பள்ளி வேலை நாட்கள் முடிந்ததால், தமிழகத்தில் பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில், மதிய உணவு நிறுத்தப்பட்டு உள்ளது; மாணவ, மாணவியர் பட்டினியுடன் பரீட்சை எழுதும் நிலை ஏற்பட்டு உள்ளது.
புகார்கள்:
ஆனால், இத்திட்டத்திற்கான கொள்முதலில் ஊழல் நடப்பதாகவும், மாணவ, மாணவியருக்கு சரியாக உணவு அளிக்கவில்லை என்ற புகார்களும் உள்ளன. இதன் உச்சகட்டமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மார்ச் 31ம் தேதியுடன் சத்துணவு நிறுத்தப்பட்டு உள்ளது. விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள், மதியம் உணவு சாப்பிட சென்ற போது, சத்துணவு மையம்; சமையலறைகள் பூட்டி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ, மாணவியரும், பிற்பகலில் பள்ளிக்கு வந்த ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரும், பட்டினியுடன் இருக்கும் நிலை ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியத்திலுள்ள, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதி பள்ளிகளில், இந்த நிலை ஏற்பட்டது.
சத்துணவு அமைப்பாளர்களிடம் மாணவ, மாணவியர் கேட்ட போது, 'அரசு உத்தரவுப்படி, மார்ச் 31 வரை மட்டுமே சத்துணவு போட முடியும்; இனி, ஜுன் மாதம் பள்ளி திறந்த பின்தான், மதியஉணவு கிடைக்கும்' என்றனர். 'எங்களைப் போன்ற ஏழைக் குடும்பத்தில், பெற்றோர், காலையிலேயே கூலி வேலைக்குச் சென்று விடுவர்; நாங்கள் பள்ளி வந்து மதிய உணவு சாப்பிடுவோம்; மதிய உணவை திடீரென நிறுத்தி விட்டனர்; மாலையில் பெற்றோர் வீட்டுக்கு வந்து சமைக்கும் வரை, பசியுடன் இருக்க வேண்டும்' என, மாணவ, மாணவியர் புலம்பினர்.
200 நாட்கள்:
இதுகுறித்து, சத்துணவு அமைப்பாளர்கள் கூறியதாவது:எங்களுக்கு, 200 நாட்கள் மட்டுமே வேலை நாள்; அதற்கு மேல் வேலை நாட்கள் இருந்தால், அரிசி, பருப்பு, சமையல் கூலி, செலவு எதும் கிடைக்காது; இந்தாண்டு, மார்ச் 31ம் தேதியுடன், 200 நாட்கள் முடிந்து விட்டன;
ஆனால், ஏப்., 23 வரை பள்ளிகள் செயல்படும். 'ஆடிட்டிங்'கில், 200 நாட்களுக்கு மேல் ஏற்காததால், சத்துணவு தர இயலாது. ஆரம்பப் பள்ளிகளில் மட்டும், ஏப்., 30வரை சத்துணவு கிடைக்கும். ஒருசில மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியரிடம் கூடுதல் நாட்களுக்கு அனுமதி பெற்று, உணவு பரிமாறப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தமிழக சத்துணவு அமைப்பாளர்கள் சங்க, முன்னாள் பொதுச் செயலர் மேகநாதன் கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வேலை நாட்களும், மதிய உணவு தரும் நாட்களும் வேறுபடுவதால், இந்த சிக்கல் தொடர்கிறது. இதற்கு கல்வித் துறை, சமூகநலத் துறையும் சேர்ந்து, கூடுதல் நாட்களுக்கு மதிய உணவு தரும் உத்தரவை, முன்கூட்டியே பிறப்பித்தால், இந்த சிக்கல் தீரும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...