மதுரை
காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான
தெரிவுக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உயர்
கல்வித் துறைச் செயலர் அபூர்வா வெளியிட்ட உத்தரவு:
மதுரை
காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள கல்யாணி மதிவாணனின் பதவிக்
காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் பணி
தொடங்கப்பட்டுள்ளது. புதிய துணைவேந்தராக மூன்று பேரின் பெயர்களை பரிந்துரைக்க,
மூன்று பேரைக் கொண்ட தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில்
ஆளுநர்-வேந்தரின் பிரதிநிதியாகவும், குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும்
சி.முருகதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சென்னை பல்கலைக்கழகத்தின்
பொருளாதாரத் துறை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது, தமிழ்நாடு
பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார்.
பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக சென்னையைச் சேர்ந்த ஹர்ஷ்
எல். மேத்தாவும், செனட் சபை உறுப்பினராக மு.ராமசாமியும்
நியமிக்கப்பட்டுள்ளனர் என உயர்கல்வித் துறைச் செயலாளர் அபூர்வாவின்
உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவுக் குழுவானது, மூன்று பேரின்
பெயர்களை அவர்களது தன்விவரக் குறிப்புகளுடன் ஆளுநருக்கு பரிந்துரை
செய்யும். மூன்று பேரில் ஒருவரின் பெயர், ஆளுநரால் ஏற்றுக் கொள்ளப்பட்டால்
அவர் புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்றுக் கொள்வார் என அரசுத் துறை
வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...