தமிழகத்தில், ப்ளஸ் 2 தேர்வு முடிவு, இன்று வெளியாகும் நிலையில், மாணவ,
மாணவியர் தற்கொலை செய்வது, மாயமாவதை தடுக்க, பெற்றோரை, போலீசார் உஷார்
படுத்தி உள்ளனர். மாணவ, மாணவியர் மாயமானால் உடனடியாக போலீசாருக்கு
தெரிவிக்க வேண்டு கோள்விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு, மார்ச், 5ம் தேதி துவங்கி,
மார்ச்,31ம் தேதி முடிந்தது. தேர்வு முடிவு இன்று காலையில் வெளியாகிறது.
இதே போல், பத்தாம் வகுப்ப தேர்வு முடிவு மே, 21ல் வெளியாகிறது. இந்த தேர்வு
முடிவு வெளியாகும் நிலையில், கடந்த ஆண்டுகளில் தற்கொலை செய்து கொள்வோர்,
வீட்டை விட்டு ஓடி போகும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை
அதிகரித்துள்ளது.கடந்த, 2012ல், 18 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில்,
2013ல், 30 ஆகவும், 2014ல், 38 ஆக அதிகரித்தது. இதே போல், வீட்டை விட்டு
மாயமாகும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, கடந்த, 2012ல் போலீசாருக்கு, 190
புகார் வந்த நிலையில், 160 பேர் உடனடியாக கண்டு பிடித்து பெற்றோரிடம்
ஒப்படைக்கப்பட்டனர்.
இதுவே, 2013ல், 320 புகார் வந்த நிலையில், 285 பேர் உடனடியாக
மீட்கப்பட்டனர். கடந்த, 2014ல், 450 புகார் வந்த நிலையில், 420 பேர்
மீட்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவு வெளியாகும் போது, தற்கொலை,
வீட்டை விட்டு வெளியோறு மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது.இதனால், பெற்றோர், சிரமத்தை சந்திப்பதுடன், ஒரு வகையில்
போலீசாருக்கும் சிரமம் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையிலும், தற்கொலை,
வீட்டை விட்டு ஓடுதல் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில், மாணவ, மாணவியர்,
பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வை, கடந்த சில மாதங்களாக போலீஸ் சார்பில்
மேற் கொள்ளப்பட்டது.மாணவ, மாணவியர் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வரப்பட்டு,
போலீசாரின் பணி குறித்து விளக்கப்பட்டது. இந்நிலையில், இன்று தேர்வு முடிவு
வெளியாவதால், போலீசார் பெற்றோரை உஷார் படுத்தி உள்ளனர்.
இது குறித்து ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்வு முடிவு
வெளியாகும் நிலையில், மாணவ, மாணவியர் மன உளைச்சலுக்கு ஆளாவது வழக்கம்.
மதிப்பெண் குறைதல், தோல்வி ஆகியவற்றால் மனம் உடையும் மாணவர்களிடம்,
பெற்றோர் கண்டிப்புடன் நடந்து கொள்வதை முற்றிலும் தவிர்த்து விட்டு,
அவர்களை தங்களின் கண்காணிப்பில், பராமரிப்பதோடு, தன்னம்பிக்கையை
அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.முதலில் வெளியாகும் தேர்வு
முடிவில் தெரிவிக்கப்படும் மதிப்பெண் சரியாக உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்
கொள்ள வேண்டும். கடந்த ஆண்டுகளில் தேர்வு முடிவு குளறுபடியால், முதல்
மதிப்பெண் பெற்ற மாணவி கூட, விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
அரங்கேறி உள்ளது.
மாணவ, மாணவியரிடம் மதிப்பெண்களை தெரிவிக்கும் முன், அவற்றை உறுதி படுத்தி
பின் தெரிவிக்கவும். மதிப்பெண் குறைந்தால், ஆறுதலான வார்த்தைகளை பேசி
சமாதானம் செய்யலாம். இந்த நேரங்களில் மாணவ, மாணவியரை தனி அறைகளில் தங்க
அனுமதிக்க வேண்டாம்.மாணவ, மாணவியர் வெளியில் செல்வதாக இருந்தால், துணைக்கு
குடும்ப உறுப்பினர் யாரையாவது உடன் அனுப்புவது நல்லது. மாணவ, மாணவியர்
வீட்டை விட்டு வெளியேறினாலோ, உறவினர் வீட்டுக்கு செல்வதாக தெரிவித்து
விட்டு, வேறு எங்கேனும் சென்றாலோ, உடனடியாக அகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கோ,
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கோ புகார் செய்யுங்கள்.கூடுமான வரை மாணவ,
மாணவியரின் புகைப்படத்தை அளிப்பது விசாரணைக்கு உதவியாக இருக்கும். பெற்றோர்
தேர்வு முடிவு வெளியாகும் நேரங்களில் கண்டிப்புடன் நடந்து கொள்வதை
தவிர்த்தாலே, இந்த பிரச்சனைகளுக்கு முடிவு காண முடியும். இவ்வாறு அவர்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...