பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் வாயிற் கூட்டம் கோவை நிர்மலா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் எம்.கனகராஜன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.செந்தூரன் தலைமை வகித்தார்.மாநிலப் பொருளாளர் எம்.ஜம்பு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் பணியைக் காட்டிலும் கூடுதலாக அரசின் நலத் திட்டங்களை நிறைவேற்றும் பணி வழங்கப்படுகிறது. இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, ஆசிரியர்கள் கற்பிக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு தாள் ஒன்றுக்கு ரூ.7.50 மட்டுமே வழங்கப்படுகிறது. இதை ரூ.20 ஆக உயர்த்திக் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநரிடம் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கூடுதல் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு 8 மணி வரையிலும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு பயணப் படி வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எல்.சிவக்குமார், நிர்வாகிகள் எம்.மைக்கேல்ராஜ், என்.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், ஆசிரியர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...