தொழிற்கல்விப் பாடத்தை மேல்நிலைப்
பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை
நிறைவேற்றக் கோரி, கல்வி மானியக் கோரிக்கை நடைபெறும் நாளில் கவன ஈர்ப்பு
போராட்டம் நடத்துவதென தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்
கழகம் முடிவு செய்துள்ளது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய பல்வேறு
தீர்ப்புகளை ஏற்று, தொகுப்பூதியக் காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க
வேண்டும், வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றுள்ள தொழிற்கல்வி
ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், 2007-ம் ஆண்டு முதல் காலியாக
உள்ள 300 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தியும், பலமுறை
முறையீடுகள் செய்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில்
கல்வி மானியக் கோரிக்கை நடைபெறும் நாளில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது,
அரசுப் பொதுத் தேர்வுகளின்போது பறக்கும்படையினர் துண்டு காகிதங்களைத்
தேர்வெழுதும் மாணவர்களிடமிருந்து பிடித்தால், அறைக் கண்காணிப்பாளர்களை பணி
நீக்கம் செய்ய வேண்டும் என்ற அரசுத் தேர்வுகள் இயக்குநரின் உத்தரவை
திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் த.
ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் செ.நா. ஜனார்த்தனன்,
மாநிலப் பொருளாளர் எஸ். ரங்கநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ். சம்பத்
நாகராஜன், தலைமை நிலையச் செயலர் தி. தாகப்பிள்ளை, மாநில இணைச் செயலர் கே.
ராமசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...