பத்தாம் வகுப்புத்தேர்வில் கையெழுத்துக் குளறுபடி, நடுவில் சில பக்கங்கள்
மாயமானது தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் மற்றும் தேர்வு மைய
கண்காணிப்பாளரிடம், தேர்வுத் துறை இயக்குனரகம் விசாரணை நடத்தி உள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ம் தேதி துவங்கி, ஏப்., 10ம் தேதி
முடிந்தது; மே 21ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில்,
10ம் வகுப்புத்தேர்வில், முறைகேடு நடந்துள்ளதாக சந்தேகப்படும், 50க்கும்
மேற்பட்ட விடைத்தாள்கள், மண்டல அலுவலகங்களில் இருந்து, சென்னை தேர்வுத்
துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை, தேர்வுத்
துறை இயக்குனர் அலுவலக அதிகாரிகள் சரிபார்த்ததில், பல குளறுபடிகள் தெரிய
வந்துள்ளன.
* சில விடைத்தாள்களில், எஞ்சிய பக்கங்களைக் காணவில்லை.
* சில விடைத்தாள்களில், மை கொட்டப்பட்டு உள்ளது.
* சில விடைத்தாள்களில், நடுவில் சில பக்கங்களைக் காணவில்லை.
* சிலவற்றில், மாணவர்களின் கையெழுத்து ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களில்
உள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர்,
தேர்வு அறைக் கண்காணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட
பொறுப்பாளருக்கு, தேர்வுத் துறை, 'நோட்டீஸ்' அனுப்பி, நேரில் ஆஜராக
உத்தரவிட்டது. இதன்படி, மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும், நேற்று தேர்வுத் துறை
இயக்குனர் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் தனி அறையில், மெட்ரிக்
பள்ளி இணை இயக்குனர் ஸ்ரீதேவி, தனித்தனியே விசாரணை நடத்தினார். மாணவர்,
தேர்வு அறைக் கண்காணிப்பாளரின் வாக்குமூலம், எழுத்துப்பூர்வமாக பதிவு
செய்யப்பட்டது. ஆள் மாறாட்டம் நடந்துள்ளதா; விடைத்தாள்களின் பக்கங்களை
கிழித்தது யார் மாணவனா, கண்காணிப்பாளரா அல்லது வேறு யாருமா; கையெழுத்து மாற
என்ன காரணம்; நடுவில் பக்கங்கள் காணாமல் போக என்ன காரணம் போன்ற கோணங்களில்
விசாரணை நடந்து, அறிக்கை தயார் செய்யப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...