Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

+2 தேர்வு: முன்னாள் ஸ்டேட் டாப்பர்கள், இப்போது என்ன செய்கிறார்கள்?

         +2வில் எடுக்கும் மதிப்பெண்கள்தான் பலருக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அடித்தளமாக உள்ளது. +2வில் ஸ்டேட் டாப்பர்களாக வந்த மாணவர்கள், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? வாழ்க்கையில் எவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறார்கள்? சென்ற வருடம், ஒரு வார இதழுக்காக ஸ்டேட் டாப்பர்கள் சிலரைப் பேட்டி கண்டேன். அதன் முழு வடிவம் இது.
ஐஸ்வர்யா மீனாட்சி:
(2002-ம் வருடம் 1188 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம்)
பத்தாவதில், மூன்று மதிப்பெண்கள் குறைவாகப் போனதால் என்னால் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுக்கமுடியவில்லை. +2வில், டிஏவி பள்ளிக்கு மாறினேன். இந்த மாற்றம் நல்ல பலனை அளித்தது. ஸ்டேட் ஃபர்ஸ்ட் என்கிற இலக்கை அடைந்தேன்.

பிட்ஸ் பிலானியில் சீட் கிடைத்தது. ஆனால், மேற்படிப்புக்கு யு.எஸ் போவதாகத் திட்டம் இருந்ததால் பெற்றோருடன் இருக்கவேண்டும் என்பதற்காக வெங்கடேஸ்வராவில் பி.இ. பண்ணினேன். பல்கலைக்கழக அளவில், ஐந்தாம் இடம் கிடைத்தது. அதன்பிறகு, அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் அமெரிக்க அரசின் ஸ்காலர்ஷிப் உதவியுடன் எம்.எஸ். முடித்தேன். அங்கேயே பகுதிநேரமாக வேலை செய்யவும் வாய்ப்பு கிடைத்தது.

நான் படிக்கும் காலத்தில் எனக்காக அமெரிக்க அரசு 20,000 டாலர் செலவழித்திருக்கும். கூடவே வேலை செய்ததற்காக சம்பளமும் கிடைத்தது (ஒரு வாரத்துக்கு குறைந்தது 20 மணி நேரம் வேலை.) நடுவில் மூன்று மாதம், ஐபிஎம்-மில் இண்டர்ன்ஷிப்பும் கிடைத்தது. ஐபிஎம்-மில் என்னை ஒரு மாணவர்போல நடத்தவில்லை. ஐபிஎம்-மில் வேலை செய்கிறவருக்குண்டான பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. இந்த நல்ல அனுபவத்துடன் படிப்பை முடித்தபிறகு, தாம்சன் ராய்ட்டரில் வேலை கிடைத்தது. 2009ல், பாரிஸில் நடந்த சர்வதேச கணினி மாநாட்டில் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளிருந்து தேர்வான இருபது கட்டுரைகளில் என்னுடையதும் ஒன்று. பிறகு, தொழில்நுட்ப ரீதியாக வேலை செய்யவேண்டும் என்பதற்காக மைக்ரோசாஃப்டில் விண்ணப்பித்தேன். +2வில் மாநில அளவில் முதலில் வந்தால் எந்த வேலைக்கு விண்ணப்பித்தாலும் அது தனிக்கவனத்தை ஏற்படுத்தும். மைக்ரோசாஃப்டில் தேர்வாகி, 2010லிருந்து அங்கு பணிபுரிகிறேன். இப்போது, சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் என்ஜினியர் - லெவல் 3 என்கிற நிலையில் இருக்கிறேன்.

+2வில் முதலிடம் வந்ததால் கிடைத்த ஸ்காலர்ஷிப் தொகையே எப்படியும் ரூ. 75,000 வரை இருக்கும். கூடவே 9 விருதுகளும் கிடைத்தன. ஒரு ஐஐடி மாணவர் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை. ஆனால், கடுமையான உழைப்பினால் எந்த வேலையையும் சிறப்பாக செய்யமுடியும். +2வில் பல லட்சம் மாணவர்களுடன் மோதி, முதலிடத்தைப் பிடித்ததால் அது தந்த தன்னம்பிக்கைக்கு ஈடே கிடையாது.

வித்யா சாகர்:
(2000-ம் வருடம் 1181 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம்)
டிஏவியில் படித்தேன். ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நிறைய மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்கிற குறிக்கோள்தான் இருந்தது. +2வில் மாநில அளவில் முதலிடம் வந்தது, என் அப்பாவுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. தேர்வு முடிவுகளைக் கேள்விப்பட்டு பள்ளிக்குச் சென்றபோது, வாசலிலேயே 100 பேருக்கு மேல் வாழ்த்தி வரவேற்றதை மறக்கவேமுடியாது. ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்ததால் நிறைய ஸ்காலர்ஷிப்களும் பல தொடர்புகளும் கிடைத்தன.

பிட்ஸ் பிலானியில் பி.இ. முடித்து, சென்னையிலுள்ள அமெரிக்கன் மெகாடிரெண்ட்ஸ் என்கிற அமெரிக்க நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை பார்த்தேன். 2005ல், சிங்கப்பூரில், நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரில் எம்.எஸ் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்தேன். அதே பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பகுதி நேரமாக வேலை செய்தேன். 2007 முதல் அங்கேயே காண்டினெண்டல் என்கிற ஜெர்மன் நிறுவனத்தில் 2013 வரை பணிபுரிந்தேன். சீனியர் சாஃப்ட்வேர் என்ஜினியர் பதவி வரை வேலை பார்த்தாலும் அடுத்ததாக மேனேஜ்மெண்ட் பிரிவில் நுழைய ஆர்வம் ஏற்பட்டது.

வேலை செய்துகொண்டிருக்கும்போது எம்.பி.ஏ படிக்க ஆரம்பித்தேன். படிப்பு, வேலை என இரண்டையும் சமாளிப்பது ஒருகட்டத்தில் சவாலாக இருந்தது. படிப்புக்கு அதிக நேரம் ஒதுக்குவதற்காக என் வேலையை ராஜினாமா செய்தேன். எம்.பி.ஏ முடித்தபிறகு, 2014ல் சிங்கப்பூரில் உள்ள எமர்சன் பிராசஸ் மேனேஜ்மெண்ட் என்கிற அமெரிக்க நிறுவனத்தில் என் விருப்பத்துக்கேற்ற மார்க்கெட்டிங் மேனேஜர் வேலை கிடைத்திருக்கிறது. என்ஜினியரிங் பேக்ரவுண்ட் உள்ள நிறுவனம் என்பதால் எனக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது.

கல்லூரி பாரதி:
(2003-ம் வருடம் 1188 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம்)
மாநிலத்தில் முதலாவதாக வரவேண்டும் என்று நினைத்துதான் படித்தேன். 10வதில் ஆரம்பித்து அடுத்த மூன்று வருடங்களுக்கு சென்னையைத் தாண்டி எங்குமே போகவில்லை. ஒரே படிப்பு மயமாகத்தான் இருந்தேன். டிவி, பாட்டு வகுப்புகள் என என் விருப்பங்களை சிலகாலம் ஒதுக்கிவைத்தேன். +2வில் நினைத்ததைச் சாதித்தவுடன், பிட்ஸ் பிலானியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். பிறகு, ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனத்தில் இரண்டு வருடங்கள் வேலை செய்தேன்.

திருமணத்துக்குப் பிறகு புனேவில் ஒருவருடம் வேலை பார்த்துவிட்டு, 2011ல், எம்.எஸ் படிக்க அமெரிக்கா சென்றேன். பி.இ. முடித்தபிறகு எம்.எஸ் படிக்காததற்குக் காரணம், வேலை அனுபவம் வேண்டும் என்று நினைத்தேன். சம்பாதித்தால்தான் மேற்படிப்புக்காகப் பணம் சேமித்து, அப்பாவைத் தொந்தரவு பண்ணாமல் இருக்கமுடியும் என்று எண்ணினேன். நான், என் கணவர் இருவருமே எம்.எஸ் படிப்பை அமெரிக்காவில் முடித்தோம். பிறகு, இருவருக்கும் அங்கேயே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
+2வில் முதலிடம் வந்ததால் நிறைய பலன்கள். பிலானியில் 30,000 ரூபாய்க்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. பிலானியில் முதல் நாளன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், எல்லா மாநில ஸ்டேட் டாப்பர்களுக்கும் துணை வேந்தர் தனியாக மரியாதை அளித்தார். தமிழ்நாட்டிலிருந்து பிலானியில் சேர்ந்தவர்களுக்கு என்னை நன்றாகத் தெரிந்திருந்தது.

வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, ஸ்டேட் டாப்பர் என்பதற்கு ஒரு தனி மதிப்பு இருக்கத்தான் செய்தது. +2வில் முதலிடம் பெற்று சாதனை செய்ததால் மற்ற வேலைகளிலும் நீ பொறுப்பாக இருப்பாய் என்று நம்பினோம், உன்மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது என்று என்னை நேர்காணல் செய்தவர்கள் பிறகு கூறினார்கள். அதேசமயம் ஸ்டேட் டாப்பர் என்பதன் மதிப்பு, பெருமையெல்லாம் நாள் போகப்போக குறையத்தான் செய்யும். அதன்பிறகு வேலையில் நீங்கள் காட்டும் ஈடுபாடு, பங்களிப்புதான் உரிய பலனைக் கொடுக்கும்.

ஸ்டேட் டாப்பர் ஆனதால் +2 தேர்வை எதிர்கொள்பவர்களுக்கு என்னால் அறிவுரை சொல்லமுடிந்தது. முதலிடம் வந்ததால் கடவுள் மீதும் அதிக நம்பிக்கை வந்தது. என்னைப் போலவே பல லட்சம் பேர் +2வில் உழைத்துப் படித்தார்கள். ஆனால், நான் மட்டும் முதலிடம் வந்ததற்கு கடவுளின் கருணையும் ஒரு காரணம் என்று எண்ணுகிறேன்.

சுஜனா :
(2005-ம் வருடம் மாநிலத்தில் முதலிடம். +2 தேர்வில், முதல்முறையாக 1190 மதிப்பெண்கள் எடுத்தவர்)
+2 வில் ஸ்டேட் டாப்பர் ஆனபிறகு அண்ணா பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் கிடைத்தது. எனக்கு இயற்பியல், கணிதத்தில் ஆர்வம் அதிகம். அதற்கு மெக்கானிக்கல்தான் சரிவரும் என்று நினைத்தேன். பிறகு, அமெரிக்காவில் எம்.எஸ் படித்தேன். இப்போது இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினியராகப் பணியாற்றுகிறேன்.

ஸ்டேட் டாப்பராக வந்ததால் என்னுடைய அணுகுமுறை மாறிப்போனது. எதையும் கேள்வி கேட்டுப் பழகவேண்டும், புரிதலுடன் ஒரு வேலையைச் செய்யவேண்டும் என்கிற மனப்பான்மை உருவானது. +2 முடிவுகள் வந்த தினத்தை மறக்கமுடியாது. பாராட்டுகள், மீடியா பேட்டிகள் என பரபரப்பாக இருந்தேன். மீடியாவில் வந்ததால் வெளியே சிலர் என்னை அடையாளம் தெரிந்துகொண்டார்கள். அந்தப் புகழெல்லாம் சில நாள்கள்தான். அதன்பிறகும் அதே பெருமையை வைத்து எல்லா இடங்களிலும் சலுகை கிடைக்காது.

இப்போது எல்லோரும் என்ஜினியரிங்தான் படிக்கிறார்கள். நமக்கு என்ன விருப்பம் என்று கண்டுபிடித்து அதில் ஈடுபாடு காட்டவேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரே நேரத்தில் முயற்சி செய்வதற்குப் பதிலாக, எது உங்கள் விருப்பம், எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருந்து உங்கள் முயற்சிகளை ஓர் இலக்கு நோக்கி நகர்த்தவேண்டும். உதாரணமாக, +2 சமயத்தில், ஐஐடி அல்லது அரசுத் தேர்வு போன்றவற்றில் எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதில் சரியாக முடிவெடுக்கவேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive