சென்னை, டி.பி.ஐ., வளாகத்திலுள்ள பாடநூல் விற்பனை மையத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 புத்தகங்களுக்குப் பதில், தேர்வுகள் முடிந்த, மூன்றாம் பருவ புத்தகங்களை விற்றனர்.
சமச்சீர் கல்வி பாடத் திட்ட புத்தகங்கள் தனியாரிடம் டெண்டர் மூலம் அச்சடித்து, பின், பள்ளிகள், பாடநூல் கழகம் மற்றும் தனியார் மையங்கள் வழியே விற்கப்படுகின்றன.
பள்ளி ஆண்டுத் தேர்வுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதிய கல்வியாண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படுகின்றன.முதலில், சென்னை, எழும்பூர் மாநில மகளிர் பள்ளியில் புத்தக வினியோகம் துவங்கியது. பின், மற்ற பள்ளிகளில் வழங்கப்படுகின்றன.ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் இன்னும் புத்தகங்கள் வழங்கவில்லை.எனவே, இப்பள்ளிகளின் மாணவ, மாணவி யர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 புத்தகங்கள் வாங்க, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனை மையத்துக்கு படையெடுக்கின்றனர்.ஆனால், இந்த மையத்திற்கு இன்னும் புதிய புத்தகங்கள் வரவில்லை. மாறாக, தற்போது ஆண்டுத் தேர்வு நடந்து கொண்டிருக்கும் வகுப்புகளுக்கான, மூன்றாம் பருவ புத்தகங்களை விற்பனை செய்வதாக, விற்பனை அலுவலர்கள் தெரிவித்தனர்.இதனால், நேற்று, புத்தகம் வாங்க வந்த பலர் ஆத்திரமடைந்து விற்பனை மையத்தை முற்றுகையிட்டனர். நிலைமையை சமாளிக்க, அங்கிருந்த அலுவலர்கள், தனியார் புத்தகக் கடைகளின் அலைபேசி எண்களை கொடுத்து அனுப்பி வைத்தனர்.ஆனால், தனியார் கடைகளில் புத்தகங்கள் அதிக விலைக்கு விற்பதால், பொதுமக்கள் மேலும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, 'தனியார் பள்ளிகளில் கேட்டால், 'டி.பி.ஐ., வளாகத்திலுள்ள மையத்தில் புத்தகங்கள் வாங்குங்கள்' என்கின்றனர். இங்கு வந்தால், மூன்றாம் பருவ புத்தகங்கள் தான் விற்பதாக சொல்கின்றனர்' என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...