் பள்ளியில் சேர்த்தவர் அவருடைய அப்பா. “எங்கப்பா ஒரு அரசு ஊழியர் (உணவுப் பாதுகாப்பு அலுவலர்). ஒரு அரசு ஊழியர் பொண்ணு அரசுப் பள்ளியிலதான் படிக்கணும்னு சொல்லி திடீர்னு இங்க கொண்டுவந்து சேர்த்துவிட்டுட்டாங்க. எனக்கும் இது சந்தோஷம்தான். ஏன்னா, நான் நிறைய விளையாடுவேன். அதனால, படிக்குற நேரத்துல படிப்பு; மத்த நேரத்துல விளையாட்டுன்னு ஜாலியாதான் படிச்சேன். எங்க டீச்சர்ஸ் கொடுத்த உற்சாகம் இப்போ முதலிடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துடுச்சு” என்று சொல்லும் ஜெயநந்தனாவின் கனவு விஞ்ஞானியாவது. “நாட்டுக்கு எதாவது பெரிசா செய்யணும்” என்கிறார். மதிப்பெண்களைவிடவும் உண்மையில் இவர்களைக் கொண்டாடவைப்பவை இந்த வார்த்தைகள்தான்: “ஏழை மக்களுக்கு உதவணும்”; “கிராமங்களுக்குப் போய் நிறையப் பேருக்கு உதவணும்”; “நாட்டுக்கு எதாவது பெரிசா செய்யணும்”... கனவுகள் நனவாகட்டும் செல்லங்களே!




2 Comments:

  1. அந்த அருமைச் செல்வங்களுக்கு எனது வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அரசு பள்ளிகளை கேவலமாகவும், மட்டமாகவும் பேசியவர்களுக்கு செவினியில் பொளேர் என்று அடி விட்ட குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள். நன்றிகள்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive