ஆங்கிலேயர் காலந்தொட்டு, விடுதலைக்குப் பின்னர் நெடுங்காலம் வரை கல்வி
அளிக்கும் பொறுப்பை அரசு ஏற்றது கிடையாது. கல்வித் துறையின் நேரடி
நிர்வாகத்தில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களோடு இணைந்த மாதிரிப் பள்ளிகள்,
இஸ்லாமிய மகளிர்க்கான பள்ளிகள் மட்டுமே இருந்தன.
ஒன்றுபட்ட சென்னை
மாகாணத்தில் மொத்தம் 20 பள்ளிகளுக்குக் குறைந்தவையே அரசுப் பள்ளிகள்.
மற்றவையெல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகள் அல்லது உதவி பெறும்
தனியார் பள்ளிகள். இந்த இரு வகைப் பள்ளிகளுக்கும் அரசு மானியம் மட்டும்
வழங்கிவந்தது. அப்பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யும்
வகையில், ஆய்வு நடத்தும் கடமை கல்வித் துறைக்கு இருந்தது. ஆண்டாய்வும்,
திடீர் ஆய்வுகளும் நடத்தப்பெற்றதால் பள்ளிகள் சீராக இயங்கின.
விடுதலை பெற்ற சமயத்தில் நான்கு நிலைகளில் ஆசிரியர் கல்வி அளிக்கப்பட்டது.
ஐந்தாம் வகுப்பு முடித்தவருக்கு கீழ்நிலை ஆசிரியர் (Lower Grade)
சான்றிதழும், எட்டாம் வகுப்பு முடித்தவருக்கு உயர்நிலைச் சான்றிதழும்
(Higher Grade), எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவருக்கு இடைநிலைச் சான்றிதழும்
(Secondary Grade) ஆசிரியர் கல்வி முடித்த பின் கல்வித் துறையால்
வழங்கப்பட்டது. பட்டப் படிப்புக்குப் பின் ஆசிரியர் கல்வி முடித்தவர்
பல்கலைக்கழகப் பட்டயம் பெற்றனர். பல்கலைக்கழகம் அளிக்கும் பட்டங்களை
ரத்துசெய்ய அரசுக்கு அதிகாரமில்லை என்பதால், ஆசிரியர் கல்வி முடித்தவரும்
பொதுக் கல்வி இயக்குநர் அளிக்கும் ஆசிரியர் சான்றிதழைப் பெற வேண்டும்.
ஆசிரியர்கள் மீது அரசு ஒரு கண் எப்போதும் வைத்திருக்கும். ஆசிரியர் தகுதிச்
சான்றிதழ் ரத்துசெய்யப்பட்டால் அவர்கள் ஆசிரியராகப் பணிபுரிய முடியாது.
சுதந்திரத்துக்குப் பின் புதிய பள்ளிகள் பட்டிதொட்டி யெல்லாம்
தொடங்கப்பட்டன. அவற்றுக்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத நிலையில்,
பயிற்சி பெறாதவர்களையும் தற்காலிகமாக நியமித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
அவர்களுக்கான பணித் தகுதி விலக்கும் அளிக்கப்பட்டது. இந்நிலை ஏறக்குறைய 25
ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இத்தகைய ஆசிரியர்களிடம் கற்றவர்கள் பல
துறைகளிலும் முத்திரை பதித்துவருகிறார்கள். ஆசிரியர் பயிற்சிக்கும்
கற்றலுக்கும் தொடர்பு இல்லையோ என்ற ஐயம் எழக்கூடும். இந்த தற்காலிக
ஆசிரியர்கள் வேறு பணி கிடைக்கும் வரையில்தான் ஆசிரியப் பணியில்
இருந்தார்கள். செய்யும் பணியை ஒரே நாளாயினும் நிறைவாகச் செய்ய வேண்டும்
என்ற மன உறுதியே அவர்களது தொழில் வெற்றிக்குக் காரணம்.
ஒருகட்டத்தில் கீழ்நிலையும், பின்னர் உயர்நிலையும் நிறுத்தப்பட்டன. தற்போது
இடைநிலைக்கு அடிப்படைக் கல்வித் தகுதி மேனிலைக் கல்வியாக
உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் பொதுத் தகுதி, ஆசிரியர் கல்விப்
படிப்போடு ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
என்று நிர்ணயித்துள்ளது. ஆக, இன்றைய ஆசிரியரது தகுதிகள் முன்னர்
இருந்ததைவிடப் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், பழைய
ஆசிரியர்களுக்கு இணையாக இவர்கள் இல்லை என்ற கூற்றை ஏற்பது கடினமாக உள்ளது.
