பாடநூல் கழக விற்பனை மையத்தில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விற்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் புத்தக நிலையங்கள் மற்றும் பள்ளிகளில்தான், பெற்றோர்கள் அதிக விலைக்கு புத்தகம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது மாடி
கல்வித்துறையின் முக்கிய அலுவலகங்கள் உள்ள சென்னை,
டி.பி.ஐ., வளாகத்தில், இரண்டாவது மற்றும் மூன்றாம் மாடியில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைமை அலுவலகம் செயல்படுகிறது. கீழ்தளத்தில், பாட புத்தக விற்பனை மையம் உள்ளது. இங்கு, இன்னும் புதிய கல்வியாண்டுக்கான புத்தகங்கள் வரவில்லை. எனவே, பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
பாடநூல்களை எங்கே வாங்குவது என்பது குறித்து, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மண்டல அலுவலகங்கள் மூலம், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
தனியார் பள்ளிகளும் தங்களுக்கு தேவையான புத்தகங்களை மண்டல அலுவலகம் சென்று, உரிய தொகை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை, மெட்ரிக் இயக்குனர், ஆங்கிலோ இந்தியன் ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு, பாடநூல் கழகத்திலிருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், பாடநூல் கழக மண்டல அலுவலகங்களில், மொத்தமாக புத்தகங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், எங்கள் விற்பனை மையங்களில் மாணவ, மாணவியருக்கு புத்தகம் விற்பனை செய்வதில்லை. கல்வியாண்டு துவங்கிய பின், புத்தகங்கள் கிழிந்து விட்டது; தொலைந்து விட்டது; தாமதமான சேர்க்கை போன்ற காரணங்களால் வருவோர் மட்டும், அவசரத் தேவைக்கு விற்பனை மையத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
எங்கள் விற்பனை மையத்தில் பள்ளி திறந்த பிறகே, புதிய புத்தகங்களை இருப்பு வைப்போம். எனவே, மாணவ, மாணவியருக்கு புத்தகம் கிடைக்காவிட்டால், அதற்கு பள்ளிகளும், கல்வித்துறை அதிகாரிகளுமே பொறுப்பு. நாங்கள் அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதிக விலைக்கு...
பாடநூல் விற்பனை மையத்தில் புத்தகங்கள் விற்காததால், தனியார் பள்ளிகள் அதிக விலைக்கு புத்தகங்களை விற்பதோடு, அதற்கு ரசீது தருவதுமில்லை. புத்தகக் கடைகளிலும் பாடநூல் கழக விற்பனை மையங்களை விட, அதிக விலைக்கே புத்தகங்கள் விற்கப்படுகின்றன. இதனால், பெற்றோர் புத்தகத்துக்காக இன்னும் கூடுதல் செலவு செய்வதுடன், கடும் அலைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...