"உயர் கல்வியில் எந்த படிப்பை தேர்வு
செய்தால் அதிக சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும்" என கல்வியாளர்
ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனைகள் வழங்கினார்.
தினமலர்
வழிகாட்டி நிகழ்ச்சியில் 'படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பு' என்ற தலைப்பில்
அவர் பேசியதாவது: எதிர்காலத்தில் எந்த துறைகளில் வளர்ச்சி திட்டங்கள்
மேற்கொள்ளப்படும் என்பதை ஆலோசித்து அத்துறை சார்ந்த படிப்புகளை மாணவர்கள்
தேர்வு செய்வதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போது தான்
எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும். குறிப்பாக, ஒரு கம்பெனியில் ஊழியர்
ஒருவருக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கினால் அவரிடமிருந்து ரூ.2 லட்சம்
வருவாயை அந்நிறுவனம் எதிர்பார்க்கும். இதன் அடிப்படையில் தான் சம்பளம்
நிர்ணயிக்கப்படுகிறது. இது அந்நிறுவனம் சார்ந்த துறையில் எதிர்கால வளர்ச்சி
இருந்தால் தான் இது சாத்தியம் ஆகும். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில்
நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்றால் வேளாண்மை, மின்சாரம், உள்கட்டுமானம்,
தகவல் தொழில்நுட்பம் உட்பட சில துறைகளில் கூடுதல் நிதி ஒதுக்க
பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில் பொறியியல் படிப்புகளில்,
கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.இ.இ., சிவில் பிரிவுகளுக்கு சிறந்த எதிர்காலம்
உள்ளது.
இவற்றை
தேர்வு செய்வதில் மாணவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். 87 சதவீதம்
பொறியியல் மாணவர்களுக்கு ஐ.டி., துறையில் தான் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
இதையடுத்து மெக்கானிக் இன்ஜி., படிப்பை தேர்வு செய்யலாம். 4 சதவீதம்
பெண்கள் தான் இப்படிப்பை தேர்வு செய்கின்றனர். இதனால் இப்பிரிவில்
பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் காத்திருக்கின்றன. தேவையான 'கட்ஆப்'
மதிப்பெண்கள் இருந்தால் மருத்துவ படிப்பை தேர்வு செய்யலாம்.
கிடைக்காதபட்சத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை தொடர்பான படிப்புகளை
தேர்வு செய்யலாம். இதற்கு அடுத்து, கால்நடை படிப்பிற்கும், பாரா மெடிக்கல்
படிப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாம். தற்போது பி.டெக்.,
(பால்வளம் தொழில் நுட்பம்), கோழி வளர்ப்பு பற்றிய படிப்புகள் முடித்தால்
அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது. கலைப் பிரிவுகளில்
பி.ஏ., பொருளியல் பாடத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதன்பின் சட்டப்
படிப்பை தேர்வு செய்யலாம். 2018 ம் ஆண்டில் வக்கீல்களுக்கு பற்றாக்குறை
ஏற்படும். சட்டப் படிப்பு முடித்தால் கம்பெனி செகரட்டரிஷிப் தேர்வில்
தேர்ச்சி பெற்றால் பெரிய தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசகர் பணிகள்
காத்திருக்கின்றன. பி.டெக்., கட்டடக் கலை, பி.எஸ்சி., பாரஸ்டிரி
படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...