ஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் படிப்புகளில்
சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜே.இ.இ.) முதன்மைத் தேர்வு
ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வில், ஜே.இ.இ. பிரதான தேர்வு தகுதிப் பட்டியலில் முதல் 1.50 லட்சம் இடம் வரை பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்.
என்ஐடி, ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர்
சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி
வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வருகிறது. முதலில் பிரதான (மெயின்) தேர்வு
நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, முதன்மை (அட்வான்ஸ்டு) தேர்வு
நடத்தப்படும்.
2015-ஆம் ஆண்டுக்கான பிரதான தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வை நாடு முழுவதிலுமிருந்து 10.25 லட்சம் பேர் எழுதினர்.
இதற்கான முடிவுகள் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில், இயற்பியல்
பாடக் கேள்விகள் கடினமாக இருந்ததால், நிகழாண்டு பொதுப் பிரிவு கட்-ஆஃப்
105-ஆகக் குறைந்தது.
தமிழகத்திலிருந்து பிரதான தேர்வுக்குப் பதிவு செய்த 1.73 லட்சம் பேரில்
11,500 பேர் குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றனர். இதன்
மூலம், இவர்கள் முதன்மைத் தேர்வை எழுதும் தகுதியையும் பெற்றனர். முதன்மைத்
தேர்வானது மே 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வை நாடு முழுவதிலுமிருந்து பொதுப் பிரிவைச் சேர்ந்த 75,750
பேர், ஓபிசி பிரிவைச் சேர்ந்த 40,500 பேர், எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த
22,500 பேர், எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த 11,250 என மொத்தம் 1.50 லட்சம் பேர்
எழுதவுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...