பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள், கல்லுாரி படிப்புக்கு அடி எடுத்து
வைக்கவும், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யவும், முக்கிய
அடித்தளமான, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. பி.இ.,
மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. கோவை
மாவட்டத்தில், நான்கு மையங்களில் சேர்த்து, 4,732 விண்ணப்பங்கள், முதல்
நாளில் விற்றுத்தீர்ந்தன.
பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச், 5ம் தேதி தொடங்கி, 31ம்
தேதி நிறைவடைந்தது. ஏப்ரல் மாதம் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து
மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில், 37 ஆயிரத்து 126
மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகளை இணையதளங்களில் பார்க்கும் வசதி
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மைய நுாலக கணினி பிரிவுகளை அணுகலாம்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, காலை, 10:00 மணியளவில் கலெக்டர் அர்ச்சனா
பட்நாயக் தலைமையில், முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி முன்னிலையில் கலெக்டர்
அலுவலக அரங்கில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
மேலும், அந்தந்த பள்ளிகளிலும் மாணவர்களின் மதிப்பெண் தொகுப்பு படிவங்கள்,
தகவல் பலகையில் ஒட்டப்படும். தேர்வு முடிவுகளை காணவரும் மாணவர்கள்,
வேலைவாய்ப்பு பதிவுக்கான அனைத்து சான்றிதழ்களையும் தலைமையாசிரியரிடம்
ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ''பள்ளிகளுக்கான மதிப்பெண்
தொகுப்பு படிவங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு, வழித்தட அலுவலர்கள் வாயிலாக
பாதுகாப்பாக கொண்டு சேர்க்கப்படும். காலை 10:00 மணிக்கு அந்தந்த பள்ளிகள்
முன்பு தகவல் பலகையில் ஒட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோல்வி பெறும்
மாணவர்கள், எதிர்மறையான எண்ணங்களை கைவிட்டு மறுத் தேர்வுக்கு தங்களை
தயார்படுத்திக்கொள்ளவேண்டும். மதிப்பெண் மட்டும் வாழ்க்கையல்ல என்பதை
பெற்றோர் மாணவர்களுக்கு உணர்த்துவது அவசியம்,'' என்றார்.
இன்ஜி., விண்ணப்பம் வினியோகம்:
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் அண்ணா
பல்கலை உட்பட, 60 மையங்களில், பி.இ., பி.டெக்., படிப்புக்கான விண்ணப்ப
வினியோகம் நேற்று துவங்கியுள்ளது. கோவையை பொறுத்தவரை, தடாகம் ரோட்டிலுள்ள
அரசு தொழில்நுட்பக் கல்லுாரி, அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி, அவிநாசி
ரோட்டிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, அண்ணா பல்கலை மண்டல மையம் ஆகிய
நான்கு மையங்களில் வழங்கப்படுகின்றன.
கட்டணமாக இதர பிரிவினர், 500 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், 250
ரூபாயும் செலுத்தி விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த
விண்ணப்பங்களுடன், 8 - 12ம் வகுப்பு வரை வெளிமாநிலங்களில் பயின்ற தமிழக
மாணவர்கள், இருப்பிட சான்றிதழும், முதல் தலைமுறை சான்றிதழ், முன்னாள்
ராணுவத்தினர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள்,
மாற்றுத்திறனாளிகள் ஆகிய சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.
அவரவர், இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களுக்கான சான்றிதழ் படிவம், அண்ணா பல்கலை
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிவத்தை பதிவிறக்கம் செய்து,
பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் இணைத்து சமர்ப்பிக்க
வேண்டும்.விண்ணப்பங்கள், ௨௭ம் தேதி வரை வினியோகம் செய்யப்படுகின்றன.
பூர்த்திசெய்த படிவத்தை, மே, 29ம் தேதிக்கு முன்பு சமர்ப்பிக்கவேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...