நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை அறியும் வகையில், எட்டாம்
வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் புதிய நடைமுறை, முதன்முறையாக
கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம், முழுமை பெறாமலேயே, பாதியில்
நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில், ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல்-பாஸ்' செய்யும்
திட்டத்தால், மாணவர்களின் கல்வித்தரம் பின்னடைந்துள்ளது; 40
சதவீதத்துக்கும் மேல், மாணவர்கள் தமிழ் பாடத்திலேயே போதிய வாசிப்பு திறன்,
அடிப்படை கணித அறிவு இல்லாமல் உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரத்தை
முன்கூட்டியே அறிந்து போதிய பயிற்சிகளுக்கு திட்டமிடும் நோக்கில், கோவையில்
எட்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதில் புதிய நடைமுறை
அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி, எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்கள், ஒரு
வட்டாரத்தில் இருந்து மற்றொரு வட்டார பள்ளிகளில் மதிப்பீடு செய்யப்பட்டது.
தமிழ் பாடங்கள் முழுமையாக, வட்டாரங்கள் அளவில் மாற்றப்பட்டு மதிப்பீடு
செய்யப்பட்டது.ஆனால், ஆசிரியர்களின் மத்தியில் கிளம்பிய கடும் எதிர்ப்பால்
அதிகாரிகள் இத்திட்டத்தை பாதியில் கைவிடவேண்டிய சூழல் எழுந்துள்ளது. அதன்
படி, பிற பாட விடைத்தாள்கள், வழக்கம்போல் அந்தந்த பள்ளிகளிலேயே திருத்த
உத்தரவிடப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில்,
''மாணவர்களின் கல்வித்தரத்தை அடையாளம் காணும் நோக்கில் புதிய நடைமுறை,
தொடக்க கல்வித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆசிரியர்கள் சிலர்
முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்ற காரணம் கூறி, எதிர்ப்பு
தெரிவித்ததால், தற்காலிகமாக இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த
கல்வியாண்டில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்,'' என்றார்.
கல்வியாளர்கள் வருத்தம்
கல்வியாளர் மற்றும் ஆசிரியர் பாரதி கூறுகையில், ''ஒரு வட்டாரத்தில் உள்ள
ஆசிரியர்கள், பிற வட்டார விடைத்தாள்களை திருத்தும்போது, அங்குள்ள கற்றல்
முறையில் உள்ள நிறை குறைகளை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். தனிப்பட்ட
மாணவர்களின் கல்வித்தரத்தை யும் அறிய முடியும். சில ஆசிரியர்களின் வேலை
பளுவை காரணம் கொண்டு, கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்கவில்லை. பள்ளி தொலைவாக
உள்ளது என, அர்த்தமற்ற முறையில் எதிர்ப்பு தெரிவித்தது வருத்தம்
அளிக்கிறது. இவ்வாறு, விடைத்தாள்களை மாற்றிதிருத்துவதால், ஆசிரியர்களும்
வேறுபட்ட கற்றல் முறைகளை அறிந்து கொள்ளலாம்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...