அக்கால ஆசிரியர்கள்
அக்காலத்தில் மிகச் சாதாரணமான குடும்பங்களிலிருந்து தான் பெரும்பாலானோர்
ஆசிரியர் தொழிலுக்கு வந்தனர். அவர்கள் ஆசிரியர் கல்வி படிக்கும்போது
உதவித்தொகை கொடுப்பார்கள். ஆசிரியர் கல்வி பயிலக் கட்டணம் ஏதும் கிடையாது.
உதவித்தொகை விடுதிக் கட்டணத்துக்கும் பிற செலவுகளுக்கும் போதுமானது.
இன்னும் ஒரு வகை ஆசிரியர்கள் உண்டு. நிலபுலம் உள்ளவர்கள், வட்டித் தொழிலில்
ஈடுபடுபவர்கள் போன்றவர்கள். பெரும்பாலும் உள்ளூரில் உள்ள பள்ளியில்
ஆசிரியர் பணி மேற்கொள் வார்கள். வறுமை நிலையிலுள்ள ஆசிரியர்கள்
தனிப்படிப்பு எடுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நிர்வாகி உண்டு. அவர் பள்ளியின்
செயல்பாட்டில் அக்கறை கொண்டிருப்பார். ஆசிரியர்கள் மீது முழுக்
கட்டுப்பாட்டை வைத்திருப்பார். விடுப்புகூட எடுக்க இயலாத நிலையில்
ஆசிரியர்கள் இருப்பார்கள். நெடுங்காலத்துக்கு அரசு ஓய்வூதியம், விடுப்பு
விதிகள் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது. 1971-ல்தான் அவை தனியார் பள்ளி
ஆசிரியர் களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன. தனியார் பள்ளிகளில் அலைமோதிய
அத்துமீறல்களை எதிர்த்து ஆசிரியர்கள் போராட தனியார் பள்ளிகள்
ஒழுங்குபடுத்தல் சட்டம் 1976-ல் நிறைவேற்றப்பட்டது. பள்ளிகளின் மீதான
கல்வித் துறையின் பிடி இறுகியது மட்டுமல்லாமல், ஆசிரியர்களும் சிறிதளவு
சுதந்திரக் காற்றை அனுபவிக்க முடிந்தது. அதேசமயம், ஆசிரியர் பணியில் தொய்வு
ஏற்பட இச்சட்டமே காரணமென்று நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர்.
சுயநிதித் தனியார் பள்ளிகள்
1978-ல் அரசு மானியம் பெறாது நடத்த சுயநிதிப் பள்ளிகளுக்கு அரசு அனுமதி
அளித்தது. அவை பல்கிப் பெருகிப் பட்டிதொட்டியெல்லாம் இன்று கோலோச்சுகின்றன.
இப்பள்ளிகளுக்குத் தனியார் பள்ளி (ஒழுங்குபடுத்தல்) சட்டம் பொருந்தாது
என்று அரசு முடிவெடுத்தது. ஆசிரியர்களுக்குக் குறைந்த ஊதியம், பணிப்
பாதுகாப்பின்மை, விடுப்பு விதிகள் இல்லாமை போன்ற பல குறைபாடுகளுடன் இவை
இயங்கிவருகின்றன. ஆசிரியர்களில் பலரும் தகுதி பெறாதவர். அரைச் சம்பளத்தில்
எவ்விதச் சலுகையும் இல்லாமல் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பள்ளி மீதோ
மாணவர் மீதோ எப்படி உள்ளார்ந்த பற்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க
முடியும்?
ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் உதவியோடுதான் பெரும்பான்மையான
சுயநிதிப் பள்ளிகள் நடைபெற்றன. ஒரு காலகட்டத்தில் பணியிலிருந்துகொண்டே
சுயநிதிப் பள்ளிகளை ஆசிரியர்கள் நடத்தத் தொடங்கினார்கள். தம் முழு நேரப்
பணியை ஓரங்கட்டிவிட்டு, தம் கவனம் முழுவதும் தம் சொந்தப் பள்ளிக்குச்
செலுத்த ஆரம்பித்ததும் அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.
இதேபோல தனியார் உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகி களும் அதே வளாகத்திலோ
அருகிலோ தம் பள்ளிக்குப் போட்டியாக சுயநிதிப் பள்ளியையும் தொடங்கி, அதன்
வளர்ச்சியில் அக்கறை எடுத்துக்கொண்டனர். சுயநிதிப் பள்ளியில் சேர்க்கையை
முடித்த பின்தான் அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்க்கையைத் தொடங்குவார்கள்.
தமிழகக் கல்வித் துறை இம்முறைகேடுகளையெல்லாம் காணாதது மட்டுமின்றி ஆதரவும் கொடுத்தது, தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு சோக நிகழ்வு.
உள்ளாட்சிப் பள்ளிகள்
உள்ளாட்சிப் பள்ளிகள் ஆங்கில ஆட்சியின்போது இயற்றப்பட்ட சட்டங்களின்
அடிப்படையில் இயங்கின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் இவ்வமைப்புகள்
செயல்பட்டன. இவற்றின் மேலாண்மையில் நடைபெறும் பள்ளிகள் சீராக இயங்குவதில்
அவ்வமைப்பின் உறுப் பினர்கள் அக்கறை கொள்வார்கள். ஆசிரியர்கள் பணிபுரியும்
ஊரிலிருந்து 8 கி.மீ. தூரத்துக்குள் குடியிருக்க வேண்டும் என்பது விதி.
பெரும்பாலும் ஆசிரியர்கள் அந்தந்த ஊரிலேயே வசித்துவந்தனர். மாணவர்களை
மட்டுமின்றி அவர்களது பெற்றோரோடும் ஆசிரியர்களுக்கு ஒரு நெருக்கம்
இருந்தது. சமூகத்தின் சொத்தாக உள்ளாட்சிப் பள்ளிகள் திகழ்ந்தன. ஒவ்வொரு
ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் வந்தவுடன் அவை அலசப்பட்டு, முன்னேற்றம்
காண்பித்த ஆசிரியர்களுக்குப் பாராட்டும் சுணக்கமாக இருந்த பள்ளி
ஆசிரியர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டன.
படிப்படியாக இந்த உள்ளாட்சிப் பள்ளிகள் யாவும் ஒரே அதிகாரத்தின் கீழ்
கொண்டுவரப்பட்டன. 1970-ல் கல்வித் துறையின் நேரடி நிர்வாகத்துக்கு வந்தன.
35,000 தொடக்கப் பள்ளிகள், 8,000 உயர்நிலை-மேனிலைப் பள்ளிகளைச்
சென்னையிலிருந்து நிர்வகிப்பது இயலாத காரியம் என்பதை ஆட்சியாளர்கள்
புரிந்துகொள்ளவில்லை.
ஆசிரியர்களால் முடியும்
இன்றைய கல்வி வந்தடைந்திருக்கும் இடத்துக்கும் பொதுக்கல்விக்கு
ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கும் இப்படி எவ்வளவோ காரணங்கள் உண்டு.
அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் என்றால், எல்லாவற்றையும்
தாண்டி ஒரு பள்ளிக்கூடத்தின் தரத்தைத் தூக்கி நிறுத்த ஒருவரால் முடியும்
என்றால், அவர் ஆசிரியர்.
நான் பணியில் சேர்ந்த முதல் நாள் காலை எனது தலைமை யாசிரியர் எனக்களித்த
அறிவுரை மறக்க இயலாது. “உனக்கு இரண்டு கண்கள். ஆனால், உன்னை ஆயிரம் ஜோடிக்
கண்கள் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்.
வகுப்பறையிலும் பள்ளி வளாகத்திலும் மட்டும் அல்ல; சாலையிலும் பொது
இடங்களிலும் வீட்டிலும்கூட நீ எப்படி நடந்துகொள்கிறாய் என்பதை எல்லோரும்
உன்னிப்பாகக் கவனிப்பார்கள். ஏனென்றால், நீ ஒரு ஆசிரியர்.”
உண்மைதான். வேறு தொழில் செய்பவர் யாரும் இந்த அளவு சமூகத்தின் பார்வையில்
சிக்க மாட்டார்கள். எப்போதுமே கல்வித் தகுதிக்கு மேல் ஆசிரியர்களிடம் ஒன்று
எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கான நியாயமும் இருக்கிறது. நான்
ஆசிரியப் பணியை ஒரு சின்ன கிராமத்தில் தொடங்கினேன். தினமும் கடைவீதி
வழியாகப் பள்ளிக்குச் செல்வேன்.
பல வணிகர்களும் எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள். அப்போது எனக்கு வயது
19. அவர்களுக்கோ என் தந்தை, தாத்தா வயது. சங்கடப்பட்டுக்கொண்டு வேறு
வழியாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, ஏன் இப்படிச் சுற்றிக் கொண்டு
செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் காரணத்தைச் சொன்னேன். அப்போது ஒரு
பெரியவர் சொன்னார்: “உங்களைப் பார்க்கும்போதெல்லாம் வெறும் ஆசிரியராகப்
பார்ப்பதில்லை. எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித்
தருபவராகப் பார்க்கிறோம். அதனால்தான் வணங்குகிறோம்.”
பெற்றோரின், சமூகத்தின் இந்த நம்பிக்கைதான் ஒரு ஆசிரியர் எதிர்கொள்ளும்
பெரிய சவால். ஒரு ஆசிரியர் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன்
பணியாற்ற வேண்டியது இந்த நம்பிக்கைக்குத்தான். இந்த நம்பிக்கைக்கு ஒரு
ஆசிரியர் நேர்மையாக நடந்துகொள்ளும்போது ஒரு பள்ளிக்கூடம் தானாக
தலைநிமிரும்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...