Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உடந்தையுடன் முறையில்லாமல் நடக்கும் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகளால் மன உளைச்சலை ஏற்படுத்தும் சம்பவமும், அதனால் அரசு ஊழியர்கள் தற்கொலை செய்வது அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும்  தொடர்கதையாகி வருகிறது. அரசு ஊழியர்களின் மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாக இருப்பது பணியிட மாற்றம்தான் என்றும் கூறப்படுகிறது.



 வழக்கமாக, அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி செய்யக்கூடாது என்பது விதியாக உள்ளது. இது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும். ஆனால், இந்த விதிமுறைகள் அரசு அலுவலகங்களிலோ, அரசு பள்ளிகளிலோ, ஏன் போலீஸ் நிலையங்களில் கூட இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. உயர் அதிகாரிகளுக்கு பிடித்த அரசு ஊழியர்கள் என்றால் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் ஒரே இடத்தில் பணியாற்ற முடிகிறது. ஆனால், தனக்கு பிடிக்காத ஊழியர்களோ அல்லது ஆசிரியர்களோ ஒரு சில மாதம் பணியாற்றினால்கூட, நிர்வாக நடவடிக்கை என்ற போர்வையில் உடனடியாக அவர்களை பணியிடம் மாற்றம் செய்து மனஉளைச்சல் ஏற்படுத்துகிறார்கள்.

படாதபாடுபடும் ஊழியர்கள்

ஒரு அரசு ஊழியரை இப்படி பணியிடம் மாற்றம் செய்தால், அவர் தனது குடும்பத்தை கூட்டிக் கொண்டு வேறு இடத்திற்கு செல்ல புதிய வீடு வாடகைக்கு பார்க்க வேண்டும். குழந்தைகளை பள்ளியில் சோ்க்க படாதபாடு பட வேண்டும். குழந்தைகள் கல்லூரியில் படித்தால், தான் ஒரு இடத்திலும், குழந்தைகளை வேறு இடத்திலும் வைத்து கவனிக்க வேண்டும். இதனால், அந்த அரசு ஊழியர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார். இதற்கு பயந்து, நோ்மையான அதிகாரிகள் கூட உயர் அதிகாரிகள் சொன்ன வேலையை பார்த்துவிட்டு அமைதியாக தான் உண்டு, தன் வேலை உண்டு என்று அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டும் காணாததுபோல் செல்லும் நிலைகூட ஏற்படுகிறது.

இதில், அரசு ஆசிரியர்கள் நிலைதான் பரிதாபகரமாக உள்ளது. பொதுவாக, ஒரு குடும்பத்தில் கணவர் தனியார் பள்ளியில் வேலை பார்த்தால், மனைவி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுவார். இதனால், கணவர் மற்றும் குழந்தைகள் ஒரு இடத்திலும், மனைவி ஒரு இடத்திலும் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அரசு பள்ளியில் வேலைபார்க்கும் தனது மனைவிக்கு டிரான்ஸ்பர் கேட்டு கணவர் படாதபாடு படவேண்டிய நிலை உள்ளது.

மாவட்டத்துக்கு ஒரு ரேட்

இப்போதெல்லாம் அரசு பள்ளி ஆசிரியர் பணியிடம் மாற்றத்துக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர்கள் அலுவலகத்தில் ஒரு மாவட்டத்துக்கு ஒரு ரேட் வைத்திருக்கிறார்கள். கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம் என்றால் ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை வாங்குகிறார்கள். மற்ற மாவட்டங்களுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரைகூட பேரம் பேசப்படுகிறது. இப்படி பணம் கொடுத்தாலும், அனைவருக்கும் பணியிடம் மாறுதல் எளிதில் கிடைத்துவிடுவது இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஆளுங்கட்சியை சோ்ந்த சிலர் இடைத்தரகராக இருந்து பணத்தை ஆட்டையை போடுவதில்தான் குறியாக இருக்கிறார்கள். இப்படி பணத்தை கொடுத்து ஏமாந்த பலரும் தினசரி தலைமை செயலகத்துக்கும், மந்திரியின் வீட்டுக்கும், அவர்களது உதவியாளர்களின் வீட்டுக்கும் நடையாய் நடப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அமைச்சர் அலுவலகம் டார்கெட்

இப்படி வழங்கப்படும் பணியிட மாற்றமும் முறையில்லாமல் நடைபெறுவதாக அரசு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்கள். இதுபோன்ற முறையில்லாமல் பணியிடம் மாற்றத்துக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால், நாங்கள் என்ன செய்வது, அமைச்சர் அலுவலகத்தில் சொல்வதைத்தான் நாங்கள் செய்கிறோம். பணம் வாங்கிக் கொண்டு தாராளமாக பணியிட மாறுதல் கொடுங்கள். ஆனால் பணம் முழுவதும் அமைச்சர் அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள். மாதம் இவ்வளவு பணம் வரவேண்டும் என்று டார்கெட் வைக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் புலம்பும் நிலை உள்ளது.

கவுன்சலிங்கில் பணியிடம் மறைப்பு

பொதுவாக, ஆசிரியர்களுக்கு மே மாதம் பொது கவுன்சலிங் மூலம் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால், இந்த பொது கவுன்சலிங்கில், முக்கிய ஊர்களில் உள்ள காலி பணியிடங்கள் காட்டப்படாமலேயே மறைக்கப்படுகிறது. இப்படி மறைக்கப்பட்ட பணியிடங்கள் பல லட்சம் ரூபாயை ஆசிரியர்களிடம் வாங்கிக் கொண்டு முறைகேடாக விற்கப்படுகிறது. ஒருவேளை நோ்மையாக போஸ்டிங் போட்டாலும், ரிலிவிங் ஆர்டர் கொடுக்காமல், பணம் தந்தால்தான் வழங்கப்படும் சூழ்நிலை உள்ளது.

