அரசுப் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் ஆசிரியர்களுக்கு தினப்படி வழங்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் புதன்கிழமை திருவள்ளூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆர்.குப்புசாமி தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் ஜெயராமன், தணிகாச்சலம், நாகலிங்கம், ஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் பிரேம்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் நிறுவனத் தலைவர் மாயவன், மாநிலத் தலைவர் பக்தவச்சலம், பொருளாளர் சொர்ணலதா, தலைமை நிலையச் செயலாளர் விஜயசாரதி, மாநில மகளிர் அணிச் செயலாளர் செல்வகுமாரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில், கோடை விடுமுறை நாள்களில் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொண்டால் அந்த நாள்களுக்கு ஈட்டிய விடுப்பு அல்லது ஈடு செய்யும் விடுப்பு வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு தினப்படி ரூ.100 வழங்க வேண்டும்.
10-ஆம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர் பணி வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். தேர்வு காலங்களில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் ஆசிரியர்களுக்கு தினப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்டத்தின் சார்பில் ரூ.1.50 லட்சம் நிதி மாநில பொருளாளரிடம் வழங்கப்பட்டது. மாவட்ட இணைச் செயலாளர் முரளி நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...