கடந்த, 1970களில் ஒரு நாள்... கடலூர் புனித
வளனார் மேல்நிலைப் பள்ளி. 6 ரூபாய் கல்வி கட்டணம் செலுத்தாததால் அந்த
மாணவனை வகுப்பை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார், தலைமை ஆசிரியர்.
வகுப்புகளை பார்வையிட வரும்போது, வெளியே நிற்கும் அந்த மாணவனை அழைக்கிறார்.
'இன்னைக்கு உன் வறுமையை மன்னிச்சு
விட்டுட்டா, நான் உன்னை கெடுத்தவனாகி விடுவேன். அதே காரணத்துக்காக உன்னை
வெளியே அனுப்பிட்டா, உன் படிப்பை கெடுத்தவனாகி விடுவேன். இந்தா, இந்த
பணத்தை அலுவலகத்துல கட்டிடு' எனக் கூறி, கல்வி கட்டணத்தைக் கொடுத்து அவனை
வகுப்பிற்குள் அனுமதிக்கிறார் அவர்.இப்படி, கண்டிப்போடு, கருணையையும்
சேர்த்து தன் மாணவர்களை வழி நடத்தியிருக்கிறார் அந்த தலைமை ஆசிரியர். அன்று
கருணையை பெற்ற மாணவன், இன்று மூத்த இதய நோய் நிபுணர். ஆயிரமாயிரம்
மாணவர்களை உருவாக்கிய அந்த ஆசிரியர், பாதிரியார் பீட்டர்; 92 வயது
கிறித்துவ மதத் துறவி.
குரு - சிஷ்யன்... என்ன மாதிரியான உறவு
இது?சின்ன வயசுல, உங்களுக்கு அறிமுகமாகுற எல்லா உறவுகளும் ரத்த
சம்பந்தப்பட்டவை. ஆனா, ஆசிரியர்ங்கற உறவு மட்டும் தான், வெளியே இருந்து
வருவது. குழந்தை, ஒரு ஆசிரியரை முழுவதுமாக நம்பி, தன்னை அவர்கிட்ட
ஒப்படைக்குது. அவர்தான் அந்த குழந்தையின் வாழ்க்கைக்கான அஸ்திவாரத்தை
தீர்மானிப்பவர். ஒரு நாள் எனக்கு நெஞ்சு வலின்னு இங்கே இருக்குற பத்மாவதி
மருத்துவமனைக்குப் போனேன். வரிசையில காத்துக்கிட்டு இருக்கும்போது,
மருத்துவமனை, 'டிவி' வழியா என்னைப் பார்த்த பெரிய டாக்டர், ஓடி வந்து என்
கையைப் பிடிச்சிக்கிட்டு, 'இது, உங்க ஹாஸ்பிடல் பாதர். நீங்க போய் வரிசையில
வரலாமா...'ன்னு உள்ளே கூட்டிட்டுப் போனார்.அந்த டாக்டர், என்னோட பழைய
மாணவர். எந்த விதமான ஏமாற்றமும், எதிர்பார்ப்பும் இல்லாத ரொம்ப உயர்வான
உறவு அது.
உணர்வுகளில் உறவுகளைச் சொல்லும் இந்த ஆசிரிய
ஏணி, இன்று இளைப்பாறுவது, பாண்டிச்சேரி எம்மா ஓய்வு இல்லத்தில். கல்விப்
பணியிலிருந்து ஓய்வு பெற்று, 20 ஆண்டுகள் ஆன பிறகும், தள்ளாத முதுமையில்,
அதிகாலை, 4:00 மணிக்கே எழுந்து, பொதுத் தேர்வு எழுதப் போகும்,
மாணவர்களுக்காக பிரார்த்தனைக்கு கிளம்பி விடுகிறது, இந்த ஆசிரியரின் மனது.
சென்னை, ராயபுரத்தில் பிறந்த, பாதிரியார்
பீட்டரை, அப்பாவின் ரயில்வே பணி, திருச்சி பொன்மலையில் வளரச் செய்ய,
பள்ளியில் படிக்கும் போதே துறவியாக ஆசைப்பட்டிருக்கிறார்.
பட்டப்படிப்பிற்கு பின், அப்பாவிடம் பிடிவாதத்துடன் போராடி, அதற்கான
சம்மதத்தையும் வாங்கியிருக்கிறார். ஆனால், மக்களுக்கு சேவை செய்ய
நினைத்தவரை, காலம், கல்விச் சேவை செய்ய பணித்திருக்கிறது. தான் படித்த
புனித வளனார் மேல்நிலைப் பள்ளிக்கே, 1961ல் தலைமை ஆசிரியராகி இருக்கிறார்.
தண்டனைகள் மாணவரை திருத்தி விடுமா?நான்
அப்படி நம்பவில்லை. தண்டிக்கப்பட்டவனிடம், 'ஏன் அவனுக்கு தண்டனை
கொடுத்தோம்'ங்கறதை புரிய வைக்கிற அன்பு தான், அவனைத் திருத்தும். எங்க
பள்ளிக் கூடத்தில், விடுதி வார்டனாவும் இருந்தேன். பள்ளி வளாகத்தில்
என்னைப் பார்த்து நடுங்குபவர்கள், விடுதிக்கு வந்துட்டா சந்தோஷமாகிடுவாங்க;
சக மாணவன் மாதிரி நினைச்சு விளையாடுவாங்க. சாப்பிடும் போது, எல்லா
மாணவனும், எனக்கு சோறு ஊட்டி விடுவான். கண்டிக்க மட்டும் செஞ்சிருந்தா,
இந்த அன்பு கிடைச்சிருக்குமா?
பள்ளியில் மதங்களைக் கடந்து, மனிதம்
போதித்திருக்கின்றன, தினமும் இவர் சொன்ன பிரார்த்தனைக் கூட்டத்து, குட்டிக்
கதைகள்! இவரிடம் படித்த பலர், இன்று தென்னகத்தின் பிரபல அடையாளங்கள்.
துறவு, முதுமை, தனிமை... எது ரொம்ப
கஷ்டம்?எல்லாமே கடவுள் தருபவை. துறவு, நான் விரும்பி எடுத்து கொண்டது.
'குடும்பத்தை விலக்கிய துறவு வாழ்க்கை என்பது, முரண்பாடான விஷயம் தான்.
ஆனால் நான் கடவுளையே மணந்து கொண்டேனே! முதுமையும், அது தரும் தனிமையும்
தவிர்க்க முடியாது. எல்லாரையும் மன்னிக்கும் மனம், நம்மிடம் இருக்கும்
போது, முதுமையில் நல்ல நினைவுகள், நம் கூட இருக்கும். இரண்டுமே
வாழ்க்கையில் ஒரு பகுதி; இதில் எதுவுமே கஷ்டம் இல்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...