கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மே 19 வரை
விண்ணப்பங்களை பெற்றோருக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என, தனியார்
பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உத்தரவிட்டார்.
அதோடு, நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெறும்போது அதற்கான
ஒப்புகைச்சீட்டையும் தனியார் பள்ளிகள் பெற்றோர்களுக்கு வழங்க வேண்டும் என,
அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிக்
பள்ளிகள் ஆய்வாளர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைத்து
ஆய்வு அலுவலர் அலுவலகங்களிலும் நகலெடுத்து பெற்றோருக்கு விநியோகிக்கப்பட
வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட அறிவிப்பு:-
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் பொருளாதார
ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய
வேண்டும். இந்த ஒதுக்கீட்டுக்கு மே 3-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள்
வழங்கப்பட வேண்டும்.
ஆனால், இதுவரை தனியார் பள்ளிகளில் நடைமுறை தொடங்கப்படவில்லை என தகவல்கள்
பெறப்படுகின்றன. இதையடுத்து, ஆய்வு அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட உத்தரவுகள்
பிறப்பிக்கப்படுகின்றன.
மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் ஆலோசனைப் பெற்று சிறுபான்மையில்லாத தனியார்
பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் (எல்.கே.ஜி. மற்றும் 1-ஆம் வகுப்பு) பள்ளி
வாரியாக உள்ள மொத்த இடங்கள், 25 சதவீத இடங்கள் ஆகிய விவரங்களை இணையதளம்,
தகவல் பலகைகள், பத்திரிகைகள் மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும்.
மே 19-ஆம் தேதி கடைசி: இந்த இடங்களுக்கான விண்ணப்பங்கள் மே 19 வரை
விநியோகிக்கப்பட வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க
அன்றைய தினமே கடைசி. தேர்வு செய்யப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட
மாணவர்களின் விவரங்கள் தகுந்த காரணங்களுடன் மே 21-ஆம் தேதி வெளியிடப்பட
வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கும் மேலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால்,
பெற்றோர்களின் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு நடத்தப்பட வேண்டிய
நாள் மே 25 ஆகும். 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தேர்வு செய்யப்பட்ட
மாணவர்களின் விவரம் பள்ளித் தகவல் பலகையில் வெளியிடப்பட வேண்டிய நாள் மே 25
பிற்பகல் 2 மணி ஆகும். மாவட்ட அலுவலகங்களில் இந்த விவரங்களைச் சமர்ப்பிக்க
கடைசி தேதி ஜூன் 2.
இந்த கால அட்டவணையை தவறாமல் பின்பற்ற வேண்டும். தனியார் பள்ளிகளில் பிரதான
நுழைவு வாயிலிலும் அனைத்துத் தகவல்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட வேண்டும்.
இந்த மாணவர் சேர்க்கை தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட
வேண்டும்.
அனைத்து ஆய்வு அலுவலர் அலுவலகங்களிலும் இந்தச் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை நகலெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பூர்த்திசெய்த விண்ணப்பங்களை ஆய்வு அலுவலகங்களில் பெற்று, பெற்றோருக்கு
ஒப்புகைச் சீட்டு வழங்கி, உரிய பதிவேடு பராமரித்து சம்பந்தப்பட்ட
பள்ளிகளுக்கு மே 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும்.
இந்த மாணவர் சேர்க்கைக்கு பள்ளிகள் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது.
தனியார் பள்ளிகளுக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் அரசுப் பள்ளி, அரசு
உதவிப் பெறும் பள்ளி இருப்பினும் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச்
சட்டத்தின் படி இடஒதுக்கீடு கோரினால் மறுக்கப்படாமல் அவர்களுக்கு சேர்க்கை
வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...