இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மூடப்படாது என்றும், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகளை தொடர்ந்து
நடத்தப்போவதில்லை என்று தொழிலாளர் காப்புறுதி திட்ட கழகம் (இ.எஸ்.ஐ.
கார்ப்பரேசன்) கடந்த ஜனவரி மாதம் 5–ந் தேதி அறிவித்தது. மத்திய அரசின் இந்த
அறிவிப்பால் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து பல்வேறு கட்டங்களாக அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில், மருத்துவ கல்லூரிகளை அந்தந்த
மாநில அரசுகளிடம் ஒப்படைக்க இ.எஸ்.ஐ. நிர்வாகத்தினர்
முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி மாதம் 10–ந் தேதி
சென்னை வந்த தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை மத்திய இணை மந்திரி
பண்டாரு தத்தாத்ரேயாவிடம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனு கொடுத்தனர்.
தமிழக அரசு கடிதம்
இந்த பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர
மோடிக்கு, தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 11–ந் தேதி கடிதம்
எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில், ‘‘இ.எஸ்.ஐ. நடத்தும்
மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை வெளியேற்றவும், அங்கு மேலும்
மாணவர் சேர்க்கை நடக்காமல் இருப்பதற்காகவும் எடுக்கப்பட்டுள்ள இந்த கடினமான
முடிவு மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர்களின்
அதிர்ச்சியை போக்குவதற்காக சென்னை மற்றும் கோவையில் இயங்கும் இ.எஸ்.ஐ.
மருத்துவ கல்லூரிகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்வதாக கொள்கை அளவில்
ஒப்புக்கொண்டுள்ளது. தமிழக அரசின் நிபந்தனைகளை சம்பந்தப்பட்ட அமைச்சரை ஏற்க
செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.
மூடப்படாது
இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து
இயங்குமா? என்றும், அங்கு படிக்கும் மாணவர்களின் நிலை என்ன ஆகும்? என்பது
குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்த நிலையில் இ.எஸ்.ஐ. மருத்துவ
கல்லூரிகள் மூடப்படாது என்றும், மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் மத்திய
அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய துணை மருத்துவ ஆணையர்
டாக்டர் விவேக் ஹண்டா, சென்னை, பெங்களூரு, கொல்கத்தாவில் செயல்படும்
இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகளின் முதல்வர் மற்றும் கண்காணிப்பாளர்
ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:–
மாணவர் சேர்க்கை நடைபெறும்
இந்த கல்வி ஆண்டுக்கான இளநிலை மற்றும்
முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். இ.எஸ்.ஐ. மருத்துவ
கல்லூரி மாணவர்களின் நலன் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள ஆணையை வரவேற்கிறோம்.
மாணவர்களின் நலன் கருதி மருத்துவ கல்லூரி தொடர்பான நிலைப்பாட்டை மீண்டும்
பரிசீலனை செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், முதுநிலை
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த கல்வி ஆண்டு
2015–16–க்கான மாணவர் சேர்க்கைக்கான மத்திய மற்றும் மாநில அளவிலான
ஒதுக்கீடுகள் தொடர்பான விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வானதி சீனிவாசன்
இந்த தகவலை சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ.
மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் பா.ஜ.க. துணைத்தலைவர் வானதி சீனிவாசன்
நேற்று தெரிவித்தார். இதையடுத்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆனந்தத்தில்
துள்ளி குதித்தனர்.
இந்த நல்ல முடிவை எடுத்த மத்திய அரசுக்கும்,
மகிழ்ச்சியுடன் தெரிவித்த வானதி சீனிவாசனுக்கும் மருத்துவ கல்லூரி
மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...