பிளஸ் 2 உயிரியல் தேர்வில் 195 மதிப்பெண் பெற முடியாது என்று கருதி, மாணவி
ஒருவர் விடைத்தாள் முழுவதையும் பேனாவில் அடித்து கோடு போட்டுள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 7) வெளியாக உள்ளன.
மன அழுத்தம், பயம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழக அரசின்
104 தொலைபேசி சேவை உளவியல் ஆலோசனைகள் அளித்து வருகிறது.
104 தொலைபேசி சேவைக்கு புதன்கிழமை காலையில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவியின் தந்தை ஒருவர் பேசினார்.
தனது மகள் உயிரியல் தேர்வு எழுதிய அன்று, தேர்வு எழுதி முடித்த பின்பு
தனது விடைத்தாளை மதிப்பிட்டுள்ளார். உயிரியல் தேர்வில் 195 மதிப்பெண் பெற
வேண்டும் என்பது அவர் எண்ணமாக இருந்துள்ளது.
விடைத்தாளை மதிப்பிட்டபோது ஒரு மதிப்பெண் கேள்விகள் நான்குக்கு விடை தவறாக
இருந்ததாகத் தோன்றியுள்ளது. இதனால் தனக்கு 195 மதிப்பெண் கிடைக்காது என்று
கருதி, விடைத்தாள் அனைத்தையும் கோடு போட்டு அடித்துக் கொடுத்துவிட்டு
வந்துவிட்டார். வீட்டிலும் இதனைத் தெரிவிக்கவில்லை.
தேர்வு முடிவுகள் நெருங்க நெருங்க, பயத்தின் காரணமாக இதை இப்போதுதான்
தெரிவித்ததாகவும், மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தொலைபேசியில்
அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து 104 சேவை அதிகாரிகள் கூறியது:
மாணவியின் செயலைக் கொண்டு வீட்டில் அவரை யாரும் திட்டவோ, கடுஞ்சொற்களை
பயன்படுத்தவோ வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் இந்தத்
தேர்வுக்கான மாற்று வழிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.
வேறு ஒரு மாணவர், சக மாணவர் ஒருவருக்கு தேர்வு முடிவு குறித்த பயத்தின் காரணமாக தற்கொலை எண்ணம் எழுந்துள்ளது என்று கூறி அழைத்தார்.
அவரிடம் பேசியபோது, அந்த மாணவர் தான் கணக்குத் தேர்வு சரியாக எழுதவில்லை.
தோல்வி பயத்தின் காரணமாக தனது பெயரைக் குறிப்பிடாமல் நண்பனுக்கு என்று
ஆலோசனை கேட்க முயன்றது தெரியவந்தது
சென்னையைக் காட்டிலும் திண்டுக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட பிற
மாவட்டங்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன. 80 சதவீதம் மாணவர்களும், 20
சதவீதம் பெற்றோர்களும் ஆலோசனைகளைப் பெறுகின்றனர் என்று 104 சேவை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...