பெங்களூரு: சமீபத்தில்
வெளிவந்த, 10ம் வகுப்பு முடிவில், ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத பள்ளிகள்
மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கும் நோக்கில், அந்தந்த பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, கல்வித் துறை தீர்மானித்து உள்ளது.
கடந்த 2014 - 2015ம் கல்வியாண்டு, 10ம் வகுப்பு தேர்வில், அரசு நிதியுதவி
பெறும் இரண்டு பள்ளிகள், நிதியுதவி பெறாத, 34 பள்ளிகளில், ஒரு மாணவரும்
தேர்ச்சி பெறாமல், 'பூஜ்ய' சாதனை காட்டியுள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக,
ராமசாமி பாளையா இமானுவேல் உயர்நிலைப் பள்ளி, நாகஷெட்டி பாளையா மஞ்சுநாத
சாமி உயர்நிலைப் பள்ளி, பைரசந்திரா குருராஜா உயர்நிலைப் பள்ளி, கோரி பாளையா
விஸ்டம் உயர்நிலைப் பள்ளி, நாயண்டஹள்ளி ரோஹிணி இண்டர்நேஷனல் பப்ளிக்
உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில், ஒரு மாணவர் கூட, 10ம் வகுப்பு தேர்வில்
தேர்ச்சி பெறவில்லை. 'திறமையான ஆசிரியர்கள் இல்லாததால், இப்பள்ளிகளில்
குழந்தைகளை சேர்க்க வேண்டாம்' என்று, பெற்றோருக்கு, கல்வித்துறை
உத்தரவிட்டு உள்ளது. இப்பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யும்படியும்
அறிவுறுத்தி உள்ளது.
கல்வித் துறை கமிஷனர், மொஹமத் மொஹிசின் வெளியிட்டுள்ள அறிக்கை:
சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, உதவி இயக்குனர்கள் நேரில் சென்று, 10ம்
வகுப்பு தேர்வில் மோசமான நிலை ஏற்பட்டதற்கான காரணத்தை விசாரிக்க வேண்டும்.
கர்நாடகா கல்விச் சட்டம், 39வது விதிமுறையின் கீழ், அப்பள்ளிகளின்
அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மூடப்படும் பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களை, அருகிலுள்ள வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் குறிப்பிட்டு உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...