சத்தம் இல்லாமல் அரசு துறையில் புது வசதி அறிமுகம்: அனைத்து அனுமதியும் இணைய வழியில் தான்: 2 மாதத்தில் 2,700 விண்ணப்பம்; 500க்கு அனுமதி
அனைத்து அனுமதிகளையும், இணைய தளம் வழியாக வழங்க, புதிய மென்பொருள், மாசு
கட்டுப்பாட்டு வாரியத்தில், சத்தமின்றி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இரண்டு
மாதங்களில், 2,700 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
தமிழகத்தில், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் துவங்க, மாசு கட்டுப்பாட்டு வாரிய
அனுமதி பெற வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு, கலெக்டர்
அலுவலகம் வாயிலாக தரப்பட்டன. கூடுதல் தகவல்களுக்கு, கடிதம் மூலமாகவே
தொடர்பு கொள்ளும் நிலை இருந்தது. இந்த நிலையில், அனைத்து அனுமதிகளையும்
இணையம் வழியாக தரும் வகையில், தேசிய தகவல் மைய உதவியுடன், மாசு
கட்டுப்பாட்டு வாரியத்திற்காக, புது மென்பொருள் வடிவமைக்கப்பட்டு, சோதனை
ரீதியாக செயல்படுத்தப்பட்டது. பொது மக்களிடம் இருந்து, பிப்., 19 வரை
ஆலோசனைகள் பெறப்பட்டு, திருத்தங்கள் செய்யப்பட்டன. வடிவமைப்பு முழுமை
அடைந்த நிலையில், விழா நிகழ்வு ஏதுமின்றி, சத்தமின்றி, முழு
செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வாரிய அதிகாரிகள் கூறியதாவது: புது மென்பொருள் செயல்பாட்டால்
அனுமதி, செயலாக்கம், புதுப்பித்தல் அனைத்தும், இணையம் வழியாக
மேற்கொள்ளப்படுகிறது. இரண்டு மாதங்களில், 2,700 விண்ணப்பங்கள் வந்துள்ளன;
500 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் மட்டுமின்றி,
தேவைப்படும் கூடுதல் தகவல்கள், அனுமதி கட்டணத்தையும் இணையம் வழியே
பரிமாறலாம். காலதாமதம் தவிர்க்கப்பட்டு, ஒரு வாரத்தில் அனுமதி தருகிறோம்.
ஆவண சமர்பிப்பில், தாமதம் இருந்தால், மூன்று வாரங்கள் ஆகிறது. முன், ஒரு
மாதம், இரண்டு மாதங்கள் ஆனது. விண்ணப்ப நிலையை, இணையம் வழியாகவே தெரிந்து
கொள்ள முடியும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, வாரியத்தின் அனைத்து மாவட்ட
அலுவலகங்களிலும் உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது. வாரியத்தின்,
www.tnpcb.gov.in என்ற இணைய தளத்தில் மூலம், புதிய மென்பொருளை
பயன்படுத்தலாம். இவ்வாறு, கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...