சத்துணவுப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதால் பள்ளி மாணவர்களுக்குத் தடையின்றி மதிய உணவு வழங்க தலைமை ஆசிரியர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சத்துணவுப் பணியாளர்கள் வருகிற 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பள்ளி மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்குவதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சத்துணவு வழங்கும் பணி பாதிக்கப்படாமல் இருக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு சில அறிவுறுத்தல்களை சத்துணவுத் துறை வழங்கியுள்ளது. இதன்படி வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் சத்துணவுப் பணியாளர்கள் பணியாற்றும் மையத்தின் சாவிகளை திங்கள்கிழமை காலையே பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
சத்துணவு மையத்தில் தேவையான அளவு உணவுப் பொருள்கள் இருப்பு உள்ளதா என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும். அங்கன்வாடிப் பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள், உள்ளூர் தன்னார்வலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உதவியுடன் உணவு சமைக்க முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில், பள்ளி நிர்வாகிகள் உதவியுடன் உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலக அனைத்துப் பணியாளர்களுக்கும் பள்ளிகளை ஒதுக்கீடு செய்து உணவு வழங்குவதை உறுதி செய்து கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் நிலையிலான அலுவலர்களில், ஒருவருக்கு 2 ஊராட்சி ஒன்றியங்களை ஒதுக்கி, வட்டார அளவில் கண்காணிப்பு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...