சத்துணவு பணியாளர்கள் மீதான தடியடி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை, "தமிழ்நாட்டில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சத்துணவுப் பணியாளர்கள் பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று அவர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்குடன் தமிழக அரசின் சார்பில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அதையும் மீறி போராட்டம் தொடர்வதால் ஆத்திரமடைந்த ஆட்சியாளர்கள் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தடியடி நடத்தியுள்ளனர்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி காவல்துறையினரின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சங்கத்தின் செயலாளர் நூர்ஜஹான் உள்ளிட்ட நிர்வாகிகளும் காவல்துறையின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
சத்துணவுப் பணியாளர்களின் போராட்டத்தை இத்தகைய அடக்குமுறைகளின் மூலம் ஒடுக்கிவிட முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இத்தகைய அணுகுமுறையை விடுத்து அவர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...