இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தின்
மாவட்ட வாரியாக மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த பட்டியல் பற்றிய
தகவல்கள் வெளியாகின.
அதில் ‘ துபாய் ’ என்ற பெயரும் இடம் பெற்றிருந்தது
ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கேலியும் கிண்டலுமாக நம்ம `நெட்டிசன்கள்`,
துபாய் எங்கே இருக்கிறது நம்ம தூத்துக்குடி, உசிலம்பட்டி பக்கம் இருக்கிறதா
என்று கிண்டல் அடித்து வருகின்றனர். அத்தோடு வாட்ஸ் அப் மூலம் அரசுத்
தேர்வுத்துறையைக் கிண்டல் அடித்து கலாய்க்கிறார்கள். ஆனால் இதில் பலருக்கு
தெரியாத உண்மை இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி.
தேர்வை துபாயில் வாழும் தமிழர்களின் வாரிசுகள் நமது அரசு தேர்வுத்துறை
மூலம் எழுதுகிறார்கள் என்பதே அது.
இந்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி, டாக்டர் ராஜராஜேஸ்வரியைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.
"இந்தியா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேலை நிமித்தமாக துபாய்க்கு
போய் செட்டில் ஆகிறார்கள். ஆனால் துபாய் நாட்டில் பாடத்திட்டங்கள்
அனைத்தும் அரேபிய மொழி மற்றும் உருது மொழியில் இருப்பதால் தமிழர்கள் பலரும்
நம் தமிழ்நாட்டு பாடத்திட்டத்தைப் பின்பற்றி தங்கள் பிள்ளைகள் படிக்க
வேண்டும் என்று நினைக்கிறார்கள். துபாயில் ‘ கிரசண்ட் ’ என்ற தனியார் பள்ளி
ஒன்று அங்குள்ள தமிழர்களால் நடத்தப்படுகிறது. அங்கு ஆங்கில மீடியம் மூலம்
தமிழ் பாடங்களை நடத்துகிறார்கள். கடந்த 2007 ஆம் ஆண்டு வரை கிரசண்ட் பள்ளி
உயர்நிலைப்பள்ளியாக இருந்து வந்தது.
இப்போது மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அங்கு
படிக்கும் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2
தேர்வை ஆண்டு தோறும் அரசுத்தேர்வுத்துறை மூலம் எழுதுகிறார்கள். இங்கே
எப்படி தமிழகம் தவிர பாண்டிச்சேரிக்கும் நாம் தேர்வு நடத்துகிறோமோ, அதே
மாதிரிதான் துபாய் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு நடத்துகிறோம். துபாயில்
பள்ளி தொடங்கியதுமே நமது ஆங்கிலம் மீடியம் பாட நூல்களை கூரியர் மூலம்
அனுப்பி வைத்து விடுவோம்.
அதே நேரம் அந்தப் பள்ளியில் கலை அறிவியல் படிப்புக்கு மட்டுமே அனுமதி.
அறிவியல் பாடத்திட்டத்திற்கு அனுமதி கிடையாது. ஏனென்றால் அறிவியல்
பாடத்திட்டம் என்றால் பிளஸ் 2 தேர்வின் போது சயின்ஸ் பிராக்டிக்கல்
செய்முறைத்தேர்வு நடத்த வேண்டும்.
அதைக் கண்காணிக்க இங்கிருந்து அதிகாரிகளை அனுப்பி வைக்க வேண்டும்.
இதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்பதால் கணக்கு, வரலாறு, வணிகவியல்
பாடத்திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி. எனவே பொதுத்தேர்வு எழுத துபாயில்
இருந்து பள்ளி மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். இங்கிருந்து ஹால்
டிக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படும். பிறகு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு
வினாத்தாள்களை இந்தியதூதரகத்திற்கு கூரியர் மூலம் அனுப்பி வைப்போம்.
தமிழகத்தில் தேர்வு தொடங்கும் அதே நாளில் இந்திய தூதரகக் கண்காணிப்பாளர்
கண்காணிப்பில் தேர்வுகள் நடக்கும். விடைத்தாள்களை இந்திய தூதரக அதிகாரிகள்
தமிழக அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த ஆண்டு பிளஸ் 2
தேர்வை துபாய் கிரசண்ட் பள்ளி மூலம் 20 மாணவர்கள் எழுதினர். அதில் 19 பேர்
மட்டுமே பாஸ் ஆனார்கள். ஒருவர் தோல்வி அடைந்து விட்டார். எனவே இந்த ஆண்டு
துபாய் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 95 சதவீதம். இந்திய தூதரகம் மூலம்
அவர்களுக்கான மார்க் சீட்டுக்கள் அனுப்பி வைக்கப்படும்"
என்றார் அவர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...