வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் பகிர்ந்த
விவகாரத்தில், தனியார் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து இந்திய ஜனநாயக
வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒசூர் விஜய் வித்யாலயா பள்ளிக்கு அருகில்
திரண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தனியார் பள்ளிகள் கல்வியை
வியாபாரமாக ஆக்கியுள்ளன. முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட
வேண்டும். வழக்கு விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என
முழக்கமிட்டனர்.
தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதற்கிடையில், சர்ச்சைக்குள்ளான ஓசூர்
பரிமளம் மெட்ரிக் பள்ளி, விஜய் வித்யாலயா பள்ளிகளில் கண்காணிப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பள்ளிகளிலும் சேர்த்து 94 தேர்வு அறைகளில்,
அறைக்கு இரண்டு கண்காணிப்பாளர் வீதம் 158 கண்காணிப்பாளர்கள் பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு பணியில் வட்டாட்சியர்களும்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
10 மாணவர்கள் சிக்கினர்:
முன்னதாக, கடந்த வாரத்தில் நடந்த
தேர்வுகளின் போது ஒசூரில் பல்வேறு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10 மாணவர்கள்
காப்பி அடித்ததாக பிடிபட்டனர். அவர்களது விவரங்கள் மாவட்ட முதன்மை கல்வி
அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆட்சியர் எச்சரிக்கை:
பிளஸ் 2 தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க
மாவட்ட கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், இன்று
செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் ராஜேஷ், "கிருஷ்ணகிரி ஒசூர் கல்வி
வட்டத்தில் பிளஸ் 2 தேர்வை கண்காணிக்க ஆட்சியர், வட்டாட்சியர்,
கோட்டாட்சியர் அடங்கிய கண்க்காணிப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்
குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபடும். முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...