ஆசிரியர் பணியிட மாறுதலில் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற முறைகேடு நடப்பதாக ஆதாரத்துடன் தகவல்கள் வெளியிடப்படுகிறது. ஆனாலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் சரி, துறை அமைச்சரும் சரி, ஏன் அரசாங்கமும் இதை தடுக்க இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அனைவருக்கும் தெரிந்தும், தெரியாததுபோல் காதை பொத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதில் உண்மையாக பாதிக்கப்படுவது அப்பாவி ஆசிரியர்கள்தான் என்றால் அது மிகையாகாது.

முறைகேட்டை தடுக்க வேண்டும் என்றால், அரசு பள்ளிகளில் காலியிடங்களை நிரப்பும்போதே, எந்த மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலி பணியிடம் இருக்கிறதோ அதே மாவட்டத்தை சோ்ந்த ஆசிரியர்களை நியமித்தால் இதுபோன்று பணியிடம் மாறுதல் கேட்டு யாரும் உயர் அதிகாரிகளை தொங்கிக் கொண்டும் இருக்க வேண்டாம், பணம் கொடுத்து ஏமாற வேண்டிய அவசியமும் இருக்காது. இதுபற்றி அரசு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதே அனைத்து ஆசிரியர்களின் வேண்டுகோளாக உள்ளது.

அதிகாரிகள் முன்னெச்சரிக்கை

இப்போதுகூட, திருநெல்வேலியில் வேளாண்மை துறை அதிகாரி முத்துகுமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு பிறகு, அரசு உயர் அதிகாரிகள் ஒருவித முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதாக அரசு ஊழியர்கள் மத்தியில் பேசப்படுகிறது. காரணம், முத்துக்குமாரசாமி தற்கொலை சம்பவத்துக்கு காரணமான முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேளாண்மை பொறியியல் துறை தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

தலைமை பொறியாளர் செந்தில் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமிழகம் முழுவதும் 119 டிரைவர் நியமனம் செய்யப்பட்டதாகவும், அமைச்சர் உத்தரவிட்டதாலேயே பணம் வாங்கிக் கொண்டு வேலை வழங்கியதாகவும் கூறியுள்ளார். இதில், திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 7 டிரைவர் பணிக்கு பணம் வாங்காமல் நோ்மையாக நியமனம் செய்ததாலேயே முத்துக்குமாரசாமி மிரட்டப்பட்டு, அந்த 7 பணியிடத்துக்கான ரூ.21 லட்சத்தை தர வேண்டும் என்று கேட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மக்களின் தற்போதைய கேள்வி?

இப்போது, பொதுமக்கள் கேட்கும் கேள்வி வேளாண்மை துறையில் தமிழகம் முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் மீதம் உள்ள 112 டிரைவர் பணிக்கு அமைச்சருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதுதான். அப்படியென்றால் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் இனிமேல் அரசு வேலை கிடைக்காதா, வேளாண்மை துறையில் மட்டும்தான் இப்படி நடக்கிறதா, மற்ற எல்லா துறைகளிலும் இதுபோன்றுதான் முறைகேடுகள் நடைபெறுகிறதா என்பதே பொதுமக்களின் தற்போதைய கேள்வி. பொதுமக்களின் கேள்விக்கு அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும்.

பதவி உயர்விலும் முறைகேடு

அரசு ஊழியர்களின் பதவி உயர்விலும் இதுபோன்று விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு வருவதாக அரசு ஊழியர்கள் புகார் கூறுகிறார்கள். முன்பெல்லாம், இத்தனை வருடம் பணி செய்தால் தானாகவே பதவி உயர்வு கிடைக்கும். ஆனால், இப்போது, பணிக்கு வருவதற்கும் பணம் கொடுக்க வேண்டும். பதவி உயர்வுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி உள்ளதாக அரசு ஊழியர்கள் புலம்புகிறார்கள். இதுபோன்ற பிரச்னைக்கு முடிவுதான் என்ன?





6 Comments:

  1. ஓராண்டுக்கு முன் இந்த முறைகேடுகள் பற்றிய ஒரு comment ஐ பாடசாலை தணிக்கை செய்து வெளியிடவில்லை.. இப்போது அதே கருத்தை கட்டுரையாக துணிவுடன் பதிந்திருப்பதில் மகிழ்ச்சி . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஓராண்டுக்கு முன் இந்த முறைகேடுகள் பற்றிய ஒரு comment ஐ பாடசாலை தணிக்கை செய்து வெளியிடவில்லை.. இப்போது அதே கருத்தை கட்டுரையாக துணிவுடன் பதிந்திருப்பதில் மகிழ்ச்சி . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்.
      உண்மையை எவருக்கும் அஞ்சாமல் வெளியிடும் பாடசாலைக்கு நிகர் பாடசாலையே...

      Delete
  3. goooood.bold article.also pls publish one article about ssa education for all.poor students studing with cards in govt schools.rich children studying books in matric schools.why this partiality.pls think deeply about this and take a survey .

    ReplyDelete
  4. இதை பற்றியெல்லாம் இந்த ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை அவர்களது ஒரே நோக்கம் இந்த பணி மாறுதலில் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive