நூறாண்டு கடந்துவிட்ட அரசு உதவி பெறும் பள்ளி அது. பத்து வருடங்களுக்கு
முன்பு வரையில் இரண்டாயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள்.
இன்றைக்கு ஆயிரத்து சொச்சம் மாணவர்கள் கூட இல்லை. சில பல ஏக்கர்களில்
கட்டப்பட்ட கட்டிடங்கள் அப்படியேதான் இருக்கின்றன. மிகப்பெரிய விளையாட்டு
மைதானம் அப்படியேதான் இருக்கிறது. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கூட
அப்படியேதான் இருக்கிறது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து
விட்டது.
கேட்டால் ‘ப்ரைவேட் ஸ்கூலுக்கு போயிடுறாங்க’ என்று
காரணம் சொல்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரைக்கும்
‘ஆல்-பாஸ்’. பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைவது கூட பெரிய காரியமில்லை.
விடைத்தாள் திருத்தும் பணிக்குச் சென்றிருந்த ஆசிரியரிடம் விசாரித்தால்
‘இருபத்தைந்து அல்லது இருபத்தாறு மார்க் வாங்கியிருந்தால்
முப்பத்தைந்தாக்கி பாஸ் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்’ என்கிறார். ஆக
ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவன் பத்தாம் வகுப்பு வரைக்கும் எங்கேயும்
நிற்பதில்லை. இலவச பேருந்து, இலவச மிதிவண்டி, இலவச பாட புத்தகங்கள்
அத்தனையும் அரசு கொடுக்கிறது. இவ்வளவு சலுகைகளும் வசதிகளும் கிடைத்த
பிறகும் ஏன் அரசுப் பள்ளிகளைத் தவிர்த்துவிட்டு தனியார் பள்ளிகளுக்குச்
செல்கிறார்கள்? பிரச்சினை எங்கேயிருக்கிறது?
ஓர் அரசு ஆசிரியருக்கான மாதச் சம்பளம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாயைத்
தொடுகிறது. அரசு அறிவுறுத்தலின் படி ஒரு பள்ளி இருநூறு நாட்கள் இயங்கினால்
போதும். இந்த இருநூறு நாட்களில் ஓர் ஆசிரியருக்கு பனிரெண்டு நாட்கள்
தற்செயல் விடுப்பு. ஈட்டிய விடுப்பு பதினேழு நாட்கள். இருநூறு நாட்களில்
முப்பது நாட்கள் இப்படி போய்விடுகிறது. அதைத் தவிர மருத்துவ விடுப்பு
எடுப்பதாக இருந்தால் அவ்வளவுதான். சராசரியாக ஒரு அரசு ஆசிரியர்
வருடத்திற்கு நூற்று அறுபது நாட்கள் வேலை செய்தால் பெரிய காரியம். இவ்வளவு
சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் ஏன் சிரத்தை
எடுத்துக் கொள்வதில்லை?
இதுவே தனியார் பள்ளிகளை கவனத்தில் எடுத்துக் கொண்டால் நிலைமை புரியும்.
மாதம் ஐந்தாயிரம் ரூபாய்தான் சம்பளம் தருகிறார்கள். எம்.ஏ அல்லது எம்.எஸ்ஸி
முடித்துவிட்டு கூடவே எம்.எட் படிப்பையும் முடித்திருப்பார்கள். சிலர்
எம்.ஃபில்லும் முடித்துவிட்டு ஐந்தாயிரத்துக்கு மாரடித்துக்
கொண்டிருப்பார்கள். சனி, ஞாயிறு, தீபாவளி, பொங்கல் என்ற எந்த விடுமுறையும்
கிடையாது. தினசரி தேர்வு நடத்த வேண்டும். தினசரி விடைத்தாள்களைத் திருத்த
வேண்டும். பெற்றோர்களுக்கு கடிதம் எழுத வேண்டும். பள்ளி மேலாண்மைக்கு பதில்
சொல்ல வேண்டும்.
இப்படி பிழிந்து எடுத்துவிடுகிறார்கள். அது போக ஏப்ரல், மே மாதங்களில் வீதி
வீதியாக ஆள் பிடிக்கச் செல்கிறார்கள். தனியார் பள்ளிகளின் பாடமுறை
சரியானது என்று சொல்லவில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உருவாக்கும்
பிம்பங்கள் பற்றிய வித்தியாசங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளைத் தவிர்ப்பதற்கு ஆழமான காரணங்கள் உண்டு. அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தால் மாணவர்களால் மதிப்பெண்
வாங்க முடியாது என்று நம்புகிறார்கள். அவர்கள் நம்புவதைத் தவறு என்று சொல்ல
முடியாது. ஏன் அரசுப் பள்ளி மாணவர்களால் மதிப்பெண்கள் வாங்க முடிவதில்லை?
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்தவர்கள் ‘நாங்கள்
மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை’ என்று சொன்னால் வேறு எதற்கு
முக்கியத்துவம் தருகிறார்கள் என்று கேட்க வேண்டியிருக்கிறது. விளையாட்டு,
அறிவியல், பொது அறிவு என்று படிப்பைத் தவிர வேறு எந்தத் துறையில் இந்தப்
பள்ளி மாணவர்கள் கவனம் பெறுகிறார்கள்?
