நைஜீரியாவைச் சேர்ந்த ஜார்ஜ் இகுஜே ஒபே கடந்த 2003-ம் ஆண்டு ‘பட் சியாரி சிண்ட்ரோம்’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் தாக்கியவர்களுக்கு கல்லீரலில் உள்ள ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு கல்லிரல் வீங்கத் தொடங்கும்.
மனித கல்லீரலின் சராசரி எடையே 1.5 கிலோவாக இருக்கும் நிலையில், ஜார்ஜின் கல்லீரலோ 4.5 கிலோ எடையுடன் நன்கு வீங்கிய நிலையில் இருந்தது. இதனால் அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் நரக வேதனையை அனுபவித்து வந்த ஜார்ஜ் தனது நோய் குணமாக அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளுக்கு மிகவும் கஷ்டப்பட்டு சிகிச்சைக்காக சென்று ஏமாற்றத்துடனே திரும்பினார். காரணம் அவருக்கு இருந்த ‘பட் சியாரி சிண்ட்ரோம்’. இந்நிலையில் கடந்த வருடம் இங்கிலாந்து சென்ற ஜார்ஜூக்கு, அங்கு நடந்த பரிசோதனையின் போதுதான், கல்லீரலிலிருந்து இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ‘ஐவிசி’ என்ற ரத்த நாளம் முழுவதுமாக அடைபட்டிருப்பது தெரிய வந்தது. எனவே புதிய கல்லீரலைப் பொருத்தினாலும் ரத்த நாளத்தில் உள்ள அடைப்பை நீக்க முடியாது என்று கூறி அவரை திருப்பி அனுப்பி விட்டனர்.
எல்லா நம்பிக்கையும் இழந்த ஜார்ஜின் இறுதி நம்பிக்கையாக இருந்தது இந்தியா. உத்திரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள போர்டிஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவரது அனைத்து பிரச்சனைகளையும் தீவிரமாக அலசி ஆராய்ந்த மருத்துவர்களுக்கு தங்கள் முன் இருக்கும் பிரம்மாண்டமான சவாலும், அதில் உள்ள பேராபத்தும் மிகத் தெளிவாகப் புரிந்தது.
சில மருத்துவ நடைமுறைகளுக்குப் பின்னர் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 8 அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர் உட்பட 14 டாக்டர்கள், தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். முதலில் ஜார்ஜின் சகோதரரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரலை அவருக்குப் பொருத்தினர். இது வழக்கமான, அதே நேரம் கொஞ்சம் ஆபத்தான ஒன்றுதான். காரணம் ஜார்ஜூடைய கல்லீரலின் மிதமிஞ்சிய எடை.
ஆனால், உண்மையான ஆபத்து இதற்குப் பின்பாகத்தான் தொடங்கியது. கல்லீரலிலிருந்து இதயத்திற்கு செல்லும் ’ஐவிசி’ நாளம் அடைபட்ட நிலையில் கல்லீரலிலிருந்து வெளியேறும் ரத்தத்தை நேரடியாக இதயத்திற்கு கொண்டு செல்லும் நாளத்தைப் பொருத்துவது. அளவில் மிகச்சிறிய அந்த நாளத்தை இதயத்தின் வலது ஆர்ட்ரியத்துடன் இணைப்பதென்பது மூளை நரம்பு அறுவை சிகிச்சைக்கு இணையானது. அதை உணர்ந்து தீவிரமாக அதே நேரம் மிக மிகத் துல்லியமாக நடத்தப்பட்ட இந்த அரிய வகை கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றியடைந்தது.
14 மணி நேர அயர்ச்சியெல்லாம் எங்கோ ஓடிப்போய் அனைவரது முகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி. மகிழ்ச்சியோடு கொஞ்சம் கர்வமும் கூட, காரணம், இதுபோன்ற அறுவை சிகிச்சை உலகிலேயே இதுவரை 4 பேருக்கு மட்டுமே நடைபெற்றுள்ளது. இது இந்தியாவின் முதல் அறுவை சிகிச்சை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...