தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த, கல்வித்துறை
போதிய ஒத்துழைப்பு தராததால், பணிகள் தொய்வடைந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் கல்வித்திறன், எண்ணிக்கை, பள்ளி கட்டமைப்பு, இதர செயல்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, பள்ளிகளின் தரம் உயர்த்தப்படுகிறது.
துவக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும்; நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுகின்றன. அவ்வாறு தரம் உயர்த்தப்படும் பட்சத்தில், பள்ளிகளில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், உயர்நிலைகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை.
திருப்பூர் மாவட்டத்தில், 2009 முதல் தற்போது வரை, 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் தொகை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை நான்கு பள்ளிகளில் மட்டுமே கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதனால், 2012-13ல் இருந்து தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கை சரிந்துள்ளது. மேலும், வசதிகள் மற்றும் மாணவர் எண்ணிக்கை போதியளவு இருப்பினும், தரம் உயர்த்த பரிந்துரைக்கப்படும் பல பள்ளிகள் புறக்கணிக்கப்படுகின்றன.
கல்வித்துறை போதிய ஒத்துழைப்பு தராததே, பள்ளிகளை மேம்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட காரணம் என கூறப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்க அலுவலர் ஒருவர் கூறுகையில், "பள்ளியின் இடவசதியை பொறுத்தே, கூடுதல் கட்டமைப்பு ஏற்படுத்த முடியும். தரம் உயர்த்திய பள்ளிகள் சிலவற்றில் மட்டுமே அதற்கான இடவசதி இருந்தது. எஞ்சிய பள்ளிகளில் கட்டமைப்பு அமைக்க, இட வசதியிருப்பதாக கல்வித்துறை ஆய்வு செய்து, ஒப்புதல் தர வேண்டும். தற்போது கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான பணியை, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் மூலம், பொதுப்பணித்துறை சார்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...