தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் எவ்வளவு
பேர் உள்ளனர் என்பது குறித்த உண்மை நிலவரத்தைக் கண்டறியும் வகையில், தனி
அமைப்புகள் மூலம் புதிய ஆய்வை நடத்த தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மூலமாக அல்லாமல்
தனி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள இந்த ஆய்வு விரைவில் தொடங்கப்பட
உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தைத் தொழிலாளர்கள் எவ்வளவு பேர் உள்ளனர்
என்பது குறித்து எஸ்.எஸ்.ஏ. (அனைவருக்கும் கல்வித் திட்டம்) போன்ற
அமைப்புகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி, புள்ளி விவரங்களை வெளியிட்டு
வருகின்றன.
இதுபோல, தமிழகத்திலும் எஸ்.எஸ்.ஏ. ஆய்வு நடத்தி
வெளியிட்ட புள்ளி விவரத்தில், தமிழகத்தில் சில ஆயிரங்களிலேயே குழந்தைத்
தொழிலாளர் இருப்பதாகக் காட்டப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு
திட்டங்களை வகுத்து வருகிறது.
அதாவது, குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதற்கான
நடவடிக்கைகள், அவர்களுக்கு மீண்டும் கல்வி வழங்குவதற்கான ஏற்பாடுகள்,
அவர்களின் குடும்பத்துக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவது போன்ற திட்டங்களை
வகுத்து, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் தேசிய குழந்தைகள்
உரிமை பாதுகாப்புக்கான ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்.) 2014 செப்டம்பர் மாதம்
வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தமிழகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் குழந்தைத்
தொழிலாளர்கள் இருப்பதாகத் தெரியவந்தது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து
குழந்தைத் தொழிலாளர் விவரங்களைச் சேகரித்து இந்தப் புள்ளிவிவரத்தை
என்.சி.பி.சி.ஆர். வெளியிட்டிருந்தது. இதில், இந்திய அளவில் 44 லட்சம்
குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாகவும், 2.75 லட்சம் குழந்தைத்
தொழிலாளர்களுடன் தமிழகம் இந்திய அளவில் 10-ஆவது இடத்தில் உள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில், 26,125 குழந்தைத் தொழிலாளர்களுடன் சென்னை முதலிடத்தில் இருந்தது.
இந்தப் புள்ளி விவரத்தை தமிழக அரசின் முதன்மைச்
செயலர், பள்ளிக் கல்வித் துறை, தொழிலாளர் நலத் துறை ஆகிய துறைகளுக்கு
அனுப்பிவைத்த மத்திய ஆணையம், தமிழகம் சார்பில் எடுக்கப்பட்ட குழந்தைத்
தொழிலாளர் புள்ளி விவரங்களை ஏன் அளிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தது.
மேலும், மாநிலத்தில் பள்ளிப் படிப்பை பாதியில்
நிறுத்தியவர்கள் எத்தனை பேர், வீட்டுக்கு அருகே பள்ளி இல்லாத காரணத்தால்
பள்ளியிலேயே சேராமல் இருக்கும் 5 முதல் 19 வரையிலான குழந்தைகள் எத்தனை
பேர், இவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டு, அனைவருக்கும் கல்வித்
திட்டத்தின் மூலம் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பன உள்ளிட்ட
விவரங்களையும் உடனடியாக சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியிருந்தது.
எஸ்.எஸ்.ஏ. வெளியிட்ட புள்ளி விவரத்துக்கும்,
இப்போது மத்திய ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்துக்கும் மிகப் பெரிய
வித்தியாசம் இருப்பது உயர் அதிகாரிகளிடையே பெரும் குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தெளிவு கிடைக்கும் வகையில், புதிதாக ஆய்வு
நடத்தி கணக்கெடுக்க தொழிலாளர் துறை இப்போது முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய ஆணையம் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை
கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. ஆனால்,
அதன் பிறகும் மூன்று ஆண்டுகளாக குழந்தைத் தொழிலாளர் மீட்புப் பணிகள்
தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இருந்தபோதும், கடந்த மூன்று ஆண்டுகளாக
மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கையை, எஸ்.எஸ்.ஏ. புள்ளிவிவரத்தோடு
கணக்கிட்டு, மத்திய ஆணையத்தின் புள்ளி விவரத்தோடு ஒப்பிட்டுப்
பார்த்தாலும் அதிக அளவில் வித்தியாசம் வருகிறது.
இந்தக் குழப்பத்தைப் போக்கும் வகையில், உண்மை
நிலவரத்தைக் கண்டறிய அந்தந்தப் பகுதிகளில் உள்ள தன்னார்வ அமைப்புகள்
உள்ளிட்ட தனி அமைப்புகள் மூலம் புதிதாக ஆய்வு நடத்தி புள்ளி விவரத்தை
உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பணிகள் தொடங்கப்படும்.
இதுவரை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மூலம் இந்த
ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவர்களில் பெரும்பாலானோர் முழு
ஈடுபாட்டோடு இப்பணியை மேற்கொள்வதில்லை. எனவே, உண்மையான நிலவரம்
கிடைப்பதில்லை.
எனவேதான், தனி அமைப்புகள் மூலம் ஆய்வு நடத்த
இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக திருவண்ணாமலை,
விழுப்புரம், சேலம், தருமபுரி போன்ற மாவட்டங்களில் இந்த ஆய்வு
நடத்தப்படும். பின்னர், குறிப்பிட்ட பிற மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்படும்.
இதன் மூலம் உண்மை நிலவரம் தெரிய வருவதோடு, தெளிவான திட்டமிடலுக்கும்
வழிவகுக்கும் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...