தேர்வுத்துறை சேவை மையங்களில், போதிய ஊழியர்
இன்றி மற்றும் முறையான அறிவிப்பின்றி, ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு
விண்ணப்பிப்போர் அவதிக்கு ஆளாகின்றனர். விண்ணப்பதாரர்கள், நாள் கணக்கில்
காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர்
பணிக்கு, அரசுத் தேர்வுத்துறை சார்பில், மே 31ம் தேதி எழுத்துத் தேர்வு
நடக்கிறது. இதற்கு கடந்த, 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் பணி துவங்கியது.
மே 5ம் தேதி கடைசி நாள்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகக்
கட்டுப்பாட்டில், நான்கு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த
மையங்களில் போதுமான ஆட்கள் இல்லை. கல்வி அலுவலக ஊழியர்கள் தேர்வு பணியில்
உள்ளனர். மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், விடுப்பில் சென்று விட்டனர்.
பட்டதாரி ஆசிரியர்கள், 10ம் வகுப்பு விடை திருத்தும் பணியில் உள்ளனர்.
துவக்கப் பள்ளிகள் வரும் 30ம் தேதி வரை நடக்கின்றன.
இதனால், விண்ணப்பம் வாங்கும் பணிக்கு போதிய
ஆட்கள் இன்றி, மாவட்ட கல்வி அலுவலகங்கள் திணறுகின்றன. பத்தாம் வகுப்பு
கல்வித் தகுதி என்பதால், 10ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை முடித்துள்ள
லட்சக்கணக்கானோர், விண்ணப்பிக்க வருகின்றனர். அதனால், தேர்வுத் துறை சேவை
மையங்களில், கூட்டம் அலை மோதுகிறது.
எந்த மாவட்டத்தினர், எங்கே விண்ணப்பிப்பது என்ற
குழப்பம் ஏற்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு அடையாள அட்டை பதிவு செய்துள்ள
மாவட்டத்தில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என, நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது.
அதனால், பல மணி நேர காத்திருப்புக்கு பின்,
பலர் விண்ணப்பிக்க முடியாமல், வேறு மாவட்டங்களுக்கு ஓடும் நிலை உள்ளது.
பெரும்பாலானோர், படிக்கும்போது ஒரு மாவட்டத்திலும், தற்போது வேறு
மாவட்டத்திலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இந்த நடைமுறை சிக்கலைக் கூட
தேர்வுத்துறை புரிந்து கொள்ளாமல், இன்னும் பழமையான நடைமுறையில் உள்ளதாக
விண்ணப்பதாரர்கள் குமுறுகின்றனர்.
மின்வெட்டு: சேவை மையங்களில்,
விண்ணப்பதாரர்களுக்கான நிபந்தனைகள் குறித்த அறிவிப்புப் பலகை இல்லை.
இதனால், விண்ணப்பதாரர்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகியுள்ளனர். விண்ணப்பம்
வாங்கச் செல்லும் இடத்தில், கணினி புகைப்படம் எடுக்கப்படும் என்ற நிலை
உள்ளது. ஆனால், அவ்வப்போது மின் வெட்டு ஏற்படுகிறது. மின்சாரம் வரும்வரை
விண்ணப்பதாரர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பல இடங்களில்
தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.
நேர்முக தேர்வுக்கு பின்தான் சான்றிதழ்
சரிபார்ப்பு நடக்கும். ஆனால், தற்போதே அசல் சான்றிதழ் கேட்பதால்,
விண்ணப்பதாரர்கள் வெளியூர்களில் இருந்து அசல் சான்றிதழை கொண்டு வந்து,
கூட்ட நெருக்கடியில் வைத்துக்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.
விண்ணப்பம் வழங்கும் ஊழியர்களிடம், அசல்
சான்றிதழா என்பதை சரிபார்க்கும் தொழில்நுட்பமோ அல்லது ஆய்வுசெய்ய கால
அவகாசமோ இல்லை. இப்படி, ஒட்டுமொத்த குளறுபடிகளின் கூடாரமாக விண்ணப்ப
மையங்கள் உள்ளதாக, விண்ணப்பதாரர்கள் புலம்புகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...