எதிலும் இல்லை என்பதுதான் உண்மை. இதுதான் சிக்கல். ஏன் தமிழக கிராமப்புற
மாணவர்களின் திறன் வீழ்ச்சியடைந்து கொண்டேயிருக்கிறது என்றால் இதுவொரு
முக்கியமான காரணம். வசதி வாய்ப்பிருப்பவர்கள் தனியார் பள்ளிகளுக்குச்
சென்றுவிடுகிறார்கள். அதற்கான வசதி இல்லாதவர்கள் அருகாமையில் இருக்கும்
ஏதாவதொரு பள்ளியில் படித்து எந்தக் கவனமும் இல்லாமல் கரைந்து போகிறார்கள்.
ஒரு ஆசிரியர் அழைத்து ‘எங்கள் பள்ளிக்கு நூலகம் அமைத்துத் தர முடியுமா?’
என்று கேட்டார். அது உயர்நிலைப்பள்ளி. ‘உயர்நிலைப்பள்ளிக்குத்தான் அரசு
நிதி ஒதுக்கித் தருகிறதல்லவா?’ என்று கேட்டால் ‘தருது சார்..ஆனால்
தலைமையாசிரியர் சரியில்லை..வவுச்சர் போட்டு பணத்தை எடுத்துக்கிறாரு..இங்க
மட்டும் இல்ல...நிறையப் பக்கம் அப்படித்தான்’ என்கிறார்.
இதை இட்டுக்கட்டிச் சொல்லவில்லை. சென்ற வாரத்தில் ஒரு அக்கறையுள்ள ஆசிரியர்
சொன்ன விஷயம்தான் இது. இப்படித்தான் பெரும்பாலான பள்ளிகளில் நிலைமை
இருக்கிறது. நூலகம், விளையாட்டுச் சாதனங்கள் என எந்த வசதியையும்
அமைப்பதில்லை. சரியான பயிற்று முறைகள் இல்லை. பயிற்றுவிக்கும்
ஆசிரியர்களிடம் சிக்கல் இருக்கிறது. வழி நடத்தும் தலைமையாசிரியரிடம்
பிரச்சினையிருக்கிறது. அத்தனை ஆசிரியர்களையும் தலைமையாசிரியர்களையும் குறை
சொல்லவில்லை. சில தலைமையாசிரியர்கள் சரியானவர்களாக இருப்பார்கள்.
‘வாத்தியார் போதலை சார்..நாங்க என்ன பண்ணுறது?’ என்கிறார்கள்.
அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் போதவில்லை என்றால் ஆயிரக்கணக்கான அரசு உதவி
பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் நிறைந்து கிடக்கிறார்கள். ஒரு
ஆசிரியருக்கு முப்பது மாணவர்கள் என்பது விகிதாச்சாரம். பத்து வருடங்களுக்கு
முன்பாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்த அரசு உதவி பெறும் பள்ளிகளில்
ஏகப்பட்ட ஆசிரியர்கள் இருந்திருப்பார்கள். இப்பொழுது மாணவர்களின் எண்ணிக்கை
பாதியாகக் குறைந்திருக்கும் ஆனால் ஆசிரியர்களின் எண்ணிக்கை அப்படியேதான்
இருக்கும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இடம்
மாறுதல் செய்யப்படுவதில்லை.
பணியில் சேர்ந்தால் கடைசி வரைக்கும் அதே பள்ளிதான். அதனால் அப்படியே
இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூட வகுப்பெடுக்காத
ஆசிரியர்களின் பட்டியல் பல்லாயிரக்கணக்கில் இருக்கும். அவர்களையும் குற்றம்
சொல்ல முடியாது. இடம் மாற்றம் கொடுத்தால் சென்றுவிடுவார்கள்தான். ஆனால்
இடமாறுதலுக்குத்தான் வழியில்லையே? இப்படியே ஓய்வு பெறும் வயது வரைக்கும்
வெட்டிச் சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். விதிமுறைகளின்படி,
உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில்
ஆசிரியர்களின் எண்ணிக்கை உபரியாக இருந்தால் அந்தப் பணியிடங்களை
அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். எந்தப் பள்ளியும் அதைச்
செய்வதில்லை. இது குறித்தான துறை ரீதியிலான எந்த ஆய்வும் நடப்பதாக
தெரியவில்லை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை தரமுயர்த்த
விரும்பினால் அரசு செய்ய வேண்டிய இந்தக் காரியம் மிக முக்கியமானது. தமிழகம்
முழுவதும் மாவட்டம், ஒன்றி ய வாரியாக உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கைகளைக்
கணக்கெடுக்க வேண்டும்.
அவர்களை பற்றாக்குறையுடைய அரசுப் பள்ளிகளுக்கு இடம் மாற்றுவதற்கான
வழிவகைகளை உருவாக்க வேண்டும். ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தை அத்தனை
பள்ளிகளிலும் சீராக அமுல்படுத்த வேண்டியது மிக முக்கியமான காரியம். இன்றைய
சூழலில் அரசாங்கம் இதைச் செய்யுமா என்று தெரியவில்லை. தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் மாவட்டம், ஒன்றியம் வாரியாக
இருக்கக் கூடிய உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையைப் பெறும் வேலையைச் செய்வதாக
உத்தேசம் இருக்கிறது. அதன் பிறகு தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என்ற
யோசனையும் இருக்கிறது. எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. கல்லை
வீசிப் பார்க்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...