சென்னையில் 7 சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த பள்ளிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த என்.செல்வதிருமால் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு இந்திய குடிமகனும் தேசிய கொடியையும், தேசிய கீதத்தையும் மதிக்க வேண்டியது கடமை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள முக்கியமான 7 சிபிஎஸ்இ பள்ளிகளில் காலையில் நடக்கும் இறைவழிபாட்டில் (அசெம்பிளி) தேசிய கீதம் பாடப்படுவதில்லை. அதனால் அங்கு பயிலும் மாணவர்கள் தேசிய கீதத்தின் முக்கியத்துவத்தை அறிய வாய்ப்பில்லை.
எனவே, மேற்கண்ட பள்ளிகளில் தினமும் காலையில் நடக்கும் அசெம்பிளியில் தேசிய கீதம் இசைக்கவோ அல்லது பாடவோ உத்தரவிட வேண்டும் என்று சென்னையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான மண்டல அதிகாரியிடம் கடந்தாண்டு ஆகஸ்டு 25-ம் தேதி மனு கொடுத்தேன். ஆனால், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து கடந்தாண்டு அக்டோபர் மாதம் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் டெல்லியில் உள்ள உதவி செயலாளரிடம் மனு அளித்தேன்.
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய “வந்தே மாதரம்” பாடலைப் பாடுகின்றனர். வேறு சில பள்ளிகளில் அவர்களுக்கான பள்ளிக்கூட கீதத்தைப் பாடுகிறார்கள். மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் அனைத்து மாநிலங்களின் அரசுப் பள்ளிகளில் மட்டும் தினமும் காலை தேசிய கீதம் பாடப்படுகிறது. இதுபோல சிபிஎஸ்இ உட்பட அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் பாடவும், சிபிஎஸ்இ பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கும்போது இதனை ஒரு நிபந்தனையாகச் சேர்க்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் கொண்ட அமர்வு இவ்வழக்கை விசாரித்து, சென்னையில் உள்ள முக்கியமான 7 சிபிஎஸ்இ பள்ளிகளையும் இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...