பாட புத்தக தட்டுப்பாடு காரணமாக, சென்னை,
டி.பி.ஐ., வளாகத்தில் செயல்பட்ட புத்தக விற்பனை மையம் திடீரென
மூடப்பட்டுள்ளது. இதனால், பல கி.மீ., தூரத்திலிருந்து வரும் பெற்றோர்,
ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசு சார்பில், இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. வரும் கல்வி ஆண்டுக்கு, நடப்பு கோடை விடுமுறையில் புத்தகங்கள் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான புத்தகங்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில், தனியார் மூலம் அச்சடிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படுகின்றன. இதேபோல், தனியார் பள்ளிகளுக்கு புத்தகங்கள் விலைக்கு விற்கப்படுகின்றன. பள்ளிகள் நேரடியாக புத்தகங்களை மண்டல அலுவலகங்களில் பெற்றுக் கொள்ள, பாடநூல் கழகம் உத்தரவிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், 1ம் வகுப்புக்கும், பின் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஒரு வகுப்புக்கும், தமிழ் கட்டாயப் பாடமாகிறது. இதற்கான புத்தகங்களும், தமிழ்நாடு பாடநூல் கழ கம் சார்பிலேயே வினியோகிக்கப் படுகின்றன. ஆனால், பல தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் புத்தகங்கள் வாங்கவில்லை. பாடநூல் கழக மண்டல அலுவலகங்களில், போதிய புத்தகங்கள் இல்லை என்பதால், புத்தகம், 'ஸ்டாக்' வந்த பின், மொத்தமாக எடுக்க திட்டமிட்டுள்ளன. பல பள்ளிகள், பெற்றோரையே, கடைகள் அல்லது டி.பி.ஐ., வளாக புத்தக மையத்திற்கு புத்தகம் வாங்க அனுப்பி விடுகின்றனர். ஆனால், டி.பி.ஐ., மையத்தில் வரும் கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள் இன்னும் வரவில்லை. அதனால், ஊழியர்களுக்கும், பெற்றோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து புகார் வந்ததால், பாடநூல் விற்பனை மையம் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டு விட்டது. புத்தக விற்பனை நிலையத்தின் அறிவிப்பு பலகை அப்புறப்படுத்தப்பட்டு, ஒரு வாரமாக, விற்பனை கவுன்டர்கள் மூடப்பட்டு விட்டன. இதனால், புத்தகம் வாங்க வரும் பெற்றோர், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பலர் அங்குள்ள பாதுகாவலர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் தகவல் மையத்திற்கு சென்று, புத்தக நிலையம் எப்போது திறக்கும் என்று கேட்டு நச்சரிப்பதாக, ஊழியர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...